இந்தியாவில் வெளியாகிறது ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார்


ஹூண்டாய் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான கவனத்தை அதிகப்படுத்தி இருக்கிறது. இந்திய சந்தையிலும் ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார் மாடல்கள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்பட இருக்கிறது.

ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனம் இந்திய சந்தையில் கோனா எலெக்ட்ரிக் கார் மாடலை ஏற்கனவே விற்பனை செய்து வருகிறது. எதிர்காலத்தில் இதே காரின் பேஸ்லிப்ட் மாடலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

5 சீட்டர் மாடலான ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக், பிரீமியம் பிரிவில் அறிமுகமாகி இருக்கிறது. கோனா எலெக்ட்ரிக் மாடலை தொடர்ந்து ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் தனது இரண்டாவது எலெக்ட்ரிக் கார் மாடலை அறிமுகம் செய்ய தயாராகிவிட்டது. அதன்படி ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம் ஆக இருக்கிறது. இந்த வாரம் புதிய டக்சன் மாடலை தொடர்ந்து புதிய எலெக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

கியா EV6 போன்று இல்லாமல், ஐயோனிக் 5 மாடல் செமி நாக்டு-டவுன் முறையில் இங்கு கொண்டுவரப்படுகிறது. கியா EV6 போன்றே ஐயோனிக் 5 மாடலும் E-GMP பிளாட்பார்மில் உருவாக்கப்படுகிறது. சமீபத்தில் தான் இந்த கார் 2022 ஆண்டுக்கான சிறந்த கார் என்ற விருதை வென்று இருந்தது.

2028 வாக்கில் இந்தியாவில் ஆறு புதிய எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய ஹூண்டாய் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. எலெக்ட்ரிக் வாகன சந்தையை பொருத்தவரை டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் EV மாடல் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இது மட்டுமின்றி மஹிந்திரா நிறுவனமும் எலெக்ட்ரிக் வாகன பிரிவில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது.
மஹிந்திரா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் XUV400 மாடல் இந்தியாவில் தொடர்ந்து சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்திய சந்தையில் புதிய XUV400 எலெக்ட்ரிக் காரை செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

புது எலெக்ட்ரிக் கார் தவிர மஹிந்திரா நிறுவனத்தின் எதிர்கால எலெக்ட்ரிக் கார் மாடல்கள் EV கோ நிறுவனத்தின் கீழ் விற்பனைக்கு வரும் எனத் தெரிகிறது. புது நிறுவனத்தை உருவாக்க மஹிந்திரா மற்றும் ப்ரிடிஷ் இண்டர்நேஷனல் இன்வெஸ்ட்மெண்ட் நிறுவனங்கள் இடையே ஒப்பந்தமும் கையெழுத்தாகி இருக்கிறது. இதை அடுத்து இரு நிறுவனங்களும் ரூ. 1,925 கோடியை புது நிறுவனத்தில் முதலீடு செய்ய உள்ளன. புதிய XUV400 எலெக்ட்ரிக் அறிமுகமாகும் முன் ஆகஸ்ட் 15 ஆம் தேதி மஹிந்திரா நிறுவனம் மூன்று எலெக்ட்ரிக் எஸ்யுவிக்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.

மஹிந்திரா நிறுவனம் 2020 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் தனது XUV400 எலெக்ட்ரிக் மாடலை காட்சிப்படுத்தி இருந்தது. இதனையடுத்து சமீபத்தில் மஹிந்திரா வெளியிட்ட தகவல்களின் படி புதிய XUV400 எலெக்ட்ரிக் மாடல் 4 மீட்டர்களை விட பெரியதாக இருக்கும் எனத் தெரியவருகிறது. தற்போதைய ஸ்பை படங்களில் மஹிந்திரா XUV400 மாடல் தற்போதைய எஸ்யுவி மாடல்களை விட வேறுபட்டதாகக் காட்சியளிக்கிறது. இந்த காரின் மெல்லிய LED ஹெட்லைட்களின் உள்புறமாக டிஆர்எல்கள் பொருத்தப்பட்டு உள்ளன. காரின் முன்புற கிரில் பகுதி மூடப்பட்டு இருக்கிறது. இத்துடன் பெரிய செண்ட்ரல் ஏர் இண்டேக் உள்ளது. இது 2020 கான்செப்ட் மாடலில் வழங்கப்படாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த கார் சங்யங் டிவோலி பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.