Home News 64 நாடுகளை பைக்கில் சுற்றிவர நடிகர் அஜித் திட்டம்!

64 நாடுகளை பைக்கில் சுற்றிவர நடிகர் அஜித் திட்டம்!

நடிகர் அஜித்குமார் சினிமாவில் நடிப்பதோடு ஓய்வு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் நெடுந்தூர பயணம் செய்து பிரபலமான இடங்களை சுற்றிப் பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.
கடந்த சில நாட்களாக பெல்ஜியம், இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் மோட்டார் சைக்கிள் பயணம் சென்றார். தற்போது விசாகப்பட்டினத்தில் துணிவு படப்பிடிப்பை முடித்ததும் இமயமலை பகுதியில் மோட்டார்சைக்கிள் பயணம் மேற்கொண்டு கார்கில் நினைவு சின்னத்தில் மரியாதை செலுத்தினார். கேதார்நாத், பத்ரி நாத் கோவில்களில் சாமி தரிசனம் செய்தார். இந்த புகைப்படங்களும் வீடியோக்களும் வலைத்தளத்தில் வெளியானது. இப்போது துணிவு படத்தின் படபிடிப்பு முழுவதுமாக முடிந்து விட்டது.

அஜித் அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு உள்ளார். இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு மோட்டார் சைக்கிளில் உலகை சுற்ற அஜித்குமார் திட்டமிட்டு உள்ளார். அதாவது 62 நாடுகளில் தொடர்ந்து 18 மாதங்கள் மோட்டார் சைக்கிளில் அவர் சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒன்றரை வருடம் மோட்டார் சைக்கிள் சுற்றுப் பயணம் செய்து முடித்த பிறகே அடுத்த படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

அஜித்தின் துணிவு படம் பொங்கல் பண்டிகையில் திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருக்கும் நிலையில், விக்னேஷ் சிவன் – நயன்தாரா வாடகைத்தாய் விவகாரம் அடுத்த கட்டத்தை அடைந்துள்ளது.

நயன்தாரா-விக்னேஷ் சிவன், திருமணம் முடிந்த 4 மாதத்தில் இரட்டை குழந்தை பிறந்ததாக அறிவித்தனர். அதை தொடர்ந்து ஏற்பட்ட சர்ச்சையில் நயன்தாரா வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றதாக தெரியவந்தது. இது நயன்தாரா-விக்னேஷ் சிவனுக்கு கூடுதல் சிக்கலை ஏற்படுத்தியது. வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமெனில் நயன்தாராவுக்கு குழந்தை பெறும் தகுதி இல்லை என்பது மருத்துவ ரீதியாக உறுதிப்படுத்தியிருக்க வேண்டும். வாடகைத்தாய் தேர்விலும் ஏகப்பட்ட நடைமுறைகள் உள்ளன. இந்த நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதா என்பதும் தெரியவில்லை. இந்த பிரச்சினை சர்ச்சையானதும் விசாரணை நடத்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.

இதையடுத்து மருத்துவ பணிகள் துறை 3 பேரை கொண்ட குழுவை நியமித்தது. இந்த குழுவினர் விசாரணையை தொடங்கிய நிலையில் நயன்தாரா 6 வருடங்களுக்கு முன்பே பதிவு திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியானது. வாடகைத்தாய் வாயிலாக குழந்தை பெறுவது தொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே ஒப்பந்தம் செய்யப்பட்டு விட்டதாகவும், சட்டம் அதன் பிறகுதான் அமுலுக்கு வந்ததால் நயன்தாராவுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்ற தகவலும் பரவி வருகிறது. இதுதொடர்பாக மருத்துவ பணிகள் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது கடந்த டிசம்பரிலேயே ஒப்பந்தம் போட்டிருந்தாலும் மருத்துவமனை நிர்வாகம் அப்போதே முறைப்படி அரசுக்கு தகவல் தெரிவித்து இருக்க வேண்டும். மேலும் வாடகைத்தாய் விவகாரத்தில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது என்பது பற்றி மருத்துவமனை நிர்வாகத்திடம் அதிகாரிகள் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் நயன்தாரா இந்த விவகாரத்தை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை என்றும் அவர் படப்பிடிப்புக்காக ராஜஸ்தான் சென்று விட்டதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. அங்கு படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ள நயன்தாரா அடுத்த மாதம் தான் சென்னை திரும்புவார் என்று கூறப்படுகிறது. இந்த பிரச்சனை மிகப்பெரியதாக உருவெடுத்ததால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க மருத்துவமனைகள் மற்றும் சம்பந்தப்பட்டவர்களுக்கு கடிவாளம் போட அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர். நயன்தாரா படப்பிடிப்பில் இருந்து சென்னை திரும்பியதும் அவரிடம் நேரில் விசாரிக்க முடிவு செய்துள்ளார்கள். அவர் தரப்பில் இருக்கும் ஆதாரங்களையும் கேட்க முடிவு செய்துள்ளார்கள்.