பெட்ரோல் ஸ்கூட்டரை வாங்கலாமா? எலெக்ட்ரிக் ஸ்கூட்டர வாங்கலாமா?

விலை
பொதுவாக பெட்ரோல் ஸ்கூட்டர்களை விட எலெக்டரிக் ஸ்கூட்டர்கள்தான் விலை அதிகம். ஆனால் தற்போது அரசு எலெக்ட்ரிக் வாகன விற்பனையை அதிகரிக்க எலெக்டரிக் ஸ்கூட்டர்களுக்கு மானியம் வழங்கியுள்ளது. இதனால் தற்போது பெட்ரோல் ஸ்கூட்டர்களின் விலையும், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலையும் கிட்டத்தட்ட ஒரே விலைக்கு வந்துவிட்டது.
பராமரிப்பு விஷயத்தைப் பார்த்தால் எலெக்டரிக் வாகனங்கள் தான் மிகவும் குறைவான பராமரிப்பு அம்சங்களைக் கொண்டது. பொதுவாக எலெக்டரிக் வாகனங்களில் மிகக் குறைவான அளவிலேயே உதிரிப்பாகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது இயங்கும் தொழிற்நுட்பமும் மிகவும் எளிமையானது. அதனால் இதைப் பராமரிப்பதும் எளிது. குறைந்த செலவிலேயே பராமரிப்பைச் செய்ய முடியும். ஆனால் பெட்ரோல் ஸ்கூட்டர்கள் எலெக்டரிக் ஸ்கூட்டர்களை காட்டிலும் கூடுதல் பராமரிப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது.

நீடித்து உழைக்கும் விஷயத்தைப் பொருத்தவரை பெட்ரோல் ஸ்கூட்டர்கள் தான் மிக நீண்ட காலங்களுக்குத் தனது உழைப்பை வழங்குகிறது. எலெக்டரிக் வாகனங்களைப் பொருத்தவரை அதன் பேட்டரிக்கு 4 ஆண்டுகள் வரை ஆயுள் இருக்கும். அதற்குப் பிறகு ஆயுள் குறையும். பேட்டரியை மாற்றினால் அதன் உழைப்பு அதிகரிக்கும். ஆனால் பேட்டரியை மாற்றும் செலவு மிகவும் அதிகம்.

செயல்திறன்
செயல் திறனைப் பொருத்தவரை எலெக்டரிக் வாகனங்கள் நல்ல பிக்கப் கொண்டது. குறிப்பிட்ட வேகத்தை விரைவாக எட்டிவிடும். மேலும் ஸ்மூத்தான ஆக்ஸிலேரேஷனையும் வழங்கும். சிட்டிக்குள் பயன்படுத்துவதற்கு பெட்ரோல் ஸ்கூட்டர்களை விட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தான் சிறப்பான செயல்பாட்டை வழங்கும். அதற்காக பெட்ரோல் வாகனங்கள் மோசம் எனச் சொல்ல முடியாது நீண்ட தூரப் பயணத்தில் பெட்ரோல் ஸ்கூட்டர்கள் தான் சிறப்பான பெர்ஃபாமென்ஸை வழங்கும்.

ரேஞ்ச் மற்றும் பயன்பாடு
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் இருக்கும் மிகப்பெரிய சிக்கலே இந்த ரேஞ்ச் தான். வாகன நிறுவனங்கள் முழு சார்ஜில் அதிக தூரம் செல்லும் எனக் குறிப்பிடுகிறார்கள். ஆனால் நாம் வாங்கி பயன்படுத்தும் போது அதை விட மிகக் குறைவான ரேஞ்சே கிடைக்கிறது. ஆனால் பெட்ரோல் ஸ்கூட்டர்களை பொருத்தவரை நாம் அதன் மைலேஜை எளிதாகக் கணக்கிட முடியும். வாகன நிறுவனங்கள் சொல்லும் மைலேஜிற்கும் நாம் பயன்படுத்தும் போது கிடைக்கும் மைலேஜிற்கும் பெரிய வித்தியாசம் இருக்காது.

அதுவே முழு சார்ஜில் ஒரு எவ்வளவு தூரம் செல்கிறது எனக் கணக்கிட்டால், அது முழு டேங்க் பெட்ரோலில் பெட்ரோல் ஸ்கூட்டர்கள் செல்லும் தூரத்தை விடக் குறைவு தான். அதனால் நீண்ட தூரப் பயணத்திற்கு எலெக்ட்ரிக் வாகனங்கள் ஏற்றது இல்லை. அடிக்கடி அதை சார்ஜ் போடுவது சிரமம். ஆனால் பெட்ரோல் ஸ்கூட்டர்களை பொருத்தவரை ஆங்காங்கே உள்ள பெட்ரோல் பங்க்களில் பெட்ரோல் நிரப்பிக்கொள்ளலாம். எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் சார்ஜ் ஆக சில மணி நேரங்கள் ஆகலாம். ஆனால் பெட்ரோல் ஸ்டேஷன்களில் பெட்ரோல் நிரப்புவது எளிது.

உங்கள் வாகனம் அதிக நெருக்கடி உள்ள சாலைகளில் சிறிய தூரம் மட்டுமே அதிகம் பயன்படுத்தினால் நீங்கள் தாராளமாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்கலாம். ஆனால் நீங்கள் நீண்ட தூரம் ஓட்டுகிறீர்கள், நெடுஞ்சாலைகளில் அதிகம் பயன்படுத்துகிறீர்கள். அல்லது ஆஃப்ரோடு பயன்பாடு அதிகம் இருக்கும் என்றால் உங்களுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர்கள் தான் சிறந்தது. எலெக்டரிக் ஸ்கூட்டர் இன்னும் பெட்ரோல் ஸ்கூட்டர்களின் செயல்பாடுகளை சமன் செய்யும் அளவிற்கு தொழிற்நுட்பம் வளரவில்லை. அது என்று பெட்ரோல் ஸ்கூட்டரின் செயல்பாடுகளை எல்லாம் சமன் செய்கிறதோ அன்று பெட்ரோல் ஸ்கூட்டர்களின் தேவையே இல்லாமல் போகும் என்பதே உண்மை.