10 எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை உருவாக்க இருக்கிறது ஹோண்டா!

ஜப்பானிய இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹோண்டா வெகு விரைவில் 10 எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களின் உற்பத்தி பணிகளைத் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மின்சார இருசக்கர வாகனங்களை உருவாக்கும் பணியில் மிக தீவிரமாக ஹோண்டா நிறுவனம் களமிறங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிறுவனம் அடுத்தடுத்து 10 புதிய எலெக்ட்ரிக் டூ-வீலர்களை உலகளவில் வெளியீடு செய்ய திட்டமிட்டுள்ளது. அனைத்தும் வருகின்ற 2025 ஆம் ஆண்டிற்குள் அறிமுகம் செய்யப்பட்டுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
மின்சார இருசக்கர வாகனங்களின் உற்பத்தியை குறிப்பிடும் வகையில் தயாரித்திருக்கும் பிரசன்டேஷன் படங்களே தற்போது இணையத்தில் கசிந்துள்ளது. இந்த படங்களின் வாயிலாகவே நிறுவனம் ஒட்டுமொத்தமாக பத்து புதுமுக எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய இருக்கின்றது என்பது வெளியுலகிற்கு தெரிய வந்திருக்கின்றது.

இவை சீனா, ஜப்பான், ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளுக்கான வாகனங்கள் என்பதும் அந்த பிரசன்டேஷன் வாயிலாக தெரிய வந்திருக்கின்றது. மேலும், இதில் இருப்பவற்றில் ஐந்து இருசக்கர வாகனங்கள் தினசரி பயன்பாட்டிற்கு (கம்யூட்டர்)-ஆனவை என்பதும் தெரிய வந்திருக்கின்றது. இவை மட்டுமின்றி நிறுவனத்தின் லிஸ்டில் நியோ ரெட்ரோ, க்ரூஸர் மற்றும் பெரிய மேக்ஸி ரக எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களும் உள்ளன.

இதுதவிர சிறுவர்களுக்கான டர்ட் ரக எலெக்ட்ரிக் பைக்கும் ஹோண்டா நிறுவனத்தின் பட்டியலில் இடம் பிடித்திருக்கின்றன. இந்த அனைத்து வாகனங்களும் 2024 தொடங்கி 2025 ஆம் ஆண்டிற்குள் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியாவில் தற்போது மின்சார வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, இருசக்கர வாகனங்களுக்கு சற்று கூடுதல் வரவேற்புக் கிடைக்கத் தொடங்கியிருக்கின்றது. இந்த சூழலை பயன்படுத்திக்கொள்ளும் விதமாக ஹோண்டா நிறுவனம் இந்தியாவிலும் அதன் சில எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை விற்பனைக்குக் கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்போது கசிந்திருக்கும் படங்களைப் பார்க்கையில், ஆக்டிவா வெர்ஷனிலும் ஓர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்குக் கொண்டு வர இருப்பது தெரிய வந்திருக்கின்றது. இதையே நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக கடந்த சில தினங்களாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதுகுறித்து எந்தவொரு தகவலையும் ஹோண்டா நிறுவனம் தெரிவிக்கவில்லை என்றாலும், இந்திய இருசக்கர வாகன பிரியர்கள் இப்போதே இவ்வாகனத்திற்காக ஆவலுடன் காத்திருக்க தொடங்கிவிட்டனர்.

இந்தியாவில் ஆக்டிவா ஸ்கூட்டருக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு உண்டு. இதனாலேயே இந்தியாவில் ஹோண்டா நிறுவனம் ஆக்டிவா போன்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்குக் கொண்டு வரும் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால், தற்போது விற்பனையில் இருக்கும் ஸ்கூட்டரைக் காட்டிலும் பல மடங்கு மாறுபட்ட தோற்றத்தில் இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது சற்று புதுமையான மற்றும் ஸ்போர்ட்டியான தோற்றத்தைப் பெற்றிருக்கும். குறிப்பாக, இது ஓர் எலெக்ட்ரிக் வாகனம் என்பதை வெளிக்காட்டுகின்ற வகையில் குறிப்பிட்ட சில மாற்றங்களும் இடம் பெற இருக்கின்றன. ஆனால், என்ன மாதிரியான மாற்றங்கள் மற்றும் என்ன மாதிரியான சிறப்பு வசதிகளுடன் அது சந்தையை வந்தடையும் என்பதை ஹோண்டா நிறுவனம் தெரிவிக்கவில்லை.

நவீன காலத்திற்கு ஏற்ற தொழில்நுட்ப கருவிகள் மற்றும் ஸ்வாப்பபிள் பேட்டரி டெக்னாலஜி உள்ளிட்ட அம்சங்கள் ஹோண்டா ஆக்டிவா ஸ்டைலிலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் எதிர்பார்க்கப்படுகின்றது.