
இதுவரை வெளிநாடுகளில் மட்டுமே இருந்த கூகுள் மேப் செயலியில் உள்ள ஸ்டிரீட் வியூ (street view) அம்சம் தற்போது இந்தியாவில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. ஏற்கனவே தயார் நிலையில் இருந்த போதும் பாதுகாப்பு காரணமாக நீண்ட நாட்களாக செயல்படுத்தப்படாமல் இருந்த இந்த அம்சம் தற்போது முதற்கட்டமாக இந்தியாவின் 10 முக்கிய நகரங்களுக்கு மட்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
இதன் மூலம் கூகுள் மேப் செயலியை வைத்து ஒரு இடத்தை புகைப்படங்களாக 360 டிகிரியில் தெளிவாக காண முடியும். இது நாம் அந்த இடத்தில் இருப்பது போன்ற உணர்வைத் தரும். நாம் ஒரு தெருவின் நடுவில் இருந்து சுற்றிப் பார்த்தால் என்னென்ன தெரியுமோ அதை ஒரு கைபேசி / கணினி மூலம் இருந்த இடத்தில் இருந்தே காணமுடியும். வெளிநாடுகளில் இந்த அம்சம் பல ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகம் ஆகிவிட்டது. இருந்த போதும் இந்தியாவில் தற்போது தான் இந்த அம்சம் பயன்பாட்டுக்கு வந்து இருக்கிறது. இரு தனியார் நிறுவனங்களின் உதவியுடன் இந்தியாவில் கூகுள் நிறுவனம் இந்த அம்சத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது.
இந்த அம்சம் மூலம் உள்ளூர் சாலை அமைப்புகள் மற்றும் போக்குவரத்து தடங்கள் உள்ளிட்டவற்றை அறிந்துகொள்ள முடியும். இது பார்ப்பதற்கு நாம் சாலையில் நின்று நம்மைச் சுற்றி இருக்கும் கடைகள், வீடுகள், தெருக்கள் போன்றவற்றை நேரடியாக பார்ப்பதைப் போன்ற அனுபவத்தைத் தரும்.
முதற்கட்டமாக இந்தியாவில் உள்ள சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூரு, ஐதராபாத், புனே, நாசிக், அமிர்தசரஸ், வதோதரா, அகமத்நகர் ஆகிய 10 நகரங்களில் இந்த ஸ்டிரீட் வியூ அம்சம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதன்மூலம் மேற்கண்ட நகரங்களில் உள்ள சுமார் 1.5 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தை இந்த ஸ்டிரீட் வியூ அம்சம் மூலம் 360 டிகிரியில் புகைப்படங்களாக பார்க்க முடியும் என கூகுள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
படத்தில் இருப்பது போல் ஒரு வாகனத்தின் மேல் 360 டிகிரி கேமரா பொருத்தப்பட்டு அது ஒவ்வொரு சாலை வழியாகவும் செல்வதை நம்மில் சிலர் பார்த்திருக்கலாம். இது பல ஆண்டுகளுக்கு முன்பே துவங்கிய திட்டம். தனியார் அமைப்பு ஆரம்பித்து பின்னர் இதை கூகுள் அந்நிறுவங்களில் இருந்து வாங்கி தனதாக்கிக் கொண்டது. இந்த வாகனம் ஒரு வீதியை கடக்கும் போது அங்கு என்னென்ன இருந்ததோ அது அத்தனையும் இந்த கூகுள் ஸ்ட்ரீட் வியூவில் அப்படியே பதிவாகி இருக்கும். இதன் துல்லியதன்மையின் மூலம் நகரத்தின் மூலை முடுக்கு கூட தெளிவாக தெரியும். ஒரு இடத்திற்கும் மற்றொரு இடத்திற்கும் இடையே இருக்கும் தூரம் என்ன? அதற்கு இடையே இருக்கும் நிறுவனங்கள், வீடுகள், சாலைகள், கடைகள், மின்கம்பங்கள்.. இதுதவிர அங்கு வேறு என்னென்ன இருக்கிறது என்பது 360 டிகிரியில் புகைப்படங்களாக இருக்கும்.
இது மக்களுக்கு பயனுள்ளதாக இருந்தாலும், தீவிரவாதிகள் போன்றோருக்கு கிடைத்தால் அதன்மூலம் மக்கள் விரோத செயலை / குற்றங்களை தெளிவாக திட்டம் தீட்டி செயல்படுத்த ஏதுவாக இருக்கும் என்பதால், நெடுநாட்களாக இத்திட்டம் நிறைவடைந்தும் இந்தியாவில் செயல்படுத்தப்படாமல் இருந்தது. ஆனால் தற்போது இந்த மிகப் பயனுள்ள வசதி மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற காரணத்தால் அதை அறிமுகப்படுத்தி இருக்கின்றனர்.
