
கலக்கத்தில் ஷாவ்மி, ரியல்மி நிறுவனங்கள்
ரூ.12 ஆயிரத்துக்கும் கீழ் விலையுள்ள சீன போன் விற்பனையை தடை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உள்ளூர் மொபைல் தயாரிப்புகளை ஊக்குவிப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
சீன மொபைல் போன்கள் குறிப்பாக ஷாவ்மி கார்ப் குறைந்த விலை ஸ்மார்ட்போன் விற்பனையில் முன்னணியில் உள்ளது. உலக மொபைல் சந்தையில் இந்தியா 2வது இடத்தில் இருக்கிறது. ஷாவ்மி, ரியல்மி போன்ற நிறுவனங்களுக்கு இந்தத் தடை அமலுக்கு வந்தால் அது மிகப்பெரிய பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.
கடந்த திங்களன்று வெளிவந்த ஆதாரங்களை மேற்கோள்காட்டி ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையின்படி, “இந்திய அரசாங்கம் சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் பட்ஜெட் ரூ.12,000க்கும் குறைவான விலை நிர்ணயம் கொண்ட ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் விற்பதை தடுக்க முயற்சிக்கிறது!” இந்த நடவடிக்கை, உலகின் இரண்டாவது பெரிய மொபைல் சந்தையில் (இந்தியா) இருந்து சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களை கீழே தள்ளக்கூடும் என்பதில் சந்தேகமே இல்லை. இந்திய அரசாங்கத்தின் இந்த தடை உண்மையாக இருந்தால், ரூ.12,000 க்குள் என்கிற விலை பிரிவின் கீழ், 50 சதவீத சந்தைப் பங்கை கொண்டுள்ள Xiaomi மற்றும் Realme போன்ற நிறுவனங்களுக்குப் பெரிய அடி விழலாம் என்று கவுண்டர்பாயிண்ட் ரிசர்ச் தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே, ஷாவ்மி, ஆப்போ, விவோ போன்ற செல்போன் விற்பனை நிறுவனங்களின் நிதி மேலாண்மையை கண்காணிப்பு வளையத்திற்குள் மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. ஒப்போ, விவோ இந்தியா மற்றும் சியோமி ஆகிய மூன்று சீன மொபைல் நிறுவனங்களும் வரி ஏய்ப்பு செய்ததாக கூறப்படும் வழக்குகளை இந்திய அரசு விசாரித்து வருகிறது. இந்நிறுவனங்களுக்கு, வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI) நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த வாரம் ராஜ்ய சபாவில் தெரிவித்தார். இதனையடுத்து ZTE கார்ப், ஹுவேய் டெக்னாலஜிஸ் கோ மொபைல் நிறுவனங்களுக்கும் மத்திய அரசு கெடுபிடி விதித்தது.
இப்போது, ரூ.12 ஆயிரத்துக்கும் கீழ் விலையுள்ள சீன போன் விற்பனையை தடை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் ஷாவ்மி, ரியல்மீ, ட்ரான்ஸன் போன்ற நிறுவனங்கள் அச்சத்தில் உள்ளன.
2020 ஜூன் மாதத்தில் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா, சீனா மோதலுக்குப் பின்னர் இந்தியா சீன செயலிகளை தடை செய்தது. வீசேட், பைட்டான்ஸ், டிக்டாக் போன்ற பிரபல செயலிகள் பல தடை செய்யப்பட்டன.
நாட்டு மக்களுக்கு பாதுகாப்பான, நம்பகமான மற்றும் பொறுப்பான இணையத்தை உறுதி செய்வதற்காக தகவல் தொழில்நுட்ப (ஐடி) சட்டத்தின் விதியின் கீழ், மத்திய அரசு இதுவரை 320 சீன செயலிகள் முடக்கப்பட்டுள்ளன.
உள்ளூர் மொபைல் தயாரிப்பு நிறுவனங்களான லாவா, மைக்ரோமேக்ஸ் மொபைல் நிறுவனங்கள் செயல்பாட்டை ஊக்குவிக்கவே இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளாதாக கூறப்படுகிறது.
