முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்கிறது ஹீரோ

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விடா பிராண்டின் கீழ் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ஸ்கூட்டரின் இந்திய வெளியீட்டு விவரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அக்டோபர் 7 ஆம் தேதி எலெக்ட்ரிக் வாகன சந்தையில் களமிறங்க இருக்கிறது. இந்திய சந்தையில் விடா பிராண்டின் கீழ் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

முன்னதாக இந்த ஸ்கூட்டர் ஜூலை 1 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருந்த நிலையில், திடீரென இதன் அறிமுக தேதி மாற்றப்பட்டது. சிப்செட் குறைபாடு காரணமாகவே ஸ்கூட்டர் வெளியீடு தாமதமானது. தற்போது இந்த ஸ்கூட்டரின் வெளியீடு அக்டோபர் மாத முதல் வாரத்தில் நடைபெற இருக்கிறது.

கடந்த ஆண்டு இந்த ஸ்கூட்டரின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது. அதில் குறிப்பிட்டபடி புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அசத்தல் ஸ்டைலிங் மற்றும் சிறப்பான செயல்திறனைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரீமியம் பிரிவில் அறிமுகம் செய்வதற்கு மாற்றாக புது ஸ்கூட்டரை அனைவரும் வாங்கக்கூடிய விலை பிரிவில் அறிமுகம் செய்ய விடா பிராண்டு முடிவு செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டதும் ஹீரோ விற்பனை மையங்களை வந்தடையும் என தெரிகிறது.

முதற்கட்டமாக இந்த ஸ்கூட்டர் தேர்வு செய்யப்பட்ட சில நகரங்களில் மட்டும் விற்பனைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது. ஹீரோவின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விவரங்கள் மர்மமாகவே உள்ளன. எனினும், இந்திய எலெக்ட்ரிக் இருசக்கர வாகன பிரிவில் விடா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் பஜாஜ் செட்டாக் மற்றும் டிவிஎஸ் ஐகியூப் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது.

இந்நிலையில் ஹோண்டா 2 வீலர்ஸ் நிறுவனமும் எலக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் களமிறங்க முடிவு செய்து இருப்பதாக சில நாட்களுக்கு முன் தகவல் வெளியாகி இருந்தது. தற்போது ஹோண்டாவின் முதல் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனம் எப்போது அறிமுகமாகும் இது எந்த மாடலாக இருக்கும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களில் முதன்மை மாடலாக எலெக்ட்ரிக் மொபெட்டை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த மாடல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் அறிமுகமாகும் என தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவன தலைவர், நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி அடுஷி ஒகடா தெரிவித்தார்.

எலெக்ட்ரிக் பைக், எலெக்ட்ரிக் மொபெட் மற்றும் எலெக்ட்ரிக் வாகனம் என மூன்று பிரிவுகளில் எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்வதில் கவனம் செலுத்த ஹோண்டா முடிவு செய்து இருக்கிறது. மூன்று பிரிவுகளிலும் அதிக வேகம் தான் வித்தியாசமாக இருக்கும். எலெக்ட்ரிக் பைக் பிரிவில் வாகனத்தின் அதிகபட்ச வேகம் மணிக்கு 25 கிமீ ஆக இருக்கும். இந்த வாகனங்களை பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. எலெக்ட்ரிக் மொபெட் மாடல் மணிக்கு அதிகபட்சம் 50 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கும். இந்திய சந்தையில் ஹோண்டா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் வாகனம் எலெக்ட்ரிக் மொபெட் தான் என்றும் அடுஷி ஒகடா தெரிவித்து இருக்கிறார். இதைத் தொடர்ந்து அதிவேகமாக செல்லும் எலெக்ட்ரிக் வாகனம் அறிமுகம் செய்யப்படும்.

எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான கவனம் சமீப காலங்களில் அதிகரித்து வந்த போதிலும், கம்யுட்டர் மோட்டார்சைக்கிள் பிரிவில் பெட்ரோல் மாடல்களுக்கு இன்னமும் அதிக வரவேற்பு இருந்து கொண்டு தான் இருக்கிறது, இதன் காரணமாக அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஹோண்டாவின் முதன்மை கவனம் இந்த பிரிவின் மீது செலுத்தப்படும் என மேலும் அவர் தெரிவித்தார்.