5G அப்டேட்டை பெற இருக்கும் 13 ஐபோன் மாடல்கள்

இந்தியாவில் சென்ற மாதம், ஏர்டெல், ஜியோ மற்றும் விஐ ஆகியவை நாட்டில் 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்தின. இதனைடுத்து நாட்டின் சில பகுதிகளில் 5G சேவைகளை வழங்கவும் துவங்கியுள்ளது. இருப்பினும், 5G இணைப்பை இயக்க, ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் தகுதியான சாதனங்களுக்கான 5G ஃபார்ம்வேர் அப்டேட்களை (5G Firmware update) வெளியிட வேண்டியதுள்ளது.

ஐபோன்களில் 5ஜி

குறிப்பாக, ஆப்பிள் ஐபோன் போன்ற பிரீமியம் ஸ்மார்ட்போன் மாடல்களை வைத்துள்ள இந்தியப் பயனர்களுக்கு இந்த அப்டேட் மிகவும் முக்கியமானது. சில வாரங்களுக்கு முன்பு, 5ஜி-க்கு தகுதியான ஐபோன்கள் டிசம்பர் மாதத்தில் ஃபார்ம்வேர் அப்டேட்டைப் பெறும் என்பதை நிறுவனம் உறுதிப்படுத்தியது. இந்த அப்டேட் கிடைத்தால் மட்டுமே ஐபோன் பயனர்களால் 5G இணைப்பைச் செயல்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

13 ஐபோன் மாடல்களுக்கு 5G அப்டேட்!

இந்தியாவில் கிடைக்கும் மொத்தம் 13 ஆப்பிள் ஐபோன் மாடல்கள் 5G இணைப்பை ஆதரிக்கின்றன. இருப்பினும், இந்த 13 மாடல்களும் உரிய 5G Firmware update -ஐ பெற்ற பிறகு மட்டுமே 5ஜி இணைப்பைப் பயன்படுத்த அனுமதிக்கும் என்பதனால், ஐபோன் பயனர்கள் காத்திருந்தனர். சில ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் மாடல்களில் இப்போது 5ஜி சேவை கிடைக்கிறது.

ஃபார்ம்வேர் அப்டேட்

ஐபோன் பயனர்கள் டிசம்பர் வரை காத்திருக்க வேண்டியதுள்ளதால் கடுப்பில் இருந்து வந்தனர். சமீபத்தில் வெளியான புதிய தகவலின்படி, ஆப்பிள் இந்தியாவில் விரைவில் ஐபோன்களில் 5ஜியை சோதிக்க உள்ளது என்பது தெரிய வந்துள்ளது. ஆப்பிள் நிறுவனம் அடுத்த வாரம் ஒரு ஃபார்ம்வேர் அப்டேட்டை வெளியிட திட்டமிட்டுள்ளது. இது தகுதியான மாடல்களில் 5G இணைப்பை செயல்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் வெளிவருகிறதா?

iOS 16 பீட்டா திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த அப்டேட் வெளியிடப்படும் என்பதை வாசகர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, இது அவர்களின் ஐபோன்களில் iOS 16.1 பீட்டாவை இயக்கும் பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. iOS 16 பொது பீட்டா ஃபார்ம்வேர் வெளியீடு குறித்து ஆப்பிள் நிர்வாகிகள் விரைவில் தொலைத்தொடர்புத் துறை உறுப்பினர்கள், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) உடன் பகிரும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஏர்டெல் 5ஜி பிளஸ் & ஜியோ ட்ரூ 5ஜி

ஏர்டெல் 5ஜி பிளஸ் மற்றும் ஜியோ ட்ரூ 5ஜி ஆகிய இரண்டிற்கும் ஆப்பிள் வரவிருக்கும் iOS 16 பொது பீட்டா அப்டேட் மூலம் ஆதரவை வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது. டெல்லி, குருகிராம், ஹைதராபாத், பெங்களூர், சென்னை, மும்பை, கொல்கத்தா மற்றும் வாரணாசி உள்ளிட்ட 8 நகரங்களில் ஏர்டெல் 5ஜி பிளஸ் சேவைகள் ஆரம்பகால அணுகலின் ஒரு பகுதியாக இப்போது கிடைக்கின்றன. ஏர்டெல்லின் மிகப் பெரிய போட்டியாளரான ஜியோ தனது ட்ரூ 5ஜி சேவையை நான்கு நகரங்களில் கிடைக்கச் செய்துள்ளது. இந்த பட்டியலில் டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் வாரணாசி ஆகியவை அடங்கும்.

அந்த 13 மாடல்கள்

எந்தெந்த ஐபோன் மாடல்களில் இந்த புதிய 5Gஅப்டேட் கிடைக்கப்பெறும் என்ற முழு விபரத்தை இப்போது பார்க்கலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள iPhone மாடல்களின் பட்டியலில் உங்கள் ஐபோன் மாடல் இருக்கிறதா பார்த்துக் கொள்ளுங்கள்.
ஐபோன் 12 மினி (iPhone 12 Mini)
ஐபோன் 12 (iPhone 12)
ஐபோன் 12 ப்ரோ (iPhone 12 Pro)
ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் (iPhone 12 Pro Max)
ஐபோன் 13 மினி (iPhone 13 Mini)
ஐபோன் 13 (iPhone 13)
ஐபோன் 13 ப்ரோ (iPhone 13 Pro)
ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் (iPhone 13 Pro Max)
ஐபோன் 14 (iPhone 14)
ஐபோன் 14 பிளஸ் (iPhone 14 Plus)
ஐபோன் 14 ப்ரோ (iPhone 14 Pro)
ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் (iPhone 14 Pro Max)
ஐபோன் எஸ்இ 3வது ஜென் (iPhone SE 3rd Generation)
இந்த 13 மாடல்களும் இந்த புதிய 5ஜி ஃபார்ம்வேர் அப்டேட்டை பெற இருக்கின்றன.