
ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் இந்திய ஐபோன் விற்பனையில் வரலாறு காணாத வருவாய் ஈட்டப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவில் ஐபோன் விற்பனை இருமடங்கு வளர்ச்சியை பதிவு செய்து வருவதாக அவர் தெரிவித்தார்.
உலகளவில் செப்டம்பர் மாதம் வரையிலான காலாண்டில் ஆப்பிள் நிறுவனம் 90.1 மில்லியன் டாலர்கள் வருவாயை ஈட்டி இருக்கிறது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது எட்டு சதவீதம் வரை அதிகம் ஆகும். ஆப்பிள் நிறுவனத்தின் வருடாந்திர வருவாய் 394.3 பில்லியன் டாலர்களாக இருக்கிறது. இது முந்தைய ஆண்டை விட எட்டு சதவீதம் அதிகம் ஆகும்.
“ஒவ்வொரு பகுதி வருவாயிலும் நாங்கள் புதிய சாதனையை இந்த காலாண்டில் எட்டியிருக்கிறோம். இந்தியா, தென் கிழக்கு ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்கா போன்ற வளரும் நாடுகளில் தொடர்ந்து இருமடங்கு வளர்ச்சியை பதிவு செய்து வருகிறோம்,” என ஆப்பிள் நிறுவனத்தில் கால் தெரிவித்தார். “புதிய ஐபோன் 14 சீரிஸ் பல்வேறு தலைசிறந்த தொழில்நுட்பம் மற்றும் மிக முக்கிய பாதுகாப்பு அம்சங்களை கொண்டிருக்கிறது. இந்தியாவில் ஐபோன் 14 சீரிஸ் உற்பத்தியை மேற்கொள்வதில் சுவாரஸ்ய அனுபவத்தை வழங்குகிறது,” என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. புதிய ஐபோன் 14 உற்பத்தி சென்னை அருகில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் நடைபெற்று வருகிறது.
இது ஒருபுறம் இருக்க, சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஐபோன் உற்பத்தி சரியும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதன் காரணமாக ஆப்பிள் நிறுவனம் உற்பத்தி இலக்குகளை குறைப்பது பற்றி பரிசீலனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
சீனாவில் உள்ள உலகின் மிகப்பெரிய உற்பத்தி ஆலையான செங்சௌ-வில் அடுத்த மாதத்திற்கான ஐபோன் உற்பத்தி 30 சதவீதம் வரை குறையும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆலையில் குறையும் ஐபோன் உற்பத்தியை ஓரளவு ஈடுசெய்ய ஷென்சென் ஆலையில் பாக்ஸ்கான் நிறுவனம் உற்பத்தியை அதிகப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. ஷென்செனில் உள்ள பாக்ஸ்கான் ஆலையில் சுமார் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். எனினும், கொரோனாவை கட்டுக்குள் வைக்க பல பணியாளர்கள் சில நாட்களுக்கு முன் ஆலையை விட்டு வெளியேறினர்.
உலகளவில் மின்சாதன பொருட்களுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், இது போன்ற இடர்பாடான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர திட்டமிட்டு வருவதாக பாக்ஸ்கான் நிறுவனம் அறிக்கை வெளியிட்டு உள்ளது. இதுதவிர மற்ற ஆலைகளுடன் தொடர்பு கொண்டு உற்பத்தி சரிவை முடிந்த வரை ஈடுகட்ட முயற்சித்து வருவதாக தெரிவித்து உள்ளது.
உற்பத்தி சரிவு குறித்து ஆப்பிள் நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. பாக்ஸ்கான் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்திற்கு மிகப்பெரிய உற்பத்தியாளராக விளங்கி வருகிறது. செங்கௌ ஆலையில் உற்பத்தி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், கொரோனா பரவலை கட்டுக்குள் வைக்கும் நடவடிக்கையாக மிக கடுமையான கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.