2 மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்த வால்வோ எலெக்ட்ரிக் கார்


வால்வோ நிறுவனம் இந்திய சந்தையில் முற்றிலும் புதிய 2022 வால்வோ XC40 ரிசார்ஜ் (Volvo XC40 Recharge) மாடலை அறிமுகம் செய்திருந்தது.

இந்த 2022 ஆண்டுக்கான வால்வோ XC40 ரீசார்ஜ் மாடல் கார்கள் முழுமையாக விற்றுத் தீர்ந்துவிட்டது என வால்வோ நிறுவனம் அறிவித்து இருக்கிறது. முதற்கட்டமாக 150 யூனிட்கள் விற்பனைக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், விற்பனை துவங்கிய இரண்டு மணி நேரத்தில் அனைத்து யூனிட்களும் விற்றுத் தீர்ந்ததாக வால்வோ நிறுவனம் அறிவித்து உள்ளது. யூனிட்கள் விற்றுத் தீர்ந்த போதும், இந்த காருக்கான முன்பதிவுகள் தொடரும் தெரிவித்து இருக்கிறது.

டிசம்பர் 2022 இறுதிக்குள் 150 யூனிட்களையும் வினியோகம் செய்ய வால்வோ நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது. வால்வோ XC40 ரீசார்ஜின் முதல் யூனிட் டெலிவரிஅக்டோபர் மாத வாக்கில் துவங்க இருக்கிறது.

இந்தியாவில் அசெம்பில் செய்யப்பட்ட முதல் ஆடம்பர எஸ்யுவி மாடலாக வால்வோ XC40 ரீசார்ஜ் இருக்கிறது. இந்த கார் கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு அருகே உள்ள ஆலையில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது.

புதிய வால்வோ XC40 ரீசார்ஜ் மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 55,90,000 ஆயிரம் ஆகும். இந்த மாடல் ஒற்றை வேரியண்டில் கிடைக்கிறது. வெளிப்புறம் புதிய வால்வோ XC40 ரீசார்ஜ் மாடலில் பிளான்க்டு-அவுட் கிரில், பூட்லிட் மீது ரிசார்ஜ் பேட்ஜ் கொண்டு இருக்கிறது. இத்துடன் எல்இடி ஹெட்லேம்ப்கள், 19 அங்குல அளவில் டூயல் டோன் அலாய் வீல்கள், முன்புறம் மற்றும் பின்புற பம்ப்பரில் பிளாக் நிற கிளாடிங், செங்குத்தாக பொருத்தப்பட்ட எல்இடி டெயில் லைட்கள் உள்ளன.

காரின் உள்புறத்தில் 12 அங்குல அளவில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், 360 டிகிரி கேமரா, எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் வசதி கொண்ட முன்புற இருக்கைகள், மெமரி ஃபன்ஷன், அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல், லேன் கீப் அசிஸ்ட், டூயல் ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், 13 ஸ்பீக்கர்கள் கொண்ட ஹார்மன் கார்டன் மியூசிக் சிஸ்டம், செங்குத்தாக பொருத்தப்பட்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு உள்ளது.

புதிய வால்வோ XC40 ரீசார்ஜ் மாடல் 78 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக்கைக் கொண்டிருக்கிறது. இந்த கார் 408 ஹெச்.பி. பவர், 660 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 418 கிமீ ரேன்ஜ் வழங்குகிறது. இந்த காரை 150 கிலோவாட் பாஸ்ட் சார்ஜர் மூலம் 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 28 நிமிடங்களே ஆகும்.