சின்ன படங்களோ.. பெரிய படங்களோ, வெற்றியோ.. தோல்வியோ வார வாரம் படங்கள் வெளியாவது மட்டும் குறைவதில்லை. அந்தவகையில் இந்தவாரமும் திரைப்பட ரசிகர்களுக்காக பல படங்கள் ரிலீஸ் ஆகி இருக்கின்றன. இன்று திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.
வைகைப்புயல் ரிட்டர்ன்ஸ்
கோலிவுட்டின் காமெடி கிங் என ரசிகர்களால் கொண்டாடப்படும் வைகைப்புயல் வடிவேலு, பல வருட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் வெள்ளி திரையில் முகம் காட்டுகிறார். சுராஜ் இயக்கத்தில் அவர் ஹீரோவாக நடித்துள்ள ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ காமெடி ஜானரில் உருவாகியுள்ளது. இந்தப் படம் டிசம்பர் 9ம் தேதியான இன்று திரையரங்குகளில் வெளியாகிறது. லைகா தயாரிப்பில் சந்தோஷ் நாராயாணன் இசையமைத்துள்ள நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், வடிவேலுவுக்கு கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், இந்தப் படத்தின் ட்ரெய்லருக்கு ரசிகர்களிடம் எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜீவாவின் வரலாறு முக்கியம்
தமிழ்த் திரையுலகில் திறமையான இளம் நடிகரான ஜீவா, கடந்த சில வருடங்களாக வெற்றிப் படங்கள் இல்லாமல் திணறி வருகிறார். இந்நிலையில், இன்று அவர் நடித்துள்ள ‘வரலாறு முக்கியம்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. ஆர்.பி. செளத்ரி தயாரித்துள்ள இந்தப் படம் மூலமாக, சந்தோஷ் ராஜன் இயக்குநராக அறிமுகமாகிறார். சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் 92வது படமான இதில், காஷ்மீரா பர்தேஷி, பிரக்யா நாகரா, விடிவி கணேஷ், கேஎஸ் ரவிக்குமார், மலையாள நடிகர் சித்திக், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள்ளனர். ‘ஜிமிக்கி கம்மல்’ பாடல் புகழ் ஷான் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. வரலாறு முக்கியம் ஜீவாவின் கேரியரிலும் முக்கியமான படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிஆர் 56
ப்ரியாமணி நடித்துள்ள ‘டிஆர் 56’ படத்தை ராஜேஷ் ஆனந்த் லீலா இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளில் இந்தப் படம் இன்று வெளியாகிறது. ஆக்சன் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
தாதா
அதேபோல், நிதின் சத்யா, யோகிபாபு நடிப்பில் உருவாகியுள்ள ‘தாதா’ திரைப்படமும் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது. கின்னஸ் கிஷோர் இயக்கியுள்ள இப்படத்தில் காயத்ரி, மனோபாலா, சிங்கமுத்து நடித்துள்ளனர்.
குருமூர்த்தி
நட்டி நட்ராஜ், ராம்கி நடிப்பில் உருவாகியுள்ள ‘குருமூர்த்தி’ திரைப்படமும் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது. கே.பி.தனசேகர் இயக்கியுள்ள இந்தப் படத்தில், பூனம் பஜ்வா, மொட்ட ராஜேந்திரன், ரவி மரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
விஜயனாந்த்
அதேபோல், கன்னடத்தில் ரிஷிகா ஷர்மா இயக்கியுள்ள ‘விஜயானந்த்’ இன்று திரையரங்குகளில் வெளியாகிறது. பான் இந்தியா படமாக வெளியாகும் இதில், நிஹல், பாபன் பூபண்ணா, வினயா பிரசாத் நடித்துள்ளனர். மிகப்பெரிய தொழிலதிபரான பத்மஸ்ரீ விருது பெற்ற விஜய் சங்கேஷ்வரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி இந்தப் படம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த வாரம் வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், ஜீவாவின் வரலாறு முக்கியம் திரைப்படங்களுக்கு பாக்ஸ் ஆபிஸில் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும், இந்த ரேஸில் கடந்த வாரங்களில் வெளியான லவ் டுடே, கட்டா குஸ்தி ஆகிய திரைப்படங்களும் போட்டிப் போட்டு வருவது குறிப்பிடத்தக்கது.