எலக்ட்ரிக் வாகனங்களுக்கு 100% சாலை வரி குறைப்பு 2025 வரை நீட்டிப்பு- தமிழக அரசு அதிரடி!

தமிழக அரசு மின்சார வாகன விற்பனையை அதிகரிக்கும் விதமாக அவற்றிற்கு வழங்கப்பட்டு வரும் 100 சதவீத சாலை வரி குறைப்பு திட்டத்தை 2025 ஆம் ஆண்டு வரை நீட்டிக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெட்ரோல் வாகனங்களை ஒப்பிடும் போது எலக்ட்ரிக் வாகனஙகள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. இதன் விளைவாக அடித்தட்டு மக்களின் எட்டாக் கனியாக எலெக்ட்ரிக் வாகனங்கள் இருக்கின்றன. இதன் காரணமாக மத்திய அரசு மானியம் உட்பட பல்வேறு சிறப்பு சலுகைகளை வழங்கி வருகின்றது.

இருந்த போதிலும் இன்னும் ஒரு சில தரப்பு மக்களால் வாங்க முடியாத இடத்தில் எலெக்ட்ரிக் வாகனங்கள் இருக்கின்றன. எனவேதான் இந்த விஷயத்தில் மாநில அரசுகளும் தங்களது பங்களிப்பை வழங்கிக் கொண்டு இருக்கின்றன. அந்தவகையில், தமிழக அரசு தனது பங்களிப்பாக வழங்கி வரும் 100 சதவீத வரி குறைப்பு திட்டத்தை இன்னும் சில ஆண்டுகள் நீட்டிக்க திட்டம் போட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி வரும் 2025 ஆம் ஆண்டு வரை 100 சதவீத வரி ரத்து குறைப்பு நீட்டிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. மின்சார வாகனங்களின் விற்பனையை இரு மடங்கு ஆக்கும் பொருட்டு தமிழக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளது. இதனால் மின்சார வாகனங்களின் விலை 8 சதவீதம் வரை குறையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தமிழ்நாடு அரசு 2008 ஆம் ஆண்டில் இருந்து மின்சார வாகனங்களுக்கு குறைவான வரியை விதிக்கும் செயலை மேற்கொண்டு வருகின்றது. அந்தவகையில், மின்சார இருசக்கர வாகனங்களுக்கு ரூ. 750ம், தனிப்பட்ட பயன்பாட்டு வசதிக் கொண்ட (பிரைவேட்) கார்களுக்கு அதன் விலையில் 3 சதவீதம் முதல் 6 சதவீதம் வரை மட்டுமே வரி வசூலிக்கப்படுகின்றது. இதன் பின்னரே இந்த வரி தொகையை அரசாங்கம் பாதியாகக் குறைத்தது. இந்த பாதி வரி விதிப்புகூட மின் வாகன விற்பனைக்கு எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காக 2019 இல் முதல் முறையாக 100 சதவீதம் வரி ரத்து அறிவிக்கப்பட்டது. முதலில் 2022 டிசம்பர் வரை மட்டுமே இந்த திட்டம் நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டது. எனவே வரும் ஜனவரி முதல் மின்சார வாகனங்களின் விலை மீண்டும் சற்று உயரும் என அஞ்சப்பட்டது.

இந்த நிலையிலேயே உரிய நடவடிக்கை எடுக்கும் விதமாக இந்த 100 சதவீத வரி தள்ளுபடியை 2025 ஆம் ஆண்டு வரை நீட்டிக்க தமிழக அரசு ஆலோசித்து வருகின்றது. ஏற்கனவே இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழக போக்குவரத்துத்துறை முன்மொழிந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த தகவலே தற்போது வெளியாகி ஒட்டுமொத்த தமிழக வாசிகளையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கின்றது. மக்களிடம் இருந்து மட்டுமல்ல ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கமும் தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு வரவேற்பை வழங்கி இருக்கின்றது.

ஆனால், இந்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. வெகு விரைவில் இது குறித்த தகவல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது, தனி நபர் மின்சார வாகனம் வாங்கினால் ரூ. 500 முதல் ஆயிரத்து ஐநூறு ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது. ஸ்மார்ட் கார்டுக்காக இந்த கட்டணம் வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தகுந்தது. ஆன்-ரோடுக்கான கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை.

சராசரியாக ஒவ்வொரு மாதமும் 4,500க்கும் அதிகமான மின்சார வாகனங்கள் புதிதாக சாலைக்கு பயன்பாட்டிற்கு வந்த வண்ணம் இருக்கின்றன. இதன் விளைவாக இந்த ஆண்டு மட்டும் 58 ஆயிரம் எலெக்ட்ரிக் வாகனங்கள் புதிதாக இணைந்திருக்கின்றன. அதேவேலையில், தனி நபர் வாகனங்களை போல் வர்த்தக மின்சார வாகனங்களுக்கு வரி சலுகை வழங்கப்படுவதில்லை. எனவேதான் பெங்களூரு மற்றும் ஹைதராபாத்தைப் போல் இங்கு அதிகளவில் நம்மால் எலெக்ட்ரிக் டாக்சிகளைக் காண முடிவதில்லை. விரைவில் அதற்கும் ஏதேனும் தீர்வு கிடைக்கும் என நம்புவோம்.