ஏர்டெல் நிறுவனத்தின் 5ஜி சேவை அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகமாகவுள்ள நிலையில், தற்போது இந்நிறுவனத்தின் சிஇஓ கோபால் விட்டல் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த செய்திக்குறிப்பில் 5ஜி குறித்தும் அதன் சிறப்பு அம்சங்களை குறித்தும் தெளிவாக விளக்கியுள்ளார்.
எந்தெந்த நகரங்களுக்கு 5ஜி சேவை
அடுத்த மாதம் ஏர்டெல் நிறுவனம் முதற்கட்டமாக இந்தியாவின் முக்கிய நகரங்களான சென்னை, டெல்லி, மும்பை மற்றும் சில நகரங்களில் 5ஜி சேவையை அறிமுகம் செய்ய இருக்கிறது. அக்டோபர் மாதம் இறுதிக்குள் இந்த சேவை எப்போது வேண்டுமானாலும் நடைமுறைக்கு வரலாம் என்று தெரிகிறது. அதேபோல் வரும் 2023-ம் ஆண்டு முடிவதற்குள் இந்தியாவில் உள்ள அனைத்து நகரங்களிலும் இந்த 5ஜி சேவை விரிவுபடுத்த ஏர்டெல் நிறுவனம் முடிவுசெய்துள்ளது. அவரவர் நகரங்களில் 5ஜி சேவை எப்போது வரும் என்பதை தெரிந்து கொள்ள ஏர்டெல் தேங்க்ஸ் ஆப்ஸை பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளுமாறும் ஏர்டெல் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
5ஜி சிம் தேவை இல்லை
5ஜி சேவையை நீங்கள் பெற வேண்டும் என்றால் உங்களிடம் ஒரு 5ஜி மொபைல் இருக்க வேண்டும். இந்நிலையில் பயனர்களுக்கு மகழிச்சி தரக்கூடிய செய்தி ஒன்றை ஏர்டெல் தெரிவித்துள்ளது. அதாவது இதுபோன்ற புதிய சேவையை அப்க்ரேட் செய்யும் போது சிம் கார்டை மாற்றவேண்டியது இருக்கும். உதாரணமாக, 4ஜி சேவை வரும் போது, 2ஜி மற்றும் 3ஜி சிம் வைத்திருந்த அனைவரும் 4ஜி சேவையை பெறுவதற்காக புதிய சிம் கார்டை வாங்க வேண்டி இருந்தது. ஆனால் இப்போது ஏர்டெல் நிறுவனத்தின் 5ஜி சேவையை பெற நீங்கள் உங்களது 4ஜி சிம் கார்டையே பயன்படுத்தலாம். புதிதாக 5ஜி சிம் கார்டு வாங்க வேண்டியது இல்லை என ஏர்டெல் தெரிவித்துள்ளது.
எப்படி பயன்படுத்துவது?
நீங்கள் இருக்கும் நகரத்தில் ஏர்டெல் 5ஜி சேவை அறிமுகமான உடன் உங்களது போனில் நெட்வொர்க் செட்டிங்கிற்கு சென்று 5ஜி சேவையை ஆன் செய்தால் போதும். அவ்வளவு தான் 5ஜி சேவையை பெற முடியும்.
எவ்வளவு வேகம்?
இப்போது இருக்கும் 4ஜி சேவையை விட 20 அல்லது 30 மடங்கு வேகமாக இன்டர்நெட் சேவையை இந்த 5ஜி மூலம் பெறமுடியும். குறிப்பாக அதிவேக இன்டர்நெட் பயன்பாட்டிற்கும், தடங்கல் இன்றி ஆன்லைன் கேம் விளையாடுவதற்கும் இந்த 5ஜி சேவை உதவும். அதேபோல் வீட்டில் இருந்து வேலை செய்யும் பயனர்களுக்கு இந்த 5ஜி சேவை மிக வசதியாக இருக்கும் என்றே கூறலாம்.
கட்டண விவரங்கள்
ஏர்டெல் நிறுவனம் அடுத்த மாதம் 5ஜி சேவையை அறிமுகம் செய்யும் என்று தான் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை கட்டண விவரங்கள் பற்றி எந்த அறிவிப்பையும் ஏர்டெல் நிறுவனம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்றே கூறப்படுகிறது.






