

இம்முறை 28 பிரிவுகளில், 150க்கும் மேற்பட்ட பரிந்துரைகள்!
இதில் சிறந்ததை தேர்ந்தெடுத்தெடுக்க.. 18 நடுவர்கள், 13 சமூக வலைதள பங்காளர்கள், 35க்கும் அதிகமான பங்கெடுப்பாளர்கள், தலைசிறந்த தொழில்நுட்ப வல்லுனர்கள், முன்னணி விமர்சகர்கள் ஆகியோர் தேர்ந்தெடுத்தனர். இவை தவிர, பயனாளர்களின் விருப்ப விருது (Users’ Choice awards) என 4 விருதுகளும் வழங்கப்பட்டன.
சிறந்த போன் 2022 (ரூ.15,000க்கு கீழ்)
சென்ற ஆண்டின் இறுதியிலேயே இந்தியாவில் 5ஜி அறிமுகமானது. ஆனால், அதை வரவேற்கத் தயாராக 5ஜி மொபைல்கள் அதற்கு முன்பே வரத் துவங்கி இருந்தன. அதுவும் குறைந்த விலையில். முதன்முறை ஆண்ட்ராய்டு போனை உபயோகிப்பவர்களும் சிறந்ததை வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இங்கு 5ஜி போன்களே பரிந்துரைக்கப்பட்டு இருந்தன. அதில் சிறந்த பட்ஜெட் போனாக ‘Motorola Moto G62 5G’ தேர்ந்தெடுக்கப்பட்டது..
சிறந்த போன் 2022 (ரூ. 30,000க்கு கீழ்)
இந்த விலைப்பிரிவு கொஞ்சம் சவாலான விலைப்பிரிவு. ஏனெனில், விலை சற்று அதிகம் தர தயாராக இருந்தாலும், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பும் ஏகத்திற்கு இருக்கும். கிட்டத்தட்ட உயர் விலைப்பிரிவு மொபைல்களில் இருக்கும் எல்லா வசதிகளையும் எதிர்பார்பார்ப்பார்கள். ஆனால், இந்த வாடிக்கையாளரை ஒரு நிறுவனம் திருப்திபடுத்திவிட்டால், அதுதான் அவ்வருடத்தின் நம்பர் ஒன் நிறுவனமாக இருக்கும். அதனால் போட்டியும் இந்தப் பிரிவுக்கு கடுமையாகவே இருந்தது. இதில் கலந்து கொண்ட மொபைல்களில் வெற்றி பெற்றது.. ‘OnePlus Nord 2T 5G’.
சிறந்த போன் 2022 (ரூ. 50,000க்கு கீழ்)
ஒவ்வொரு நிறுவனமும் தங்களது சிறந்த போனை இந்த விலைப்பிரிவிலேயே தயாரித்து வைத்திருக்கும். ‘ஃப்ளாக்ஷிப்’ என்ற அடைமொழியில் அழைக்கப்படும் இந்த மொபைல்கள், புதிய தொழில்நுட்பம், மேம்பட்ட பாகங்கள், அதிகபட்ச தரம்.. என, எல்லாவற்றிலும் சிறந்ததாக இருக்கும். அப்படி ‘சிறந்ததில் மிகச்சிறந்ததாக’ தேர்வானது ‘iQOO 9T’.
சிறந்த செஃல்பி போன் 2022 – மெயின்ஸ்ட்ரீம் (ரூ.30,000க்கு கீழ்)
செல்ஃபி வசதி பிரபலமடையத் தொடங்கியதில் இருந்தே, மொபைல் என்பது ஒரு அந்தரங்க சாதனமாகி விட்டது என்று கூறலாம். வெறும் புகைப்படம் எடுப்பது மட்டுமின்றி, தொழில் சார்ந்த வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளவும், செல்ஃபி கேமராக்கள் சிறப்பாக இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அப்படி 2022 ஆம் ஆண்டு மக்களால் அதிக வரவேற்பு அளிக்கப்பட்ட இந்த மொபைல்களில் சிறந்த செல்ஃபி போனாக ‘Vivo V25 5G’ மொபைல் தேர்வானது.
