ஆன்லைன் விற்பனைதளங்களின் போலி மதிப்புரைக்கு ஃபுல் ஸ்டாப்!

அமேசான் (Amazon), ஃப்ளிப்கார்ட் (Flipkart) போன்ற இ-காமர்ஸ் இணையதளங்களில் போலியான மதிப்புரைகளுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று இந்திய அரசாங்கம் கடுமையாகத் தெரிவித்துள்ளது. ஈ-காமர்ஸ் வலைத்தளங்களில் (E-commerce websites) சில தயாரிப்புகள் மீது பெரும்பாலும் போலி மதிப்புரைகளைக் கொண்டிருப்பதை காண முடிகிறது.

ரெவியூக்கள் எல்லாம் உண்மையானதா?

போலி மதிப்புரை என்றால், ஒரு தயாரிப்பின் மீது வழங்கப்படும் போலியான ரெவியூவாகும் (Reviews). ஒரு தயாரிப்பை விளம்பரப்படுத்த அல்லது அதன் மதிப்பைக் குறைக்க ஆன்லைன் தளங்களில் பல ஆயிரக்கணக்கான ரெவியூக்கள் பதிவிடப்படுகின்றன. இதில் சில மதிப்புரைகள் உண்மையாக இருக்கிறது. வாடிக்கையாளர்கள் எப்போதும் ஒரு பொருளை வாங்குவதற்கு முன்பாக ரெவியூக்களை பார்க்கிறார்கள்.

ஆனால், பெரும்பாலான நேரங்களில் போலியான மற்றும் எதிர்மறையான ரெவியூக்கள் வியாபார நோக்கத்திற்காக ஆன்லைன் தளங்களில் பதிவிடப்படுகின்றன. இது போன்ற போலி ரெவியூ காரணமாக சில நேரங்களில் இது வாங்குபவர்களைத் தவறாக வழிநடத்துகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்படுகிறார்கள். ஆனால், இனி இந்த சிக்கலே இருக்காது.!

அதிரடி முடிவு!

வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்படுவதைத் தடுக்கவும், இதுபோன்ற விஷயங்கள் மேலும் தொடர்ந்து நிகழாமல் இருப்பதை உறுதி செய்யவும் இந்திய அரசாங்கம் ஒரு புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதன்படி, போலி மதிப்புரைகள் மற்றும் சரிபார்க்கப்படாத மதிப்பீடுகளுக்கு எதிராக அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது என்று அறிவித்துள்ளது.
பொருட்கள் மற்றும் சேவைகளைச் சரிபார்க்க நுகர்வோர் மதிப்புரைகளைச் சார்ந்திருக்கும் நிறுவனங்களுக்கான புதிய கட்டமைப்பை இந்திய அரசாங்கம் உருவாக்கியுள்ளது. இந்த புதிய அதிரடி நடவடிக்கையின் கீழ் கூகுள், மெட்டா, இன்ஸ்டாகிராம், அமேசான், பயண இணையதளங்கள் மற்றும் உணவு விநியோக பயன்பாடுகள் போன்ற அனைத்து ஆன்லைன் தளங்களும் அடக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களைத் தவறாக வழிநடத்தும் ஆன்லைன் தளங்கள் வாடிக்கையாளர்களைத் தவறாக வழிநடத்தும் ஆன்லைன் தளங்கள் ஆன்லைனில் தயாரிப்புகளின் மீது போலி மதிப்புரைகளைத் தடுக்க பல்வேறு தொழில்களில் உள்ள பல நிறுவனங்களுக்கு ஒரு கட்டமைப்பை இந்திய அரசாங்கம் உருவாக்கியுள்ளது. போலி ரெவியூக்களால் வாடிக்கையாளர்கள் பல நேரங்களில் ஏமாற்றப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. வாடிக்கையாளர்களைத் தவறாக வழிநடத்தும் ஆன்லைன் தொடர்பு மற்றும் இ-காமர்ஸ் தளங்களைச் சீர் செய்ய அரசாங்கம் இந்த முடிவைக் கையில் எடுத்துள்ளது.

நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தை மேற்கோள் காட்டி இ-காமர்ஸில் போலி மற்றும் ஏமாற்றும் மதிப்புரைகளைச் சரிபார்க்க ஒரு கட்டமைப்பை உருவாக்க நுகர்வோர் விவகாரங்கள் துறை ஜூன் மாதம் ஒரு குழுவை அமைத்தது. கடந்த காலங்களில் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற தளங்களில் ஏராளமான எதிர்மறையான போலி மதிப்புரைகள் காணப்பட்டதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேபோல், போலியான மதிப்புரைகளை நிறுவனம் தெரிந்தே சில நேரங்களில் ஏற்றுக்கொண்டதற்காக விமர்சிக்கப்பட்டுள்ளது. இதனால், ஒட்டுமொத்த தயாரிப்பு பற்றிய உண்மையைச் சோதனை செய்ய முடியாமல் நுகர்வோர் தவிக்கும் நிலை உருவாகுகிறது. அரசாங்கத்தின் இந்த முயற்சிக்குப் பிறகு ஆன்லைன் மதிப்பாய்வுகளுக்கான புதிய வழிகாட்டுதல்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

அதேபோல், ஆன்லைன் தளங்களில் இருக்கும் தயாரிப்புகள் மீதான தகவல் துல்லியத்தை மேம்படுத்தவும் சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மெட்டா மற்றும் கூகுள் போன்ற இயங்குதளங்கள் இந்த விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, குறிப்பிட்ட 6-8 வழிமுறைகள் மூலம் மதிப்பாய்வுக்குப் பின்னால் இருக்கும் உண்மையான நபரை அவர்கள் சரிபார்க்க வேண்டும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.