ஹூண்டாயின் புது எலெக்ட்ரிக் கார் கான்செப்ட்


தென் கொரிய நிறுவனமான ஹூண்டாய் RN22e கான்செப்ட் எலெக்ட்ரிக் செடான் மாடலை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த புதிய ஹூண்டாய் RN22e கான்செப்ட் ஹூண்டாய் நிறுவனத்தின் N பிரிவு எதிர்கால எலெக்ட்ரிக் மாடலாக இருக்கும். இத்துடன் N விஷன் 74 கான்செப்ட் மாடலும் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

“RN22e மற்றும் N விஷன் 74 கான்செப்ட் மாடல்கள் ஒட்டுமொத்த வாகன வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்கு வகிக்கும். குறிப்பாக எங்களின் எலெக்ட்ரிக் வாகனம் மற்றும் அதிக செயல்திறன் கொண்ட வாகனங்கள் பிரிவில் இவை இரண்டு மாடல்களும் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கும். ரோலிங் லேப்ஸ் எங்களின் அதிநவீன தொழில்நுட்பங்களை தொடர்ந்து உருவாக்கி வருகிறது. இந்த பிரத்யேக நோக்கம் தான் எங்களை எதிர்கால சவால்களை எதிர்கொள்ள செய்கிறது,” என ஹூண்டாய் மோட்டார் கம்பெனி நிறுவனத்தின் தாமஸ் ஸ்கிமெரா தெரிவித்திருக்கிறார்.

ஹூண்டாய் RN22e மாடலில் டூயல் மோட்டார் செட்டப் இருக்கிறது. இது 577 HP திறன், 740 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் 100 கி.மீ. வேகத்தை எத்தனை விநாடிகளில் அடையும் என்பதை ஹூண்டாய் நிறுவனம் தெரிவிக்கவில்லை. ஆனால், இது மணிக்கு அதிகபட்சம் 250 கி.மீ. வேகத்தில் செல்லும் எனத் தெரிகிறது. புதிய ஹூண்டாய் RN22e கான்செப்ட் மாடலில் நான்கு பிஸ்டன் கேலிப்பர்கள் கொண்ட 400 மில்லிமீட்டர் ஹைப்ரிட் டிஸ்க் பிரேக்குகள், 3D ப்ரி்ண்ட் செய்யப்பட்ட பாகங்கள் உள்ளன. இவை காரின் எடையை குறைக்க வெகுவாக உதவி இருக்கிறது. இவை தவிர செயல்த்திறனை ஊக்குவிக்க இந்த மாடலில் ஏராளமான அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது.

ஹூண்டாய் RN22e மாடலில் 77.4 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. இந்த கார் 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 18 நிமிடங்களே போதும். இந்த கார் ஹூண்டாய் மோட்டார் குழுமத்தின் E-GMP பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது. இது அதிகபட்சம் 800 வோல்ட் பாஸ்ட் சார்ஜிங் வசதியை வழங்குகிறது.