ஓலா எலக்ட்ரிக் கார் டீஸர் வெளியானது!

  • ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் புதிதாக எலெக்ட்ரிக் கார் உருவாக்கி வருவதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி விட்டது.
  • மேலும் இந்த எலெக்ட்ரிக் கார் எப்போது விற்பனைக்கு வரும் என்ற தகவலையும் ஓலா அறிவித்து இருக்கிறது.

சில மாதங்களுக்கு முன்பு ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் எதிர்கால ஸ்டைலிங், இரு ‘U’ வடிவ ஹெட்லேம்ப்கள், பொனெட் நெடுக கிடைமட்ட ஸ்டிரைப் அடங்கிய செடான் மாடலுக்கான டீசரை வெளியிட்டு இருந்தது. ஓலா பேட்ஜிங் கொண்ட இந்த கார் ஸ்ப்லிட் ஸ்டைல் LED டெயில் லேம்ப்-கள், கனெக்டிங் லைட் பார் வழங்கப்பட்டு இருக்கிறது.

தற்போது வெளியாகி இருக்கும் டீசர்களின் படி ஓலா எலெக்ட்ரிக் செடான் காரை முழு சார்ஜ் செய்தால் 500-க்கும் அதிக கிலோ மீட்டர் ரேன்ஜ் வழங்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் ஓலா நிறுவனத்தின் இந்த எலெக்ட்ரிக் கார், டாடா நெக்சான் EV மேக்ஸ் மற்றும் எம்ஜி ZS EV போன்ற எலெக்ட்ரிக் கார்களுக்கு போட்டியாக அமையும் எனத் தெரிகிறது.

இந்த கார் இந்திய சந்தையில் அதிவேகமான காராக இருக்கும் என ஓலா எலெக்ட்ரிக் நிறுவன தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் தெரிவித்து இருக்கிறார். ஓலா எலெக்ட்ரிக் கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை நான்கே நொடிகளில் எட்டிவிடும். இந்த கார் ஆல் கிளாஸ் ரூஃப் மற்றும் சிறப்பான டிராக் கோ-எபிஷியண்ட் வழங்கும் வகையில் டிசைன் செய்யப்பட்டு உள்ளது.

இந்த கார் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் சொந்த மூவ் ஓஎஸ் கொண்டிருக்கும். இத்துடன் உலகின் மற்ற கார்களிலும் இல்லாத வகையில் சிறப்பான டிரைவிங் திறன்களை இந்த கார் கொண்டிருக்கும். இதில் கீலெஸ் இயக்கம் குறிப்பிடத்தக்க அம்சமாக இருக்கும். “இது சிறப்பான செயல்திறன், அசத்தல் டிசைன், மிகச் சிறந்த தொழில்நுட்பம் கொண்டிருக்கும்” என பாவிஷ் அகர்வால் தெரிவித்தார். ஓலா எலெக்ட்ரிக் கார் 2024 வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இவை தவிர புதிய எலெக்ட்ரிக் கார் விவரங்கள் மர்மமாகவே உள்ளது.

ஓலா எலெக்ட்ரிக் நிறுவன தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு இருக்கும் டீசர்களின் படி புது ஓலா எலெக்ட்ரிக் வாகனம் இந்தியாவில் உருவாக்கப்பட்ட தலைசிறந்த ஸ்போர்ட்ஸ் கார் மாடலாக இருக்கும் என தெரியவந்துள்ளது.