மினி பிக்சல் போனை உருவாக்குகிறதா கூகுள்?

கூகுள் நிறுவனம் அக்டோபர் முதல் வாரத்தில் புதிய பிக்சல் சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.
இந்த நிகழ்வில் பிக்சல் 7 சீரிஸ், பிக்சல் வாட்ச் உள்ளிட்ட சாதனங்கள் அறிமுகமாகும் என கூகுள் ஏற்கனவே அறிவித்து இருக்கிறது.

கூகுள் நிறுவனம் அக்டோபர் 6 ஆம் தேதி “மேட் பை கூகுள்” என்ற பெயரில் தனது தயாரிப்புகளை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியை நடத்த இருக்கிறது. முன்னதாக நடைபெற்ற கூகுள் I/O 2022 நிகழ்வில் இந்த ஆண்டு பிக்சல் 7 சீரிஸ் மற்றும் பிக்சல் வாட்ச் சாதனங்களை அறிமுகம் செய்வதாக கூகுள் அறிவித்து இருந்தது. இரு சாதனங்களை அறிமுகம் செய்வதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், பிக்சல் டேப்லெட் மாடல் ஒன்றையும் தற்போது கூகுள் உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த சாதனம் 2023 வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

இது தவிர பிக்சல் சீரிசில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மற்றும் மினி பிக்சல் போன் உள்ளிட்டவை அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் கூகுள் நிறுவனம் சிறிய ஸ்கிரீன் கொண்ட பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக குறிப்பிட்டு இருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் நெய்லா எனும் குறியீட்டு பெயரில் உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் மத்தியில் பன்ச் ஹோல் வைக்கப்படுகிறது. இது பிக்சல் 6 மற்றும் பிக்சல் 7 சீரிஸ் மாடல்களில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது.

இவை தவிர ஸ்மார்ட்போனின் அம்சங்கள் பற்றி வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பிக்சல் 7 சீரிஸ் மாடல்களுடன் அறிமுகம் செய்யப்படுமா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.

புதிய பிக்சல் போன்கள் வெளியாக இருக்கும் நிலையில் முந்தைய மாடலான பிக்சல் 6A மொபைலுக்கு அதிகப்படியான விலைக்குறைப்பை செய்ய இருக்கிறது கூகுள். இந்த விலைகுறைப்பு விரைவில் வர இருக்கும் ப்ளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் நிகழ இருக்கிறது.

கூகுள் பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போனின் விலை ரூ.43,999 ஆக இருக்கும் நிலையில், பிளிப்கார்ட் பிக் பில்லியன் தின விற்பனையில் ரூ.34,199 என்ற விலையில் கிடைக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் கூடுதல் தள்ளுபடியுடன் இந்த ஸ்மார்ட்போனை ரூ.27,699 என்ற விலையில் வாங்கலாம் என பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது.

பிளிப்கார்ட் பிக் பில்லியன் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. விரைவில் இந்த விற்பனைகள் நேரலைக்கு வர இருக்கிறது. இந்த தினங்களில் கூகுள் பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போன் அதீத தள்ளுபடியுடன் கிடைக்கும் என்பது ஏறத்தாழ உறுதி செய்யப்பட்டு விட்டது.

ரூ.43,999க்கு விற்கப்படும் பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போனை ரூ.34,199 என வாங்கலாம் என்பது போக, கூடுதலாக ப்ரீபெய்ட் கட்டண விருப்பத்தை தேர்ந்தெடுத்தால் ரூ.3500 தள்ளுபடி கிடைக்கும் என்றும், அதேபோல் ஆக்சிஸ், ஐசிஐசிஐ வங்கி பரிவர்த்தனைகளுக்கு ரூ.3000 தள்ளுபடி கிடைக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.