521கிமி மைலேஜ் தரும் காரை அறிமுகப்படுத்தியது BYD

சீன மின் வாகன உற்பத்தி நிறுவனமான பிஒய்டி (Build Your Dreams), பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அட்டோ 3 இவி எஸ்யூவி காரை இந்தியாவில் வெளியீடு செய்திருக்கின்றது. இது ஓர் பிரீமியம் அம்சங்கள் நிறைந்த மின்சார காராகும். இதன் வெளியீட்டைத் தொடர்ந்து காருக்கான முன்பதிவும் தொடங்கியுள்ளன. இதுவரை பிஒய்டி நிறுவனத்தின் இ6 எனும் ஒற்றை எம்பிவி ரக மின்சார கார் மட்டுமே விற்பனைக்குக் கிடைத்து வந்தது. இந்த நிலையிலேயே தற்போது புதிய அட்டோ 3 இவி எலெக்ட்ரிக் கார் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

பிஒய்டி, இ6 எலெக்ட்ரிக் காரை நீண்ட நாட்களாக வெறும் கால் டாக்சி துறைக்காக மட்டுமே விற்பனைக்கு வழங்கி வந்தது குறிப்பிடத்தகுந்தது. சமீபத்திலேயே இக்காரை தனிநபர் பயன்பாட்டிற்கும் வாங்கிக் கொள்ளலாம் என நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டது. இந்த நிலையிலேயே தன்னுடைய வர்த்தகத்தை விரிவுப்படுத்தும் விதமாக அட்டோ3 இவி எலெக்ட்ரிக் காரை அது அறிமுகம் செய்திருக்கின்றது.

ரூ. 50 ஆயிரம் முன்தொகை செலுத்தி இந்த காரை புக் செய்து கொள்ளலாம். காரை புக் செய்யும் முதல் 500 வாடிக்கையாளர்களுக்கு வரும் 2023 ஜனவரியில் டெலிவரி கொடுக்கப்படும் என நிறுவனம் அறிவித்துள்ளது. பிஒய்டி நிறுவனம் பீரீமியம் வசதிகள் நிறைந்த எலெக்ட்ரிக் காராக அட்டோ 3 இவியை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

இதை உறுதிப்படுத்தும் வகையில் காருக்குள் பன்முக சிறப்பு வசதிகளை அந்நிறுவனம் வழங்கியிருப்பதை நம்மால் காண முடிகின்றது. கேபினை விரைவில் குளிர்விக்கும் ஏசி வெண்டுகள், வட்ட வடிவ ஸ்பீக்கர்கள், 12.8 அங்குல ரொட்டேட் வசதிக் கொண்ட திரை, பனோரமிக் சன்ரூஃப், ஒயர்லெஸ் செல்போன் சார்ஜர், 5 அங்குல டிஜிட்ல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் (இது ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதிக் கொண்டது), சிந்தெட்டிக் லெதர் இருக்கைகள், பன்முக நிறங்கள் கொண்ட ஆம்பியன்ட் லைட் உள்ளிட்ட அம்சங்கள் அட்டோ 3 எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டிருக்கின்றன.

இதேபோல் பாதுகாப்பு அம்மசங்களும் இந்த காரில் மிக ஏராளமாக வழங்கப்பட்டுள்ளன. அந்தவகையில், ஏழு ஏர் பேக்குகள், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, ஏபிஎஸ், இஎஸ்சி, டிராக்சன் கன்ட்ரோல், ஹில் டிசன்ட் கன்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இத்துடன், அடாஸ் எனும் மிக முக்கியமான தொழில்நுட்பமும் இக்காரில் கொடுக்கப்பட்டிருக்கின்றது.
இந்த தொழில்நுட்பத்தின் வாயிலாக தானியங்கி பிரேக்கிங், பிளைண்ட் ஸ்பாட் மானிட்டரிங், லேன் கீப்பிங் அசிஸ்ட், அடாப்டீவ் க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் முன்-பின் பக்க கொலிசன் வார்னிங் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகளை பெற்றுக் கொள்ள முடியும். தொழில்நுட்பம், பாதுகாப்பு வசதி உள்ளிட்டவற்றை போலவே ரேஞ்ஜ் தருவதிலும் மிக சூப்பரான காராக அட்டோ 3-ஐ பிஒய்டி நிறுவனம் வடிவமைத்திருக்கின்றது.

ஒற்றை முழு சார்ஜில் அட்டோ3 எலெக்ட்ரிக் கார் சுமார் 521 கிமீ தூரம் வரை பயணிக்கும். இந்த சூப்பரான ரேஞ்ஜ் திறனுக்காக எலெக்ட்ரிக் காரில் 60.48 kWh பேட்டரி பேக்கை பிஒய்டி பயன்படுத்தியிருக்கின்றது. உலக சந்தையில் இதே வாகனம் 49.92kWh பேட்டரி பேக் தேர்வில் விற்பனைக்குக் கிடைப்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த 60.48 kWh பேட்டரி பேக்கை 80kW DC ஃபாஸ்ட் சார்ஜர் பாயிண்டில் வைத்து சார்ஜ் செய்து கொள்ள முடியும். அப்படி இந்த பாயிண்டில் வைத்து சார்ஜ் செய்தால் 0 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் சார்ஜை வெறும் 50 நிமிடங்களில் ஏற்றிக் கொள்ள முடியும். இதேபோல், இக்காரை 2 ஏசி பாயிண்டிலும் வைத்து சார்ஜ் செய்து கொள்ள முடியும். இதில் சார்ஜ் செய்யும்பட்சத்தில் முழு சார்ஜூக்கு 10 மணி நேரங்கள் எடுத்துக் கொள்ளும். கூடுதல் சிறப்பு வசதியாக இந்த பேட்டரி பேக் மின்சாரத்தை பிற மின்சாதனங்களுக்கு பகிரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த காரில் 201 எச்பி மற்றும் 310 என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடிய மின் மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது. இது வெறும் 7.3 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டும் திறன் கொண்டது. இந்த அட்டோ 3, எம்ஜி இசட்எஸ் இவி மற்றும் ஹூண்டாய் கோனா இவி, மற்றும் டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் ஆகிய எலெக்ட்ரிக் கார்களுக்கு போட்டியை ஏற்படுத்தும்.

அட்டோ 3 இவி எலெக்ட்ரிக் கார் அதன் போட்டியாளர்களைக் காட்டிலும் சற்று கூடுதல் இட வசதியைக் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது. குறிப்பாக, எம்ஜி இசட்எஸ் இவி-யைக் காட்டிலும் 132 மிமீ நீளம் கொண்டதாகவும், ஹூண்டாய் கோனா இவி-யைக் காட்டிலும் 275 மிமீ நீளம் கொண்டதாகவும் அட்டோ 3 காட்டியளிக்கின்றது.

இக்காரை பிஒய்டி நிறுவனம் 4,445 மிமீ நீளம் கொண்டதாகவும், 1,875 மிமீ அகலம் கொண்டதாகவும், 2,720 மிமீ வீல் பேஸைக் கொண்டதாகவும் உருவாக்கியிருக்கின்றது. இதன் பூட் ஸ்பேஸ் அளவு 440 லிட்டர் ஆகும். இக்காரை சிகேடி வாயிலாக இந்தியா வரவழைத்தே, பின்னர், சென்னை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆலையில் வைத்து பிஒய்டி நிறுவனம் அசெம்பிள் செய்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. இன்னும் இக்காரின் விலை விபரங்கள் அறிவிக்கப்படவில்லை. வெகுவிரைவில் இதுகுறித்த தகவல் வெளியாகலாம்.