சிறந்த கேமரா போன் 2022 – மெயின்ஸ்ட்ரீம் (ரூ. 30,000க்கு கீழ்)
வருடத்திற்கு ஒருமுறையோ, வாழ்வில் எப்போதோ புகைப்படம் எடுத்த நமது முந்தைய தலைமுறையிடம் கேட்டுப் பார்த்தால் சொல்வார்கள்.. புகைப்படம் எடுப்பது என்பது எவ்வளவு பெரிய திருவிழாத் தருணம் என்று. இன்றோ நொடிக்கொரு புகைப்படம் எடுக்கும்படி, எண்ணற்ற வசதிகளோடு கைக்குள் அல்ல.. ஒரு தொலைபேசிக்குள் அடங்கி விட்டது கேமரா. ஆனால், அதில் சிறந்தது எது என்பதற்கான விடையாகத் தேர்வான 2022ஆம் ஆண்டின் சிறந்த மெயின்ஸ்ட்ரீம் கேமரா போன் ‘Realme 9 Pro+’
சிறந்த கேமரா போன் 2022 – ப்ரீமியம் (விலை பொருட்டல்ல)
மொபைலில் இருக்கும் கேமராக்களின் ‘மெகாபிக்சல்’கள் தொழிற்முறைக் கேமராக்களை விட அதிகமாகிவிட்டன. நடுக்கமின்றி எடுப்பது, நகர்ந்து கொண்டே எடுப்பது, அளவில் பெரிதாய் எடுப்பது, நீரின் ஆழத்தில் எடுப்பது என மொபைல் கேமராக்களின் தொழில்நுட்பங்கள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றன. இதில் வெறும் வார்த்தை விளையாட்டு எது? உண்மையிலேயே வசதிகள் எது? என உண்மையைக் கண்டறிவது சிரமமான காரியம் தான். அப்படி ஆராய்ந்ததில் வெற்றி பெற்ற சிறந்த பிரீமியம் கேமரா மொபைலாக ‘Samsung Galaxy S22 Ultra 5G’ போன் வெற்றி வாகை சூடியது.
சிறந்த கேமிங் போன் 2022
விளையாட்டின் விறுவிறுப்பில் சூடுபிடிக்க வேண்டுமே தவிர, விளையாடும் போது மொபைல் சூடாகக் கூடாது. அதுபோல் தடைகள் விளையாட்டில் வரலாமே தவிர, விளையாடும் மொபைலில் வரக்கூடாது. அப்படி, சிறந்த திரை அனுபவம், பேட்டரி, ஆடியோ போன்ற திறன் மிக்க சிறந்த கேமிங் மொபைல் எது என்பதைத் தேர்ந்தெடுக்கத்தான் இந்த போட்டியே. எல்லாமே திறன் மிக்கதாக இருந்தாலும் இதில், ‘வல்லவனுக்கு வல்லவனை’நடுவர்கள் கைகாட்டியது ‘ASUS ROG Phone 6 Pro’ மொபைலையே.
2022 ஆம் ஆண்டின் சிறந்த போன்

இந்தியர்கள் உணவைத் தேர்ந்தெடுப்பது போல் தான் ஒவ்வொரு விஷயத்தையும் தேர்ந்தெடுப்பார்கள். வெளிநாட்டினரைப் போல் சில ரொட்டித்துண்டுகள், சிறிது இறைச்சியில் திருப்தி காண்பவர்கள் அல்ல நாம். பசியைத் தூண்ட ஆரம்பத்தில் சூப், இனிப்பு! அதன் பின் சோறு. அதற்கு இரண்டு, மூன்று வகை குழம்பு, அதோடு தொட்டுக் கொள்ள அவியல், பொறியல், கூட்டு, அப்பளம். அவை செரிக்க ரசம். அதன் பின் கொஞ்சம் தயிர். அதற்கு ஊறுகாய் என்று ஒருவேளை சாப்பாட்டிலேயே அவ்வளவு எதிர்பார்ப்பார்ப்போம். மாதக்கணக்கில் அல்லது சில வருடங்கள் நம்முடைய உடலில் ஒட்டாத உறுப்பாக இருக்கப்போகும் மொபைலில் என்னெவெல்லாம் எதிர்பார்ப்போம்? அப்படி பெரும்பான்மையானவர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்த 2022 ஆம் வருடத்தின் மிகச் சிறந்த மொபைலாக ‘Samsung Galaxy S22 Ultra 5G’ தேர்வானது.












