வெளியானது 307 கிமீ மைலேஜ் தரும் அல்ட்ராவைலட் F77

அல்ட்ராவைலட் நிறுவனம் அதன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எஃப்77 எலெக்ட்ரிக் பைக்கை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. ஓர் சிறப்பு பதிப்புடன் சேர்த்து மொத்தமாக மூன்று விதமான தேர்வுகளில் கிடைக்கும்.

பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் மின் வாகன உற்பத்தி நிறுவனமான அல்ட்ராவைலட் ஆட்டோமோட்டிவ் அதன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எலெக்ட்ரிக் பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. எஃப் 77 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளையே விற்பனைக்குக் களமிறக்கி இருக்கிறது. இது நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக் மாடலாகும். இந்த மின்சார பைக்கிற்கு ரூ. 3.8 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அல்ட்ராவைலட் இது ஆரம்ப நிலை வேரியண்டின் விலை ஆகும். ஆம், அல்ட்ராவைலட் ஆட்டோமேட்டிவ் தனது எஃப்77 எலெக்ட்ரிக் பைக்கை இரு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்கு வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. எஃப் 77 மற்றும் எஃப்77 ரெகோன் ஆகிய இரு தேர்வுகளிலேயே இந்த மின்சார பைக் விற்பனைக்குக் கிடைக்கும். இதில் எஃப்77 ரெகோன் உயர்நிலை தேர்வாகும். இதில் அதிக ரேஞ்ஜ் தரும் பேட்டரி பேக்கை நிறுவனம் பயன்படுத்தியிருக்கின்றது. இதனால் இதன் விலையும் சற்று அதிகமாக உள்ளது. ரூ. 4.55 லட்சம் விலையே எஃப்77 ரெகோனுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர மூன்றாவதாக லிமிடெட் எடிசனிலும் நிறுவனம் விற்பனைக்கு வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது. இதனை நிறுவனம் வெறும் 77 யூனிட்டுகள் மட்டுமே விற்பனைக்கு வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது. இவை ஸ்பெஷல் எடிசன்கள் என்பதால் 001 தொடங்கி 077 வரையிலான எண்களைக் கொண்டு விற்பனைக்கு வழங்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், இந்த லிமிடெட் எடிசனை ரூ. 5.5 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையாக நிர்ணயித்துள்ளது. தெளிவாகக் கூற வேண்டும் என்றால் சர்வதேச தயாரிப்புகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் இந்த மின்சார பைக்கை இந்திய நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது. இதுமட்டுமின்றி பலவிதமான நிறங்களிலும் இதனை வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளது. அந்தவகையில், ஏர் ஸ்ட்ரைக், ஷேடோவ் மற்றும் லேசர் உள்ளிட்ட நிறங்களிலேயே எஃப்77 வழங்கப்பட இருக்கின்றது.

சிறப்பம்சங்கள்

இந்த தேர்வில் 27 கிலோவாட் பவரை வெளியேற்றக் கூடிய மின்சார மோட்டார் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இது 36.2 எச்பி பவருக்கு இணையான திறன் ஆகும். இது 85 என்எம் டார்க்கை வெளியேற்றும். டாப் ஸ்பீடு மணிக்கு 142 கிமீ ஆகும். முழு சார்ஜில் 206 கிமீ வரை ரேஞ்ஜ் தரும். இதற்காக 7.1 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இத்துடன், மூன்று லெவல் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம், மூன்று விதமான ரைடிங்கள் உள்ளிட்டவை இதில் வழங்கப்பட்டிருக்கின்றன. கிளைட், காம்பேட் மற்றும் பேலிஸ்டிக் ஆகிய மூன்று விதமான ரைடிங் மோட்களே எஃப்77 தேர்வில் வழங்கப்பட்டிருக்கின்றது.

அல்ட்ராவைலட் எஃப் 77 ரெகோன்

மேலே பார்த்த எஃப்77 தேர்வுகளில் வழங்கப்பட்டிருக்கும் பெரும்பாலான அம்சங்கள் இந்த ரெகோன் எஃப்77லும் வழங்கப்பட்டிருக்கின்றன. ஆனால், பேட்டரி மற்றும் மின் மோட்டார் விஷயத்தில் இது மாறுபட்டதாக இருக்கின்றது. 38.9 எச்பி பவரை வெளியேற்றக் கூடிய மின்சார மோட்டாரே எஃப்77 ரெகோனில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இது 95 என்எம் டார்க்கை வெளியேற்றும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 147 கிமீ ஆகும். இதில், 10.3 kWh திறன் கொண்ட பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. இதை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 307 கிமீ தூரம் பயணிக்கலாம்.

ஸ்பெஷல் எடிசன்

மேலே பார்த்த இரு தேர்வுகளைக் காட்டிலும் இது பலமடங்கு அதிக அம்சங்கள் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது. இந்த தேர்வில் சற்று அதிக பவரை வெளியேற்றக் கூடிய மின் மோட்டாரே பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. 40.2 எச்பியையும், 100 என்எம் டார்க்கையும் இதில் பொருத்தப்பட்டிருக்கும் மின் மோட்டார் வெளியேற்றும். பேட்டரி பேக் விஷயத்தில் இந்த சிறப்பு பதிப்பும், எஃப்77 ரெகோனும் ஒரே மாதிரியானதாக இருக்கின்றது. இத்தகைய சூப்பரான வசதிகளுடனேயே அல்ட்ராவைலட் ஆட்டோமோட்டிவ் நிறுவனம் அதன் எஃப் 77 எலெக்ட்ரிக் பைக்கை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

அல்ட்ராவைலட் நிறுவனம் இந்த மின்சார பைக்கிற்கு ஏற்கனவே புக்கிங் பணிகளை இந்தியாவில் தொடங்கிவிட்டது. அக்டோபர் 23 இல் இருந்து பணிகள் நடைபெற்று வருகின்றது. ரூ. 10 ஆயிரம் முன் தொகையிலேயே புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருகின்றன. சிறப்பு வசதிகளாக எலெக்ட்ரிக் பைக்கில் டிஸ்க் பிரேக்குகள், ஸ்நேஸி அலாய் வீல்கள், ஸ்பிளிட் டைப் எல்இடி லைட்டுகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கின்றன.