அறிமுகமானது Samsung Galaxy Z Fold 4

Samsung நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனாக Galaxy Z Fold 4 ஆனது இன்று (ஆகஸ்ட்.10) இந்தியா உட்பட உலகளவில் அறிமுகமானது.
சாம்சங் நிறுவனத்தின் கூற்றுப்படி, Galaxy Z Fold 4 ஆனது சிறந்த கேமரா அனுபவத்தை வழங்கும்; சக்திவாய்ந்த ஸ்மார்ட்போன் ஆக இருக்கும்; மேலும் பழைய ஃபோல்டபிள் மாடல்களை விட இலகுவானதாக, மெலிதானதாக இருக்கும்.

அண்டர்-டிஸ்ப்ளே கேமரா, 7.6-அங்குல டைனமிக் AMOLED 2X இன்ஃபினிட்டி ஃப்ளெக்ஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 8+ Gen 1 SoC சிப்செட் போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்யும் Galaxy Z Flip 4 ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள், விலை மற்றும் விற்பனை விவரங்கள் குறித்துப் பார்க்கலாம்.

இரட்டை சிம் (நானோ) ஆதரவுடன் வரும் Samsung Galaxy Z Fold 4 ஆனது ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் அடிப்படையின் மேல் சாம்சங்கின் சொந்த One UI 4.1.1 மூலம் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனின் 7.6 அங்குல டைனமிக் AMOLED 2X இன்ஃபினிட்டி ஃப்ளெக்ஸ் டிஸ்ப்ளேவானது (infinity flex display) முதன்மை டிஸ்பிளேவாக செயலாற்றுகிறது. கவர் டிஸ்பிளேக்கு வரும்போது, இதில் 6.2-அங்குல HD+ (904×2,316 பிக்சல்ஸ்) டைனமிக் AMOLED 2X டிஸ்ப்ளே பேக் செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டுமே 120Hz ரெஃப்ரெஷ் ரேட்-ஐ ஆதரிக்கின்றன. முன்னரே குறிப்பிட்டபடி, சாம்சங் Galaxy Z Fold 4 ஆனது குவால்காம் Snapdragon 8+ Gen 1 SoC கொண்டு இயக்கப்படுகிறது, அது 12ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை, இந்த ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் ஆனது மொத்தம் 5 கேமராக்களை கொண்டுள்ளது. ஒன்று கவர் டிஸ்பிளேவில் உள்ளது, மற்றொன்று மெயின் டிஸ்பிளேவில் ‘அண்டர் ஸ்க்ரீன் கேமரா’வாக உள்ளது. மீதமுள்ள மூன்று கேமராக்கள் ரியர் பேனலில் ட்ரிபிள் கேமரா செட்டப்பாக உள்ளன. இதன் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பில், டூயல் பிக்சல் ஆட்டோஃபோகஸ் (dual pixel autofocus), ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS), 85 டிகிரி ஃபீல்ட் ஆஃப் வியூ ஆகியவற்றை வழங்கும் 50-மெகாபிக்சல் மெயின் சென்சார் + 12-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா (123 டிகிரி ஃபீல்ட் ஆஃப் வியூ) + 10-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா உள்ளன.

மெயின் டிஸ்பிளேவின் கீழ் உள்ள செல்ஃபி கேமராவில் 4 மெகாபிக்சல் சென்சார் உள்ளது, இது எஃப்/1.8 அபெர்ச்சர் லென்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. கவர் டிஸ்ப்ளேவில் உள்ள செல்ஃபி கேமராவில் 10-மெகாபிக்சல் சென்சார் உள்ளது, இது எஃப்/2.2 அபெர்ச்சர் லென்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. 1TB வரையிலான சேமிப்புத்திறனுடன் வரும் இந்த ஸ்மார்ட்போனில் பக்கவாட்டில் ஃபிங்கர் பிரிண்ட் சென்சாரும் உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 4,400mAh டூயல் பேட்டரியை பேக் செய்கிறது. ஆனால் இதற்கான 25W சாம்சங் சார்ஜர் ஆனது பாக்ஸ் உடன் அனுப்பப்படாது; தனியாகவே விற்கப்படும்.

சாம்சங் Galaxy Z Fold 4 ஸ்மார்ட்போனின் இந்திய விலை மற்றும் விற்பனை விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் மற்ற சந்தைகளில் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 4 ஸ்மார்ட்போன் ஆனது (இந்திய மதிப்பின்படி) தோராயமாக ரூ.1,42,700 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Beige, Gray green மற்றும் Phantom Black என்கிற 3 நிறத் தேர்வுகளில் வெளியாகி உள்ள இந்த ஸ்மார்ட்போன் 12ஜிபி ரேம் + 256ஜிபி, 12ஜிபி ரேம் + 512ஜிபி மற்றும் 12ஜிபி ரேம் + 1டிபி என்கிற 3 வகைகளில் கிடைக்கும்.