

இந்தியாவின் முன்னணி மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் அல்டி கிரீனும் ஒன்று. இது வர்த்தக பயன்பாட்டு வசதிக் கொண்ட எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பை முக்கிய உற்பத்தியாகக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த நிறுவனம் அதிக வேகத்தில் சார்ஜாகக் கூடிய மின்சார மூன்று சக்கர வாகனத்தை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கிறது. எக்ஸ்போனன்ட் எனர்ஜி எனும் நிறுவனத்துடன் இணைந்து என்இ இவி டெஸ் எனும் எலெக்ட்ரிக் ஆட்டோவை அல்டி க்ரீன் உருவாக்கி இருக்கிறது.
விலை & பேட்டரி
‘என்இ இவி டெஸ்’க்கு அறிமுக விலையாக 3 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில், எக்ஸ்போனென்ட் கை வண்ணத்தில் உருவாக்கப்பட்ட லித்தியம் ஃபெர்ரோஸ் பாஸ்பேட் செல் பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரி பேக் 8.2 kWh திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.
மைலேஜ்
இதை முழுமையாக சார்ஜ் செய்தால் 98 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதுவே நீங்கள் வசிப்பது வாகன நெரிசல் மிகுந்த நகர்புறமாக இருந்தால் அதன் ரேஞ்ஜ் 85 கிமீ ஆக மட்டுமே இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுமட்டுமின்றி இதன் பேட்டரி வெறும் பதினைந்தே நிமிடத்தில் பூஜ்ஜியத்தில் இருந்து 100 சதவீதம் வரை சார்ஜாகும் திறன் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அதிக வேகத்தில் சார்ஜ் செய்ய வேண்டுமானால் எக்ஸ்போனென்டின் இ-பம்புகளை பயன்படுத்த வேண்டுமாம். இது எக்ஸ்போனென்ட் நிறுவனத்தின் பிரத்யேக மின் வாகன சார்ஜிங் மையம் ஆகும். இதில் வைத்து சார்ஜ் செய்யும் பட்சத்தில் மட்டுமே அதி விரைவாக எலெக்ட்ரிக் ஆட்டோவை சார்ஜ் செய்ய முடியும். உலக அளவில் அதிக வேகத்தில் சார்ஜாகும் எலெக்ட்ரிக் ஆட்டோ இதுவே ஆகும்.
வாரண்டி
இந்த ஆட்டோவின் பக்கம் வாடிக்கைாயளர்களை ஈர்க்கும் பொருட்டு நிறுவனம் ஐந்தாண்டுகள் அல்லது 1 லட்சம் கிமீ உத்தரவாதத்தை வாகனத்திற்கு அறிவித்துள்ளது. இதேபோல், ஐந்து ஆண்டுகள் அல்லது 1 லட்சத்து 56 ஆயிரம் கிமீ வாரண்டி பேட்டரி பேக்கிற்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுமட்டுமின்றி, அதிக வேகத்தில் சார்ஜ் செய்யக் கூடிய சார்ஜிங் மையங்களை பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் முயற்சியிலும் எக்ஸ்போனென்ட் களமிறங்கி இருக்கிறது.
சிறப்பு
இந்த புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோவின் வருகை பார்சல் சர்வீஸ் செய்யும் நிறுவனங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. தற்போது நாட்டில் பெரும்பாலான ஆட்டோக்கள் கேஸ் (ஆட்டோ எல்பிஜி மற்றும் சிஎன்ஜி) வாகனங்களாக மாறிவிட்டன. இவை சற்று அதிகம் லாபம் வழங்கக் கூடியவை என்பதனாலேயே பயணிகள் ஆட்டோ தொடங்கி லோடு ஆட்டோ வரை எல்பிஜிக்கு மாறி இருக்கின்றன. இவை பெட்ரோல், டீசல் ஆட்டோக்களைப் போல் சுற்றுச்சூழலை மிக அதிகளவில் மாசுப்படுத்தாது. இதைக் காட்டிலும் பல மடங்கு அதிக சிறப்பு வசதிகளைக் கொண்டதாக அல்டிகிரீனின் என்இ இவி டெஸ் எலெக்ட்ரிக் ஆட்டோ உருவாக்கப்பட்டு உள்ளது.
வேரியண்ட்
கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்திலேயே அல்டிகிரீன் மற்றும் எக்ஸ்போனென்ட் நிறுவனங்கள் தங்களின் கூட்டணியை அறிவித்தன. இது அறிவிக்கப்பட்டு சில மாதங்களே ஆகும் நிலையில் தற்போது அதிக வேகத்தில் சார்ஜாகும் எலெக்ட்ரிக் ஆட்டோ அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. ஹை டெக், லோ டெக் மற்றும் டெஸ் ஆகிய மூன்று விதமான தேர்வுகளில் இது கிடைக்கிறது. இந்த வேரியண்டுகள் வெவ்வேறு உருவ அமைப்பைக் கொண்டவை என்பது குறிப்பிடத்தகுந்தது.







