6 பட்ஜெட் போன்களை வெளியிடும் விவோ!

ஒரு பட்ஜெட் போனையோ அல்லது விவோ போனையோ வாங்க நினைத்தால் அவசர அவசரமாக இந்த மாதமே (ஆகஸ்ட் 2022) வாங்கிவிட வேண்டாம். அடுத்த மாதம் (செப்டம்பர் 2022) வரை காத்திருக்கலாம். ஏனெனில்.. டிப்ஸ்டர் பராஸ் குக்லானி வழியாக கிடைத்த ஒரு தகவலின்படி, Vivo நிறுவனம் அடுத்த மாதம் இந்தியாவில் பல ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

சமீபத்தில் தானே Vivo V25 Pro அறிமுகமானது என்று நீங்கள் கேட்கலாம். உண்மைதான்! ஆனால் அதுவொரு மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் ஆகும். 120Hz டிஸ்ப்ளே, டைமன்சிட்டி 1300 SoC மற்றும் 66W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற அம்சங்களை அது கொண்டு இருக்கிறது. இந்த மிட்-ரேன்ஜ் போனை தொடர்ந்து, விவோ நிறுவனம் தனது ஒட்டுமொத்த கவனத்தையும் பட்ஜெட் பிரிவுக்கு திருப்புவது போல் தெரிகிறது.

அடுத்த மாதம் இந்தியாவிற்கு வரும் 6 விவோ பட்ஜெட் போன்கள்!

பிரபல டிப்ஸ்டர் ஆன குக்லானியின் கூற்றுப்படி, அடுத்த மாதம் இந்தியாவில் விவோ நிறுவனத்தின் ஆறு புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகும். அதாவது Vivo Y02s, Vivo Y16, Vivo Y35, Vivo Y22, Vivo Y22s மற்றும் Vivo Y01A என்கிற 6 ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தும என்பது போல் தெரிகிறது. இவைகள் அனைத்துமே ஒய் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் என்பதால் கண்டிப்பாக பட்ஜெட் விலை பிரிவிலேயே அறிமுகமாகும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

என்ன விலை? என்னென்ன அம்சங்கள் இருக்கும்?

மேற்குறிப்பிட்ட 6 விவோ ஸ்மார்ட்போன்களின் பெயர்களைத் தவிர, டிப்ஸ்டர் குக்லானி, ஸ்மார்ட்போன்களின் அம்சங்கள் மற்றும் விலைகள் பற்றிய எந்த விவரங்களையும் வெளியிடவில்லை. இருப்பினும், ப்ரைஸ்பாபா வழியாக லீக் ஆன Vivo Y22s ஸ்மார்ட்போனின் பெட்டி மற்றும் லைவ் போட்டோக்களை வைத்து பார்க்கும் போது, விவோ ஒய்22எஸ் ஆனது கடந்த ஆண்டு இந்தோனேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட Vivo Y21s ஸ்மார்ட்போனின் “வாரிசாக” இருக்கும் என்பதை அறிய முடிகிறது.

Vivo Y22s டிசைன், கலர் மற்றும் அம்சங்கள்!

Vivo Y22s ஆனது 6.55 அங்குல அளவிலான வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளேவுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது HD ரெசல்யூஷன் உடன் கூடிய LCD பேனலாக இருக்கும். கேமராக்களை பொறுத்தவரை, இது 50MP மெயின் லென்ஸ் + 2MP சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப்பைக் கொண்டு இருக்கலாம். 2-வது கேமராவானது டெப்த் அல்லது மேக்ரோ ஷாட்களுக்கானதாக இருக்கலாம். மேலும் இந்த விவோ போன், 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி சேமிப்புத்திறன் உடன் இணைக்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 SoC மூலம் இயக்கப்படலாம்.

Vivo Y22s என்ன விலைக்கு அறிமுகமாகும்?

இந்தியாவிற்கு வரவிருக்கும் இந்த விவோ போனின் “சரியான” விலை விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை, ஆனாலும் கூட, இது கண்டிப்பாக பட்ஜெட் பிரிவின் கீழ் தான் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கலாம். தோராயமாக இது ரூ.15,000-க்குள் அறிமுகம் செய்யப்படலாம்.