
இந்திய சந்தைக்கான மலிவு விலை 5G ஸ்மார்ட்போனை உருவாக்க, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் கூகுள் நிறுவனமும் இணைந்து செயல்பட உள்ளன.
இதில் இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால்.. ஜியோவும் கூகுளும் சேர்ந்து உருவாக்கும் மலிவு விலை 5G ஸ்மார்ட்போன் ஆனது வளர்ந்து வரும் மற்ற நாடுகளுக்கும் அனுப்பப்படலாம் என்று கூறப்படுகிறது. முன்னதாக ஜியோபோன் நெக்ஸ்ட் என்கிற மலிவு விலை 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் ஆனது ஞாபகம் இருக்கலாம். அந்த ஸ்மார்ட்போன் ஜியோ மற்றும் கூகுளின் கூட்டணியில் உருவானது தான்! ஆனால், அந்த ஸ்மார்ட்போன் சொல்லிக்கொள்ளும்படியான வெற்றியாக மாறவில்லை. ஏனெனில், இதுவரையிலாக எத்தனை ஜியோபோன் நெக்ஸ்ட் 4ஜி ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்கிற தகவலை ஜியோ வெளியிடவே இல்லை.
ஜியோபோன் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் குறித்து எந்த தகவலும் இல்லை. ஆனாலும், இது நிறுவனத்தின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் என்பதால் இது ரூ.10,000 என்கிற விலையில் அறிமுகப்படுத்தப்பட்டால், நிச்சயம் அது மிகப்பெரிய வெற்றியாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்!
ஜியோ மற்றும் கூகுள் நிறுவனங்கள், உண்மையிலேயே 5ஜி போன்களின் மிகப்பெரிய தேவையை பூர்த்தி செய்ய விரும்பினால் ரூ.10,000 என்கிற புள்ளிதான் மிகசிறந்த விலை நிர்ணயமாக இருக்கும். ஏனெனில் மிட்-ரேஞ்ச் அல்லது செமி-மிட்-ரேஞ்ச் பிரிவில் உள்ள 5ஜி ஸ்மார்ட்போன்களை பெரும்பாலான மக்களால் வாங்க முடியாது.
ஜியோ மற்றும் கூகுள், தங்கள் கூட்டாண்மையை 5G ஸ்மார்ட்போனுடன் மட்டும் நிறுத்தவில்லை இந்த 2 நிறுவனங்களும் மேலும் பல விஷயங்களுக்காக இணைந்து செயல்பட உள்ளன. ரிலையன்ஸ் ஜியோ மற்றும் கூகுள் நிறுவனங்கள், தொலைத்தொடர்பு நிறுவனத்தின் 5ஜி சொல்யூஷன்களுக்காகவும் இணைந்து செயல்பட உள்ளன. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் 45-வது ஆண்டு விழாவில், நிறுவனத்தின் தலைவர் மற்றும் எம்டி ஆன முகேஷ் அம்பானி, ஜியோவின் ப்ரைவேட் 5ஜி ஸ்டாக் மற்றும் பிற 5G எனேபிள்டு சொல்யூஷன்களை உள்நாட்டு மற்றும் உலகளாவிய பயனர்களுக்கு வழங்க கூகுள் கிளவுட்டின் மேம்பட்ட திறன்களையும் ஜியோ பயன்படுத்தும் என்று கூறியதை இங்கே குறிப்பிட விரும்புகிறோம்.
இந்நிலையில் கூகுள் நிறுவனம் ஜியோவின் பங்குகளை வைத்துள்ளதும் நினைவுகூரத்தக்கது. கடந்த 2020 ஆம் ஆண்டில், கூகுள் நிறுவனம், ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் லிமிடெட்டில் 7.73% பங்குகளை ரூ.33,737 கோடிக்கு சொந்தமாக்கியது. அதாவது ஜியோ எவ்வளவு லாபம் ஈட்டுகிறதோ, அந்நாளின் முடிவில் கூகுளும் அதிக அளவிலான பணத்தை சம்பாதிக்கும். ஜியோவுடன் மட்டுமல்ல, கூகுள் நிறுவனம், இந்த ஆண்டு தொடக்கத்தில் 700 மில்லியன் டாலர்களுக்கு பார்தி ஏர்டெல் நிறுவனத்திலும் கூட (strategic investment) செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.





