Home News ஒடிசி நிறுவனத்தில் இருந்து வெளியாகும் இரண்டு இரு சக்கர வாகனங்கள்

ஒடிசி நிறுவனத்தில் இருந்து வெளியாகும் இரண்டு இரு சக்கர வாகனங்கள்

ஒடிசி (Odysse) நிறுவனம் அதன் இரண்டு எலெக்ட்ரிக் டூ-வீலர்களை இந்தியாவில் வெளியீடு செய்திருக்கின்றது. இவை எப்போது விற்பனைக்கு வரும், என்னென்ன மாதிரியான சிறப்பம்சங்கள் கொண்டவை என்பது பற்றிய முழு விபரங்களையும் பார்க்கலாம்.

நொய்டாவில் கடந்த 7ஆம் தேதி தொடங்கிய இவி இந்தியா எக்ஸ்போ 2022 (EV India Expo 2022) நிகழ்வில் முன்னணி வாகன உற்பத்தியாளர்கள் பலர் தங்களின் எதிர்கால தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தியும், அறிமுகமும் செய்தனர்.

இதில், தனது பங்களிப்பை வழங்கிய ஒடிசி நிறுவனம் அதன் வருங்கால இரு தயாரிப்புகளை வெளியிட்டது. இரண்டில் ஒன்று தினசரி பயன்பாட்டிற்குக்கான பைக் ரக எலெக்ட்ரிக் வாகனம் ஆகும். இது Evoqis என்ற பெயரில் வெளியிடப்பட்டு இருக்கிறது. மற்றொன்று மேக்ஸி ஸ்கூட்டர் ரக டூ-வீலர் ஆகும். இவைகுறித்த சில முக்கிய விபரங்கள் வெளியிடப்பட்டு இருக்கிறது.

இதன் வாயிலாக இரண்டு எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களும் அதிக சிறப்பு வசதிகளுடன் உருவாக்கப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கின்றது. ஒடிசி தற்போது வெளியிட்டு இருக்கும் எலெக்ட்ரிக் பைக் ஓர் முழு சார்ஜில் 150க்கும் அதிகமான கிமீ ரேஞ்ஜை வழங்குமாம். மேலும், அது உச்சபட்சமாக மணிக்கு 80 கிமீ வேகத்தில் பயணிக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதவிர, இந்த இருசக்கர வாகனத்தில் டச் வசதிக் கொண்ட டிஜிட்டல் டிஸ்பிளே, ஐஓடி, பேட்டரி பற்றிய தற்போதைய விபரங்களை வழங்கும் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கின்றன. கூடவே இன்னும் பல சிறப்பு வசதிகளை இந்த இருசக்கர வாகனத்தில் ஒடிசி நிறுவனம் வழங்கி இருக்கிறது. இந்த பைக்கை வரும் 2023 ஜனவரிக்குள் விற்பனைக்குக் கொண்டு வர நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

எனவே, வெறும் ரூ2000 மூலம் இந்த மின்சார பைக்கிற்கான புக்கிங்கை செய்யலாம். ரூ. 1 லட்சத்திற்கும் குறைவான விலையிலேயே இந்த எலெக்ட்ரிக் பைக் எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே இந்தியாவின் மலிவு விலை எலெக்ட்ரிக் பைக்காக இதன் வருகை இருக்கும் என யூகிக்கப்படுகின்றது. இந்த எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்தின் வருகை அண்மையில் விற்பனைக்கு அறிமுகமாகிய ஹாப் ஆக்ஸோ (HOP OXO), ரிவோல்ட் ஆர்வி400 (Revolt RV400), ஓபன் ரோர் (Oben Rorr) மற்றும் டார்க் கர்டோஸ் (Tork Kratos) உள்ளிட்ட எலெக்ட்ரிக் பைக் மாடல்களுக்கு போட்டியாக அமையும்.

எலெக்ட்ரிக் பைக்கைப் போலவே மேக்ஸி ஸ்டைலில் வெளியீடு செய்யப்பட்டிருக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரும் பல வகையான சிறப்பு வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

இது தற்போது எலெக்ட்ரிக் பைக்கைக் காட்டிலும் மிக அதிக ரேஞ்ஜ் தரக் கூடியதாக உருவாக்கப்பட்டிருக்கின்றது. ஆம், ஓர் முழு சார்ஜில் 200 கி.மீட்டருக்கும் அதிகமான ரேஞ்ஜை இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வழங்கும். இதற்கென இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் டூயல் பேட்டரி பேக் செட்-அப் வழங்கப்பட்டுள்ளது.

இதுதவிர, லேட்டஸ்ட் தொழில்நுட்ப வசதிகளும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இடம் பெறும் என நிறுவனம் உறுதியளித்துள்ளது. இது ஓர் பிரீமியம் தர எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக விற்பனைக்குக் களமிறக்கப்பட உள்ளது. ஆகையால், மொபைல் இணைப்பு, திருப்பத்திற்கு திருப்பம் வழிகாட்டும் நேவிகேஷன் அம்சம், ப்ளூடூத், செல்போன் சார்ஜிங் வசதி என பன்முக நவீன கால தொழில்நுட்ப வசதிகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

இந்த ஸ்கூட்டர் வரும் மார்ச் 2023 ஆம் ஆண்டிற்குள் விற்பனைக்கு வந்துவிடும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த இருசக்கர வாகனங்கள் இரண்டும் நிச்சயம் இந்தியர்களைக் கவரும் என ஒடிசி நிறுவனம் நம்பிக்கைத் தெரிவித்துள்ளது.