செப்டம்பர் 6 இல்ல.. 7ல் அறிமுகமாகிறது ஐபோன் 14

ஐபோன் 14 சீரிஸ் போன்கள் செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதி வெளியிடப்படலாம் என முந்தைய அறிக்கைகள் தெரிவித்தது. ஆனால் தற்போது ப்ளூம்பெர்க் தளத்தின் மார்க் குர்மன் இதுகுறித்து வெளியிட்ட தகவலின்படி, ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14 சீரிஸை செப்டம்பர் 7 ஆம் தேதி அறிமுகப்படுத்தும் திட்டத்தில் இருப்பதாகத் தெரிகிறது.

ஏனெனில் அந்நாட்டில் செப்டம்பர் 5 (திங்கட்கிழமை) தொழிலாளர் தினம் (Labor Day) என்றும் செப்டம்பர் 6 (செவ்வாய்கிழமை) பயண நாளாகவும் (travel day) இருக்கும் காரணத்தால் செப்டம்பர் 7 (புதன்கிழமை) அன்று ஐபோன் 14 வெளியிடப்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபோன் 14 மட்டுமின்றி, ஆப்பிள் நிறுவனம் புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8, வாட்ச் SE மற்றும் ஆப்பிள் வாட்ச் ப்ரோ ஆகியவற்றையும் இந்த நாளில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

செப்டம்பர் 7 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் ஐபோன் 14 ஆனது செப்டம்பர் 16 (வெள்ளிக்கிழமை) விற்பனைக்கு வரும் என குர்மன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022 இல் மிகவும் எதிர்பார்க்கப்படும் சாதனங்களில் ஆப்பிள் ஐபோன் 14 சீரிஸ் பிரதான ஒன்று.Gadget Tendency அறிக்கையின்படி, ஆப்பிள் ஐபோன் 14 சீரிஸ் விற்பனை செப்டம்பர் மாதத்தில் தொடங்கும் எனவும் ஆரம்பத்தில் 90 மில்லியன் யூனிட்களுடன் இதன் விற்பனை நடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐபோன் 14 சீரிஸ் நான்கு வேரியண்ட்களில் அறிமுகமாகும் என தகவல்கள் தெரிவிக்கிறது. அதேபோல் வரவிருக்கும் ஐபோன் 14 இன் செல்ஃபி கேமரா மேம்படுத்தப்பட்ட கூடுதல் அம்சங்களைக் கொண்டிருக்கும் எனத் தெரிகிறது.

ஐபோன் 14 இன் முன்புற கேமராவில் ஆட்டோஃபோகஸ் அம்சம் இடம்பெறும் என கூறப்படுகிறது. இந்த அம்சத்தின் மூலம் உயர்தர படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்யலாம்.

ஐபோன் 14 குறித்து வெளியாகும் தகவல்கள் அனைத்தும் அந்த சாதனத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்கிறது. அதில் உள்ள ஒரு சுவாரஸ்ய தகவலை பிரபல ஆப்பிள் ஆய்வாளர் Ming-Chi Kuo வெளியிட்டிருந்தார்.

அதன்படி ஆப்பிள் நிறுவனம் வரவிருக்கும் ஐபோன் சாதனத்தின் முன்பக்க கேமராவிற்கு என எல்ஜி இன்னோடெக் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளதாக தெரிவித்தார். இதன் முன்புற கேமராவின் மேம்பாடு என்பது இதுவரை கண்டிறாத வகையில் இருக்கும் என குறிப்பிட்டார். ஐபோன் 14 இல் முன்பக்க கேமரா ஆட்டோஃபோகஸ் வசதியைக் கொண்டிருக்கும். ஆப்பிள் நிறுவனம் தனது சாதனத்தின் முன்புற கேமராவில் ஆட்டோஃபோகஸ் தன்மையை கொண்டு வருவது இதுவே முதல் முறை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதுபோன்று வெளியாகும் ஒவ்வொரு தகவலும் ஐபோன் 14 மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்கிறது. எனவே இதன் விலையும் ஐபோன் 13-ஐ விட குறிப்பிடத்தக்க வகையில் அதிகமாகவே இருக்கும் எனத் தெரிகிறது. ஐபோன் 14ன் அதிகாரப்பூர்வ அறிமுக தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.