கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 2014-ம் ஆண்டு மதுரையை களமாக கொண்டு உருவாகிய படம் ஜிகர்தண்டா. சித்தார்த் கதாநாயகனாக நடித்த இந்த படத்தில் லட்சுமி மேனன் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா நடித்திருந்தார். இந்த படத்துக்காக 2014-ம் ஆண்டின் தேசிய விருதை பாபி சிம்ஹா பெற்றார்.
பலரின் பாராட்டுக்களையும்,நல்ல வரவேற்பையும் பெற்ற ஜிகர்தண்டா திரைப்படம் வெளியாகி 8 வருடங்களை நிறைவு செய்துள்ளது. சில வாரங்களுக்கு முன்பு இதனை நினைவு கூர்ந்து ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பை கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்டிருந்தார். அதன்படி இப்படம் விரைவில் தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ஜிகர்தண்டா-2 படத்தில் நடிக்கவுள்ள நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நடிகர் ராகவா லாரன்ஸ் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா இப்படத்தில் நடிக்கயிருப்பதாக தகவல் வெளியானது. மேலும், இப்படத்தின் பூஜை மதுரையில் வருகிற டிசம்பர் 11-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘துணிவு’ படம் பொங்கல் பண்டிகையில் திரைக்கு வர உள்ளது. இதில் மஞ்சுவாரியர் கதாநாயகியாக நடித்துள்ளார். சமுத்திரக்கனி போலீஸ் அதிகாரியாக வருகிறார். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தில் மூன்று பாடல்கள் இடம்பெற்று உள்ளன. துணிவு படத்தில் இடம்பெற்றுள்ள ‘சில்லா சில்லா’ என்று தொடங்கும் பாடல் நாளை (9-ந் தேதி) வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்து இருந்தனர். அனிருத் பாடி இருந்த இந்த பாடலை ரசிகர்கள் கேட்க ஆர்வமாக இருந்தனர்.
இந்நிலையில் ‘சில்லா சில்லா’ பாடல் இணையதளத்தில் திருட்டுத்தனமாக கசிந்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாடலை வெளியிட்டவரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க விசாரணை நடந்து வருகிறது. மக்கள் சில்லா சில்லா பாடலை பகிரவேண்டாம் என்று படக்குழுவினரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தமிழின் முன்னனி இயக்குனர்களில் ஒருவரான வெற்றிமாறன், தற்போது ‘விடுதலை’ படத்தை இயக்கி வருகிறார். இதனை தொடர்ந்து நடிகர் சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ படத்தை இயக்க உள்ளார். இதனிடையே பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், வெற்றிமாறன் இயக்கவுள்ள புதிய வெப் தொடரில் பணியாற்றவுள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “வெற்றிமாறன் அடுத்ததாக ஒரு வெப் தொடரை எழுதி, அதனை தயாரிக்க உள்ளார். அதில், நான் பணியாற்ற உள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே வெற்றிமாறன் தயாரித்த பேட்டைக்காளி வெப் தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
