டில்லியில் விரைவில் Vi 5G!

டெல்லியில் உள்ள வோடபோன் ஐடியா பயனர்களுக்கு அதன் 5ஜி சேவை விரைவில் கிடைக்கும் என்று அதிரடியாக அறிவித்துள்ளது.

“குட் நியூஸ்! Vi நெட்வொர்க் 5G சேவைக்கு மேம்படுத்தப்படுகிறது! உங்கள் நெட்வொர்க் அனுபவம் இப்போது சிறப்பானதாக இருக்கும், விரைவில் எங்கள் Vi நெட்வொர்க் மூலம் டெல்லி-NCR இல் சிறந்த கவரேஜ் மற்றும் அதிவேக இணையச் சேவையை அனுபவிப்பீர்கள்” என்ற ஒரு அறிவிப்பு டில்லியில் உள்ள Vi பயனர்களுக்கு இன்று காலை அனுப்பப்பட்டு இருக்கிறது.

5ஜி சேவைக்காக Vi நீண்ட காலமாக என்ன செய்து வருகிறது தெரியுமா?

உண்மையைச் சொல்லப் போனால், ஜியோ போல Vi நிறுவனமும் 5ஜி சேவையைச் சரியான நேரத்தில் அறிமுகப்படுத்தத் தேவையான அனைத்து வேலைகளையும் நீண்ட காலமாகச் செய்து வருகிறது. குறிப்பாக, சில காலத்திற்கு முன்பே, தொலைத்தொடர்பு நிறுவனம் அதன் 5G வெளியீட்டிற்கு தேவையான உபகரணங்களுக்காக நோக்கியா மற்றும் எரிக்சன் போன்ற நிறுவனங்களுடன் கூட்டுச் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. Vi நிறுவனம் பல்வேறு இடங்களில் பல சோதனைகளை நடத்தியது.

5ஜி சோதனையில் Vi எவ்வளவு வேகத்தை எட்டியது?

எரிக்சனின் சமீபத்திய சாப்ட்வேர்களைப் பயன்படுத்தி புனேவில் 5.92Gbps வேகத்துடன் நிறுவனம் சோதனையை வெற்றிகரமாக முடித்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது. இந்தியாவில் 5G ஏலம் முடிந்ததும், 5ஜி நெட்வொர்க் சேவைகள் இந்த மாதம் இறுதிக்குள் தொடங்கப்படும் என்று கூறப்பட்டது. அரசு அறிவிப்பின் படி 5ஜி சேவை அக்டோபர் மாதத்திற்குள் பயன்பாட்டுக்கு வரும் என்றும் கூறப்பட்டது.

டில்லியில் 5ஜி சேவையை எப்போது எதிர்பார்க்கலாம்?

அதேபோல், சுதந்திர தினத்தன்று வெளியான தகவல் படி, வரும் செப்டம்பர் 29 ஆம் தேதி நடைபெறும் இந்தியன் மொபைல் காங்கிரஸ் 2022 இல் பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் 5G சேவைகளை அறிமுகம் செய்வார் என்று கூறப்பட்டுள்ளது. டில்லியில் 5ஜி சேவையை எப்போது எதிர்பார்க்கலாம் என்ற துல்லியமான தேதியை Vi அறிவிக்கவில்லை. ஆனால், இது விரைவில் அக்டோபர் இறுதிக்குள் தொடங்கப்படும் என்பது மட்டும் இப்போது உறுதியாகியுள்ளது.

12 நகரங்களில் 5ஜி சேவை விரைவில் அறிமுகம்

நம்முடைய கணிப்பின் படி, அக்டோபர் மாத இறுதிக்குள் இது வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லியைத் தவிர, பெங்களூரு, சண்டிகர், காந்திநகர், அகமதாபாத், குருகிராம், மும்பை, புனே ஹைதராபாத், சென்னை, ஜாம்நகர், கொல்கத்தா மற்றும் லக்னோ போன்ற 12 நகரங்களிலும் 5ஜி சேவை விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

5ஜி பயன்படுத்த புது சிம் கார்டு தேவையா?

டெலிகாம் நிறுவனங்கள் அதன் 5ஜி சேவையை, NSA 5G தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தான் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொழில்நுட்பத்தில் 5ஜி சேவை செயல்படும் வரை, 5ஜி சேவையின் வேகத்தை அனுபவிக்க உங்களுக்கு ஒரு பிரத்தியேகமான 5G சிம் கார்டு தேவைப்படாது என்பதே உண்மை. இருப்பினும், இந்த புதிய 5வது தலைமுறை நெட்வொர்க்கை முழுமையான வேகத்தில் பயன்படுத்த உங்களுக்கு 5G மொபைல் / சாதனம் தேவைப்படும்.