
நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகி உள்ள துணிவு திரைப்படத்தை அதிக தொகைக்கு நெட்ப்ளிக்ஸ் ஓடிடி நிறுவனம் வாங்கி உள்ளது.
வரும் பொங்கல் பண்டிகைக்கு இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் வங்கி கொள்ளை படமாக நடிகர் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் வெளியாக உள்ளது. இதனிடையே இந்த படத்தை நெட்பிளிக்ஸ் இந்த படத்தை வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து மீண்டும் போனி கபூர், ஹெச். வினோத் மற்றும் அஜித் கூட்டணியில் உருவாகி உள்ள படம் துணிவு. இந்த முறை மிஸ்ஸே ஆகாது என்பது போல படத்தை ஸ்ட்ராங்காக உருவாக்கி உள்ளாராம் இயக்குநர் ஹெச். வினோத். மங்காத்தா படத்திற்கு பிறகு நடிகர் அஜித் வெறித்தனமான நெகட்டிவ் ரோலில் இந்த படத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
துணிவு படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். அவர் இசையில் உருவான சில்லா சில்லா மற்றும் காசேதான் கடவுளடா பாடல்கள் வெளியாகி டிரெண்டாகி வரும் நிலையில், 3வது சிங்கிளாக இன்று “கேங்ஸ்டா” பாடல் மாலை 7 மணிக்கு வெளியாக உள்ளது. சமீபத்தில் வெளியான அந்த பாடலின் பாடல் வரிகளே அனல் தெறித்த நிலையில், பாடலும் பட்டையைக் கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ள துணிவு திரைப்படம் பிப்ரவரி மாதம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், அதிக தொகை கொடுத்து நெட்பிளிக்ஸ் நிறுவனம் அஜித், மஞ்சு வாரியர் நடித்துள்ள துணிவு படத்தை வாங்கி உள்ளது.
நெட்பிளிக்ஸில் தான் சர்வதேச அளவில் ஹிட்டான ஹெய்ஸ்ட் படமான மணி ஹெய்ஸ்ட், ஸ்குவிட் கேம் உள்ளிட்ட வெப்சீரிஸ்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், பேங்க் ஹெய்ஸ்ட் படமான துணிவு படத்தையும் நெட்பிளிக்ஸ் ரொம்பவே விரும்பி வாங்கி உள்ளது. இந்த ஆண்டு நெட்பிளிக்ஸில் வெளியான பல தமிழ் படங்கள் சொதப்பிய நிலையில், ரசிகர்களை மீண்டும் கவர வேண்டும் என அஜித்தின் துணிவு படத்தை வாங்கி உள்ளது நெட்பிளிக்ஸ்.
சுமார் 70 கோடிக்கும் அதிகமான தொகைக்கு அஜித்தின் துணிவு படத்தின் போஸ்ட் ரிலீஸ் உரிமத்தை நெட்பிளிக்ஸ் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜனவரி 12ம் தேதி துணிவு படம் வெளியாகும் நிலையில், காதலர் தினக் கொண்டாட்டமாக நெட்பிளிக்ஸில் பிப்ரவரி மாதம் துணிவு ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ச்சியாக அஜித்தின் படங்கள் தோல்வியை தழுவினாலும், துணிவு பிஸினஸ் தாறுமாறாக நடந்துள்ளதாம். அஜித் சம்பளம் 70 கோடி உட்பட படத்தின் மொத்த பட்ஜெட் 160 கோடி ரூபாய் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், தமிழ்நாடு தியேட்டர் உரிமை 60 கோடிக்கு விற்பனையாகியுள்ளதாம்.
அதேபோல் கேரளா தியேட்டர் ரைட்ஸ் 2.50 கோடி ரூபாய், கர்நாடகா தியேட்டர் உரிமை 3.50 கோடி ஆந்திரா, தெலங்கனா உரிமை 1.50 கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்தி டப்பிங் ரைட்ஸ் 25 கோடி ரூபாய் வரை விலை போயுள்ளதாம்.
அதேபோல், வெளிநாட்டு தியேட்டர் உரிமை 14 கோடி ரூபாய்க்கும், ஆடியோ ரைட்ஸ் 2 கோடிக்கும் விற்பனையாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும், ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் 70 கோடி ரூபாய்க்கும், சாட்டிலைட் ரைட்ஸை கலைஞர் டிவி 20 கோடி ரூபாய்க்கும் வாங்கியுள்ளதாம். இதனால் துணிவு திரைப்படம் ரிலீஸுக்கு முன்பே மொத்தம் 200 கோடி ரூபாய் வரை வசூலித்து சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.