ஐபோன் 13-ஐ விட ஐபோன் 14-ன் விலை குறைவா?

ஆப்பிள் நிறுவனம் தனது iPhone 14 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்ய இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில், ஒரு புதிய தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அது என்னவென்றால், வரவிருக்கும் புதிய iPhone 14 சீரிஸ் போன்கள், கடந்த ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட iPhone 13 தொடர் போன்களின் விலையை விட மிகக் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனம் வரும் செப்டம்பர் 7ம் தேதி, Apple Far Out 2022 என்ற நிகழ்வை நடத்த இருக்கிறது. இந்த நிகழ்வின் போது புதிய iPhone 14 சீரிஸ் மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் என்று நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்திய நேரத்தின் படி, இது செப்டம்பர் 7ம் தேதி இரவு 10.30 மணிக்கு லைவ் செய்யப்படும். இந்த நிகழ்வின் போது, இந்த ஆண்டிற்கான iPhone 14, iPhone 14 Max, iPhone 14 Pro and iPhone 14 Pro Max ஆகிய மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு வெளியான தகவலின் படி, ஐபோன் 14 சீரிஸ் மாடல்கள் சில காரணங்களால் இந்த ஆண்டு விலை அதிகமாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், சமீபத்தில் வெளியான ஒரு லீக் தகவல், இதை முற்றிலும் வேறு மாதிரியாகத் தெரிவித்துள்ளது. இதன்படி, வரவிருக்கும் புதிய iPhone 14 தொடர் மாடல்கள், முந்தைய iPhone 13 சீரிஸ் மாடல்களை விட குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்படும் என்பதை விலையுடன் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த தகவல் ஆப்பிள் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அடிப்படை iPhone 13 மாடலின் 128GB வேரியண்ட் மாடல் $799 விலையுடன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த TrendForce தகவலின் படி, வரவிருக்கும் iPhone 14 மாடலின் விலை $50 குறைந்ததாக இருக்கலாம் என்று கூறியுள்ளது.

அதாவது, வரவிருக்கும் iPhone 14 மாடலின் ஆரம்ப விலை $749 ஆக இருக்க வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பின் படி, இது தோராயமாக ரூ. 59,600 என்ற விலை முதல் தொடங்கலாம். இதற்கு முன் வெளியான தகவலின் படி, iPhone 14 மாடல்கள் $900 என்ற விலையில் எதிர்பார்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இது இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 71,700 விலை ஆகும்.

அதேபோல், ஐபோன் 14 மேக்ஸ் சாதனத்தின் ஆரம்ப விலை வெறும் $849 ஆக இருக்கும் என்று இந்த தகவல் பரிந்துரைக்கிறது. இது இந்திய மதிப்பின் படி தோராயமாக ரூ. 67,600 ஆகும். இதேபோல், TrendForce வெளியிட்ட முந்தைய சில அறிக்கைகளில் iPhone 14 Pro மற்றும் iPhone 14 Pro Max மாடல்கள் இம்முறை விலை அதிகரிப்புடன் அறிமுகம் செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த விலை அதிகரிப்பு இரண்டு மாடல்களுக்கும் $50-$100 வரை இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இதன்படி, ஐபோன் 14 ப்ரோ மாடலின் அறிமுக வெளியீட்டு விலை $1049 ஆக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய மதிப்பின் படி, இது தோராயமாக ரூ. 83,500 என்ற விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடலின் விலை $1149 என்ற விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 91,500 என்ற விலையில் அறிமுகம் செய்யப்படலாம்.