ஆட்டோ பைலட், ப்ளேஸ்டேஷன் வசதிகளோடு அறிமுகமான ப்ரோடோடைப் எலெக்ட்ரிக் கார் அஃபீலா!

ஹோண்டாவும், சோனியும் இணைந்து உருவாக்கி இருக்கும் மின்சார கார் வெளியீடு செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது அமெரிக்காவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் புகழ்பெற்ற சிஇஎஸ் நிகழ்ச்சியில் சோனி- ஹோண்டா கூட்டணியில்,  ‘அஃபீலா’ எனும் எலெக்ட்ரிக் காரை வெளியீடு செய்துள்ளன. இது ஓர் எலெக்ட்ரிக் செடான் ரக காராகும். சோனியின் விஷன் எஸ் எலெக்ட்ரிக் காரை போலவே இது இருப்பதை நம்மால் உணர முடிகிறது. சோனி நிறுவனம் 2020 ஆம் ஆண்டில் நடைபெற்ற சிஇஎஸ் நிகழ்ச்சியின்போது கான்செப்ட் மாடலாக அறிமுகம் செய்த எலெக்ட்ரிக் காரே விஷன் எஸ் ஆகும்.

காருக்குள் பிளே ஸ்டேஷன்!

இந்த காரில் யாரும் எதிர்பார்த்திராத தொழில்நுட்ப வசதிகளை வழங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தவகையில் பெரிய திரை, பிளே ஸ்டேஷன், போன்ற சிறப்பம்சங்கள் எல்லாம் இடம் பெற இருப்பதாக கூறப்படுகின்றது. இதனால், இந்த காரில் பயணிக்கும்போது என்டர்டெயின்மென்டுக்கு சற்றும் குறைச்சலே இருக்காது. சோனி, ஹோண்டா தயாரித்திருக்கும் இந்த காரில் ஆட்டோ பைலட் போன்ற சிறப்பு வசதிகளையும் வழங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சில முக்கிய சேவைகளை நிறுவனம் சந்தா திட்டத்தின்கீழ் வழங்க இருப்பதாகக் கூறப்படுகின்றது. காரை விற்பதனால் கிடைக்கும் லாபம் மட்டுமின்றி, விற்பனைக்கு பின்னரும் தொடர்ச்சியாக லாபத்தை ஈட்டும் வகையில் பல்வேறு சிறப்பு சேவைகளை அஃபீலாவில் வழங்க சோனி திட்டமிட்டுள்ளது.

சொகுசு வசதிகள் ஏராளம்

வடிவமைப்பைப் பொருத்த வரை மிகவும் நேர்த்தியான காராக அஃபீலாவை சோனி- ஹோண்டா கூட்டணி உருவாக்கி இருக்கின்றது. தான் ஓர் சொகுசு வசதிகள் நிறைந்த கார் என்பதை தோற்றத்திலேயே அஃபீலா நமக்கு உறுதிப்படுத்துகின்றது. இதில் கை பிடிகளை நம்மால் காண முடியவில்லை. கார் உரிமையாளர் அருகில் தானாகவே திறக்கும் வசதி இதில் கொடுக்கப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் அடிப்படையிலேயே காரின் எந்த கதவிலும் கை பிடி வழங்கப்படவில்லை.

இதேபோல், பின் பக்கத்தை பார்ப்பதற்கு கண்ணாடிகளுக்கு பதிலாக கேமிராக்கள் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இது காருக்குள் இருந்தபடியே காரை சுற்றிலும் நடை பெறும் சம்பவங்களை நேரடியாக திரை வாயிலாக காண்பிக்கும். எனவே சிறு சிறு அசைவுகளைகூட தவற விடாமல் நம்மால் காண முடியும். இந்த காரை உருவாக்கியதில் ஹோண்டா நிறுவனத்தின் பங்களிப்பை போலவே சோனியின் பங்களிப்பும் மிக அதிகமாகவே உள்ளது. தொழில்நுட்ப கருவிகளின் உருவாக்கத்திலும் சோனி பெரும் பங்களிப்பை வழங்கி இருக்கின்றது.

பெரிய பேட்டரி

அனைத்திலும் அஃபீலா மிக சிறப்பான எலெக்ட்ரிக் காராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, தற்போது விற்பனையில் இருக்கும் எந்தவொரு எலெக்ட்ரிக் காரிலும் இல்லாத அம்சங்கள் பல இதில் இடம் பெற இருக்கின்றது. ஆகையால், ஆப்பிள் நிறுவனம் தயாரித்துக் கொண்டிருக்கும் எலெக்ட்ரிக் மிக சிறந்த போட்டியாளனாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அஃபீலா கான்செப்ட் எலெக்ட்ரிக் காரில் 100 kWh திறன் கொண்ட பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மைலேஜ்

இதை ஒரு முறை சார்ஜ் செய்யும்பட்சத்தில் 500 கிமீ ரேஞ்ஜை வழங்கும். இந்த கார் விற்பனைக்காக தயாரிக்கப்படும்போது இதைவிட அதிகம் ரேஞ்ஜ் தரும் வகையில் உருவாக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. உயர் ரக தொழில்நுட்பங்களான ஹை டெக் சென்சார்கள், கேமிராக்கள், லிடார் சென்சார்கள் மற்றும் ரேடார் மாடுல்கள் உள்ளிட்டவையும் அஃபீலாவில் இடம் பெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. செமி -அட்டானமஸ் டிரைவிங்கை வழங்கும் விதமாக இந்த அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

விலை

இதுமட்டுமின்றி, ரிமோட் வாயிலாகவே கார் இருக்கும் இடம் இடத்தைக் கண்டறிதல் மற்றும் நம்மை தேடி காரை வரவழைத்தல் போன்றவற்றை செய்து கொள்ள முடியும். அஃபீலா எலெக்ட்ரிக் ரூ. 82 லட்சத்திற்கும் அதிகமான விலையில் விற்பனைக்குக் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. முதலில் இந்த எலெக்ட்ரிக் கார் அமெரிக்கா போன்ற நாடுகளிலேயே விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கிறது. 2025 அல்லது 2026 ஆம் ஆண்டுகளுக்குள் இதன் விற்பனை தொடங்கிவிடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது இந்தியாவுக்கு வருவதற்கு பெரும்பாலும் வாய்ப்பு இல்லை.