
விஜய் நடித்துள்ள வாரிசு, அஜித்குமார் நடித்துள்ள துணிவு ஆகிய 2 படங்களும் பொங்கல் பண்டிகையில் வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளை இந்த 2 படங்களும் சரிபாதியாக பிரித்துக்கொள்ள உள்ளன. வாரிசு – துணிவு வாரிசு – துணிவு வாரிசு படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி வருகிறது. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்குகிறார். தெலுங்கு பட அதிபர் தில்ராஜு தயாரிக்கிறார். தெலுங்கில் விஜய் படங்களுக்கு வரவேற்பு உள்ளதால் இந்த படத்தை ஆந்திரா, தெலுங்கானாவில் அதிக திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
இதுபோல் துணிவு படத்தையும் தெலுங்கில் மொழிமாற்றம் செய்து ஆந்திரா, தெலுங்கானாவில் கணிசமான தியேட்டர்களில் வெளியிட முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் ஐதராபாத்தில் நடந்த தெலுங்கு தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் பொங்கல் பண்டிகையில் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து அதிக தியேட்டர்களை ஒதுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பொங்கலுக்கு சிரஞ்சீவி நடித்த வால்டர் வீரய்யா, பாலகிருஷ்ணா நடித்துள்ள வீர நரசிம்ம ரெட்டி, அகில் நடித்துள்ள ஏஜெண்ட் ஆகிய படங்கள் திரைக்கு வருகின்றன. இந்த 3 படங்களுக்கு மட்டுமே அதிக தியேட்டர்களை ஒதுக்கும்படி தியேட்டர் அதிபர்களை அறிவுறுத்தி உள்ளது. இதனால் விஜய்யின் வாரிசு, துணிவு படங்களுக்கு கூடுதல் தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
இதனிடையே விஜய் நடிக்கும் வாரிசு படப்பிடிப்பு புகைப்படங்கள் அடுத்தடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி வருகின்றன. ஏற்கனவே கிழக்கு கடற்கரை சாலையில் நடந்த படப்பிடிப்பை சிலர் திருட்டுத்தனமாக படம்பிடித்து வலைத்தளத்தில் பரவ விட்டனர். பின்னர் பைக்கில் வரும் வில்லனை விஜய் கீழே தள்ளிவிட்டு சண்டையிடும் புகைப்படம் வெளியானது. தொடர்ந்து விஜய் கோட் சூட் அணிந்து தொழிலாளர்களுடன் பேசுவது போன்ற புகைப்படமும் பாடல் காட்சி படமாக்கப்பட்டபோது எடுத்த வீடியோவும் வலைதளங்களில் கசிந்து வைரல் ஆனது.
இந்நிலையில் ‘வாரிசு’ படத்தின் இன்னொரு படப்பிடிப்பு வீடியோவும் தற்போது கசிந்துள்ளது. அந்த வீடியோவில் விஜய் ஸ்டைலாக நடந்து வரும் காட்சிகளும் ஒரு சுரங்கத்தின் அருகில் ஹெலிகாப்டர் ஒன்று இருக்கும் காட்சியும் உள்ளன. இந்த வீடியோ வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இது படக்குழுவினருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. காட்சிகளை திருட்டுத்தனமாக படம்பிடித்து வெளியிட்டது யார் என்று விசாரணை நடக்கிறது.