நெட்ப்ளிக்ஸில் இனி டவுன்லோடு செய்ய முடியாது!

இப்போதெல்லாம் காலை தொடங்கி இரவு கண்ணுறங்கும் வரை.. மொபைலும் கையுமாக, மணிக்கணக்கில்.. நூற்றுக்கணக்கான வீடியோக்களை பார்த்துக் கொண்டு இருக்கிறோம். வாகன ஓட்டிகள் கூட தங்களது வண்டிகளில் (பைக், ஸ்கூட்டர், ஆட்டோ, கார், பஸ், வேன், லாரிகளில்) மொபைல் ஸ்டேன்ட் ஒன்றை பொருத்திக்கொண்டு, அதில் ஏதோவொரு யூட்யூப் வீடியோவையோ, டிவி ஷோ, சீரியல் அல்லது திரைப்படத்தை பார்த்துக் கொண்டே சாலைகளில் செல்வதை பார்க்க முடிகிறது. இது மிகவும் தவறான – ஆபத்தான தவிர்க்க வேண்டிய செயல். இப்படியாக நம்மில் பலரும்.. மொபைல் போன்களை ஒரு மினி டிவியாகவே மாற்றி விட்டோம். அதற்கு ஓடிடி தளங்களும் ஒரு முக்கிய காரணம். அதிலும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால நெட்ப்ளிக்ஸ். ‘ஓரிஜினல்ஸ்’ என்கிற பெயரில் மிகமிக சுவாரசியமான கன்டென்ட்களின் குவியலாக இது இருக்கிறது.

பல்வேறு மொழிகளில் அட்டகாசமான நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை தன்வசம் கொண்டுள்ள நெட்பிளிக்ஸில் ஒரு புதிய கிடுக்குப்பிடி வரவுள்ளது. அது விளம்பரங்களை ஆதரிக்கும் நெட்பிளிக்ஸ் திட்டத்தின் வழியாக வரவுள்ளது. கடந்த சில காலமாக Ad-supported நெட்பிளிக்ஸ் பிளான் பற்றிய பேச்சு அடிபட்டு வருகிறது அல்லவா? தற்போது வெளியான ஒரு லேட்டஸ்ட் வதந்தியின்படி விளம்பரங்களை ஆதரிக்கும் நெட்பிளிக்ஸ் திட்டத்தை தேர்ந்தெடுக்கும் பயனர்களுக்கு (ஆப்ஃலைன்) டவுன்லோட் செய்யும் வசதி இனி கிடைக்காதாம்.

எப்போது நடைமுறைக்கு வருகிறது?

மைக்ரோசாப்ட் உடன் கூட்டு சேர்ந்துள்ள நெட்பிளிக்ஸ் நிறுவனமானது, அதன் மலிவான விளம்பர-சப்போர்டட் பிளானை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருக்கிறது. வரவிருக்கும் அந்த ஆட்-சப்போர்டட் பிளானில் டவுன்லோட் செய்யும் வசதி இருக்காது என்று தெரிய வந்துள்ளது.

Ad-supported Netflix பிளானின் கட்டணம் எவ்வளவு?

வரவிருக்கும் ஆட்-சப்போர்டட் நெட்பிளிக்ஸ் திட்டமானது மிகவும் மலிவானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் இந்த உத்தி அதன் பிளாட்ஃபார்மிற்கு நிறைய பயனர்களை கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் கூட வரவிருக்கும் புதிய திட்டத்தின் சரியான விலை விவரங்கள் பற்றி தகவல் இல்லை. இந்தியாவில் தற்போது நான்கு Netflix சந்தா திட்டங்கள் அணுக கிடைக்கிறது. அவைகள் மொபைல், பேஸிக், ஸ்டாண்டர்ட் மற்றும் பிரீமியம் ஆகும். இதன் விலைகள் முறையே ரூ.149, ரூ.199, ரூ.499 மற்றும் ரூ.649 ஆகும்.

மற்ற திட்டங்களில் Downloads விருப்பம் கிடைக்குமா?

கிடைக்கும்! டெவலப்பர் ஸ்டீவ் மோசரின் கூற்றுப்படி, விளம்பரங்களை ஆதரிக்கும் திட்டத்தை தவிர்த்து மற்ற அனைத்து திட்டங்களிலும் டவுன்லேடு செய்யும் வசதி இருக்கும். மற்ற ஸ்ட்ரீமிங் தளங்களில் இருப்பதை போலவே, நெட்பிளிக்ஸ் ஆட்-சப்போர்டட் பிளானில் வரும் விளம்பரங்களை தவிர்க்க முடியாது மற்றும் விளம்பர இடைவேளையின் போது பிளேபேக் கண்ட்ரோல்களையும் இயக்க முடியாது. இதெல்லாம் ஒருபக்கம் இருக்க Netflix இந்த தகவலை இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.