இந்தியாவில் 4ஜி சேவைகள் அறிமுகமான நாள் முதல், சமீபத்தில் நடந்து முடிந்த 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் வரை ஏர்டெல் Vs ஜியோ என்கிற போட்டி நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே தான் போகிறது!
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும், பார்தி ஏர்டெல் நிறுவனமும் போட்டி போட்டு, மாறி-மாறி அதிரடி திட்டங்களையும், சலுகைகளையும் வழங்குவது வாடிக்கையாளர்களான நமக்கு லாபம் தான். இந்த “லாபம்” 5ஜி நெட்வொர்க்கின் கீழும் நமக்கு கிடைக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.
5ஜி சேவையை பொருத்தவரை யார் முதலில் தொடங்குகிறார்கள்? எந்த மாதிரியான விலையை நிர்ணயம் செய்கிறார்கள் என்பதைப் பொறுத்தே வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவர்!
எடுத்துக்காட்டாக, முதலில் ஏர்டெல் நிறுவனம் 5ஜி சேவையைத் தொடங்கி, அதன் 5ஜி ரீசார்ஜ் திட்டங்களின் விலைகளை அறிவித்த பின்னர், ஜியோ அதன் 5ஜி சேவைகளை அறிமுகம் செய்து, ஏர்டெல் நிறுவனத்தின் 5ஜி திட்டங்களை விட மலிவான விலைக்கு 5ஜி திட்டங்களை வழங்கினால் ஏர்டெல் நிறுவனம் தடுமாற ஆரம்பிக்கும். எனவே தான் யார் முதலில் தொடங்குகிறார்கள்? என்ன மாதிரியான விலைகளின் கீழ் 5ஜி திட்டங்களை அறிமுகம் செய்கிறார்கள் என்பது மிகவும் முக்கியமான வியாபார தந்திரமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஏர்டெல் நிறுவனத்தின் “5ஜி ரகசியம்” ஒன்றை ஏர்டெல் அதிகாரி ஒருவர் வெளிப்படுத்தி இருக்கிறார். கடந்த வாரம், பார்தி ஏர்டெல் நிறுவனமானது எரிக்சன், நோக்கியா மற்றும் சாம்சங் நிறுவனங்களுடன் 5ஜி நெட்வொர்க் தொடர்பான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது. அதனை தொடர்ந்து ஏர்டெல் நிறுவனத்தின் 5ஜி சேவையானது இந்த ஆகஸ்ட் மாதத்திலேயே அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போதைக்கு ஏர்டெல் நிறுவனமானது, இந்தியாவில் உள்ள 5,000 நகரங்களில் தான் 5ஜி நெட்வொர்க்கை வெளியிடுமாம். பான்-இந்தியா அடிப்படையிலான 5ஜி சேவையானது, அதாவது இந்தியா முழுவதுமான 5ஜி சேவையானது அடுத்த 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் தான் வெளியிடப்படுமாம். இந்த தகவலை ஏர்டெல் நிறுவனத்தின் எம்.டி ஆன கோபால் விட்டல் தெரிவித்து உள்ளார்.
ஆகஸ்ட் மாதம் தொடங்கி 5G சேவைகளை அறிமுகப்படுத்த நாங்கள் உத்தேசித்துள்ளோம். மார்ச் 2024 க்குள், ஒவ்வொரு நகரத்தையும், முக்கிய கிராமப்புறங்களையும் 5G மூலம் இணைப்போம் என்று நாங்கள் நம்புகிறோம். இந்தியால் உள்ள 5,000 நகரங்களுக்கான விரிவான நெட்வொர்க் வெளியீட்டை நடைமுறைப்படுத்த தயாராக உள்ளோம்” என்றும் கோபால் விட்டல் கூறி உள்ளார்!
ஆக, ஒருவேளை நீங்கள் ஏர்டெல் 5ஜி சேவையானது ‘ஒரே இரவில்’ நாடு முழுவதும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தால், உங்களின் ஜியோ சிம் கார்ட்டை எடுத்து ரெடியாக வைத்து கொள்ளவும், ஏனெனில் ஏர்டெல் 5ஜி-க்கு முன்பாகவே ஜியோ 5ஜி அறிமுகமாகும் எனத் தெரிகிறது!
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது தனது 5ஜி நெட்வொர்க்கை, 2022 சுதந்திர தினத்தன்று, அதாவது வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியிடலாம் என்று ஊகங்கள் உள்ளன. இதற்கிடையில், வருகிற செப்டம்பர் 29 ஆம் தேதி நடக்கும் இந்திய மொபைல் காங்கிரஸ் (IMC) 2022 நிகழ்ச்சியின் தொடக்க விழாவின் போது பிரதமர் பிரதமர் நரேந்திர மோடி, 5G நெட்வொர்க்கை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் எது நடந்தாலும், 5ஜி ரீசார்ஜ் திட்டங்கள் ஆனது 4ஜி ரீசார்ஜ் திட்டங்களை விட 10 – 15% வரை விலை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் 5ஜி சேவைகளை அனுபவிக்க உங்களிடம் 5ஜி ஸ்மார்ட்போனும் இருக்க வேண்டும்.






