இந்தியாவில் அறிமுகமாகிறது BMWவின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

BMW நிறுவனம் விரைவில் எலெக்ட்ரிக் மேக்சி ஸ்கூட்டர் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது BMW CE 04 மாடலாக இருக்கும் எனத் தெரிகிறது. ஏற்கனவே இந்த மாடல் சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதைத் தொடர்ந்து, இந்த மாடலை இந்தியா மற்றும் சீனாவில் அறிமுகம் செய்ய பி.எம்.டபிள்யூ. நிறுவனம் ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது.

இந்தியச் சந்தையில் இந்த மாடல் அறிமுகமாக சில காலம் ஆகும் என்ற நிலையில், இதன் விலை அனைவரும் வாங்கக்கூடிய வகையில் இருக்காது என்றே தெரிகிறது. தற்போது சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் பி.எம்.டபிள்யூ. CE 04 மாடலின் விலை இந்திய மதிப்பில் ரூ. 14 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், இந்திய சந்தையில் இதன் விலை சற்று அதிகமாகவே இருக்கும் என தெரிகிறது.

BMW CE 04 மாடலில் 8.9 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இது 41.4 HP பவர் மற்றும் 62 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு 100 கி.மீ. வேகத்தை 10 நொடிகளுக்குள் எட்டிவிடும் திறன் கொண்டது. மேலும் அதிகபட்சமாக மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. முழு சார்ஜ் செய்தால் இந்த ஸ்கூட்டர் 130 கி.மீ. வரை செல்லும் என உறுதியளிக்கப்பட்டு இருக்கிறது.