உங்களிடமோ, உங்கள் யாரேனும் ஒப்போ மாடலை பயன்படுத்துகிறார்கள் என்றாலும் சரி.. அல்லது நீங்கள் அடுத்ததாக வாங்க போகும் புதிய போன் OPPO பிராண்ட் ஆக இருந்தாலும் சரி.. இந்த கட்டுரை உங்களுக்கானது தான்!
தற்போது ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் மொபைல் ஹேண்ட்செட்களுடன் சார்ஜர் அனுப்புவதை “மெல்ல மெல்ல” நிறுத்தி வருகிறது. அதாவது நீங்கள் ஒரு புதிய ஸ்மார்ட்போனை வாங்கினால், அந்த ஸ்மார்ட்போனோடு வரும் ரீடெயில் பாக்ஸில் சார்ஜர் இருக்காது!
நிறைய ஸ்மார்ட்போன் பிராண்டுகள் தத்தம் புதிய ஸ்மார்ட்போன்களுடன் சார்ஜர்களை ‘ஸ்கிப்’ செய்கிறது. (புறக்கணிக்கும்) அதே நேரத்தில் இந்த போக்கைப் பின்பற்றாத சில உற்பத்தியாளர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். அந்த பட்டியலில் உள்ள ஒரு நிறுவனம் தான் – ஒப்போ. இந்நிறுவனம் இன்னுமும் ரீடெயில் பாக்ஸ்களில் சார்ஜர்களை பேக் செய்து, கொடுத்து வருகிறது; ஆனால் அது விரைவில் மாற உள்ளது.
ஆம்! இனி நீங்கள் ஒரு புதிய ஒப்போ ஸ்மார்ட்போனை வாங்க திட்டமிட்டால், அந்த ஸ்மார்ட்போனின் ரீடெயில் பாக்ஸில் சார்ஜர் இல்லாமல் போக நிறைய வாய்ப்பு உள்ளது. இன்னும் சில காலங்களுக்கு, நீங்கள் ஆர்டர் செய்யும் ஒப்போ ஸ்மார்ட்போனில் மட்டுமே சார்ஜர் இருக்க அதிக வாய்ப்புள்ளது. ஆனால் கூடிய விரைவில் இந்த போக்கு மாறும்!
ஆண்ட்ராய்டு போலீஸ் வழியாக வெளியான சமீபத்திய அறிக்கையின்படி, ஒப்போ நிறுவனம் அடுத்த ஆண்டு, அதாவது 2023 ஆம் ஆண்டு முதல் தன் ஸ்மார்ட்போன்களுடன் சார்ஜர்களை அனுப்புவதை நிறுத்த உள்ளது. இது “கிட்டத்தட்ட” அதிகாரப்பூர்வமான ஒரு தகவல் ஆகும். ஏனெனில் இந்த தகவல் ஓப்போ நிறுவனத்தின் வெளிநாட்டு விற்பனை மற்றும் சேவைகளின் துணைத் தலைவர் ஆன பில்லி ஜாங்கிடம் இருந்து வந்துள்ளது!
எந்தெந்த ஸ்மார்ட்போன்களில் சார்ஜர்கள் ‘கட்’ செய்யப்படும்? என்ற கேள்விக்கு, ஒப்போ நிறுவனமானது, அதன் பல தயாரிப்புகளில் இருந்து சார்ஜர்களை அகற்றும் என்று கூறுகிறது. அதாவது ஒப்போ நிறுவனத்தின் எல்லா தயாரிப்புகளிலுமே சார்ஜர்கள் நீக்கப்படாது என்று அர்த்தம்! ஆக வரவிருக்கும் நாட்களில், எந்தெந்த ஸ்மார்ட்போன்களுடன் சார்ஜர்கள் அனுப்பப்படாது என்பதை இப்போதைக்கு கணிக்க முடியாது.
மற்ற எல்லா உற்பத்தியாளர்களும் தத்தம் சார்ஜர்களை அகற்றும் போது, ஒப்போ நிறுவனம் ஏன் இன்னும் சார்ஜர்களை அகற்றவில்லை என்கிற கேள்விக்கு – “நுகர்வோர்களால் SuperVOOC சார்ஜர்களை அவ்வளவு எளிதாக அணுக முடியாது. எனவே நாங்கள் அதை பாக்ஸில் வைத்திருப்பதை உறுதி செய்வோம்” என்று ஒப்போ பதில் அளித்துள்ளது. ஆக இப்போதைக்கு SuperVOOC சார்ஜர்களுக்கு எந்த சிக்கலும் இல்லை என்பதை வெளிப்படையாக அறிந்துகொள்ள முடிகிறது!
ஒரு ஸ்மார்ட்போனின் ரீடெயில் பாக்ஸில் இருந்து சார்ஜர் நீக்கப்படும் பட்சத்தில், கைவசம் பழைய சார்ஜரை கொண்டிருக்காதவர்கள், புதிய சார்ஜரை கடையில் இருந்து தான் வாங்க வேண்டும். இதை நாங்கள் சொல்லவில்லை, ஒப்போவே சொல்கிறது! “எங்கள் வணிக நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதால், நாங்கள் சார்ஜர்களை பெட்டியிலிருந்து எடுத்து, அவைகளை கடைகளின் வழியாக விற்பனை செய்வோம். இதனால் எங்கள் வாடிக்கையாளர்கள் புதிய சார்ஜர்களை வாங்கலாம் மற்றும் அவர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களை மேம்படுத்தும்போதும் கூட அவற்றை தொடர்ந்து பயன்படுத்த முடியும்” என்று ஒப்போ கூறி உள்ளது!
ஒப்போவின் இந்த “சார்ஜர் நீக்கம்” தொடர்பான இந்த நடவடிக்கையில் இன்னொரு சுவாரசியமான விஷயமும் உள்ளது. அது என்னவென்றால் – இந்நிறுவனம் எல்லா இடங்களிலும் சார்ஜர்களை அகற்றாது. ஏற்கனவே வலுவான ரீடெயில் விற்பனையைக் கொண்டு இருக்கும் சந்தைகளில் மட்டுமே “இந்த நடவடிக்கை” இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது






