Home List மொபைல்போனில் செய்யும் 6 தவறுகள்!

மொபைல்போனில் செய்யும் 6 தவறுகள்!

ஆயிரங்களில் செலவழித்து நீங்கள் வாங்கிய ஸ்மார்ட்போனில் தெரிந்தோ தெரியாமலோ நீங்கள் செய்யும் 6 தவறுகள் உங்களுக்கும், உங்கள் ஸ்மார்ட்போனிற்கும் ஏற்படுத்தும் பாதிப்புகள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம்!

01. எல்லா சார்ஜரும் ஒண்ணு இல்ல

நம்மில் பலரும், சந்தையில் கிடைக்கும் எல்லா சார்ஜர்களுமே ஒரே மாதிரியானவை என்கிற தவறான கருத்தைக் கொண்டுள்ளோம். உங்கள் ஸ்மார்ட்போனுடன் வந்த, குறிப்பிட்ட பிராண்டின் சார்ஜரை பயன்படுத்தாமல், கையில் கிடைக்கும் எந்தவொரு சார்ஜரையும் எடுத்து பயன்படுத்தினால்.. ஒருகட்டத்தில் (அதிக பட்சமாக) உங்கள் ஸ்மார்ட்போன் தீப்பிடிக்கலாம் அல்லது ஷார்ட் சர்க்யூட் போன்ற ஆபத்துகளை சந்திக்கலாம். உங்கள் ஸ்மார்ட்போனின் ஆயுட்காலம் பாதிப்படையலாம். ஏனேனில், ஒவ்வொரு போனுக்கும் அதன் மின்னோட்ட அளவு மாறுபடும். எனவே எப்போதுமே, உங்கள் ஸ்மார்ட்போனுடன் வரும் சார்ஜரை மட்டுமே பயன்படுத்தவும், இல்லையேல், உங்கள் மொபைலுக்கேற்ற அளவீடுகளோடு வரும் நம்பகமான பிராண்டுகளின் சார்ஜர்களை பயன்படுத்தவும்.

02. கண்ட கண்ட ஆப்களை இன்ஸ்டால் செய்வது!

சிலர் கூகுள் ப்ளே ஸ்டோரில் ஒரு குறிப்பிட்ட ஆப்-ஐ கண்டுபிடிக்க முடியாதபோது, அதேபோன்ற பிற ஆப்களை இன்ஸ்டால் / டவுன்லோட் செய்து பயன்படுத்துவார்கள். கூகுளும் சரி, நாங்களும் சரி, அதிகாரப்பூர்வமற்ற சோர்ஸ்களில் இருந்து கிடைக்கும் ஆப்களையும், மூன்றாம் தரப்பு ஆப்களையும் ஒருபோதும் பரிந்துரைக்க மாட்டோம்! ஏனெனில், மூன்றாம் தரப்பில் இருந்து கிடைக்கும் ஆப்கள் ஆனது உங்கள் ஸ்மார்ட்போனிற்குள் வைரஸ்கள், ஸ்பைவேர்கள் மற்றும் மால்வேர்களை கொண்டு வரலாம் அதன் பிறகு உங்களின் தனிப்பட்ட தகவல், பாஸ்வேர்ட்கள் மற்றும் வங்கி விவரங்கள் என எதற்குமே பாதுகாப்பு இருக்காது! எனவே எப்போதுமே அதிகாரப்பூர்வ ஆப் ஸ்டோர்களில் இருந்து, நல்ல விமர்சனங்களை பெற்றுள்ள ஆப்களை மட்டுமே பதிவிறக்கம் செய்யவும்!

03. ஓஎஸ் அப்டேட் & செக்யூரிட்டி பேட்ச்

பெரும்பாலான மொபைல் பிராண்டுகள் அவ்வப்போது லேட்டஸ்ட் ஓஎஸ் அப்டேட் மற்றும் செக்யூரிட்டி பேட்ச்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன. மால்வேர்கள் மற்றும் அது தொடர்பான பிற ஆபத்துக்களிலிருந்து உங்கள் போனை பாதுகாக்கவும், மேலும் உங்கள் ஸ்மார்ட்போனை “தடுமாற்றம்” இல்லாமல் இயங்க வைக்கவும், லேட்டஸ்ட் அப்டேட்கள் மிகவும் முக்கியம்! அவைகளை ஒருபோதும் புறக்கணிக்க வேண்டாம்; புறக்கணிக்கவும் கூடாது!

04. ஆப் அப்டேட்டும் முக்கியம்

உங்கள் ஸ்மார்ட்போன் சீராகவும், பாதுகாப்பாகவும் இயங்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள ஆப்களுக்கு எப்போதெல்லாம் அப்டேட் கிடைக்கிறதோ.. அப்போதெல்லாம் அப்டேட் செய்யவும்! ஆப்களுக்கு கிடைக்கும் அப்டேட்ஸ் ஆனது யூசர் எக்ஸ்பீரியன்ஸை மேம்படுத்துவதில் மட்டும் கவனம் செலுத்தாமல், புதிதாகக் கண்டறியப்பட்ட “பாதிப்புகளையும்” சரி செய்யும் என்பதை மறக்க வேண்டாம்!

05. பப்ளிக் வைஃபை

உண்மையில் பப்ளிக் வைஃபை நெட்வொர்க்குகள் – ஒரு வரம்; அதே சமயம் – அது ஒரு பெரிய பாதுகாப்பு அபாயமும் கூட! ஏனெனில் உங்களை போலவே பப்ளிக் வைஃபை நெட்வொர்க்குகளை ஹேக்கர்களாலும் அணுக முடியும். அதுமட்டுமின்றி, பப்ளிக் வைஃபை நெட்வொர்க்குகள் மூலம் அனுப்பப்படும் தகவல்களை அவர்களால் மிகவும் எளிதாக பார்க்கவோ, திருடவோ முடியும்! நீங்கள் பப்ளிக் வைஃபை நெட்வொர்க்கை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை வந்தால், இன்டர்நெட் உடன் கனெக்ட் ஆக, நீங்களொரு VPN-ஐ பயன்படுத்துகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். விபிஎன் எனப்படும் விர்ச்சுவல் பிரைவேட் நெட்வொர்க்குகள் (Virtual Private Networks) ஆனது, பப்ளிக் நெட்வொர்க்குகளில் கூட (நீங்கள் நுழையும்) இணையதளங்களை பாதுகாப்பானதாக மாற்ற உதவும் ஒரு எளிமையான தீர்வு ஆகும். இருப்பினும், முடிந்தவரை மொபைல் டேட்டாவை மட்டுமே பயன்படுத்துங்கள்!

06. பேக் கவர் மற்றும் டேம்பர் கேஸ்

புத்தம் புதிய ஸ்மார்ட்போனை கீழே போட்டு உடைத்தவர்களிடம் கேளுங்கள் – பேக் கவர் அல்லது மொபைல் கேஸின் முக்கியத்துவம் என்ன என்று? இது ஒரு சிறிய தவறு தான்.. ஆனால் பெரிய அளவிலான சேதத்தை ஏற்படுத்த வல்லது என்பது தெரிந்தும் கூட நம்மில் சிலர் பேக் கவர் அல்லது மொபைல் கேஸை புறக்கணிக்கிறோம்! இரண்டாவது நீங்கள் வாங்கும் பேக் கவர் அல்லது டேம்பர் கேஸின் தரத்திலும் கூட அதிக கவனம் செலுத்த வேண்டும். பார்க்க ஸ்டைல் ஆக இருக்கிறது என்பதற்காக மட்டமான தயாரிப்பை வாங்க வேண்டாம்.