
இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு (Electric Scooters) வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. எனவே பல்வேறு நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகின்றன.
விலை
இந்தியாவின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையை பொறுத்தவரையில், ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. தற்போதைய நிலையில் ஓலா எஸ்1 ஏர் (Ola S1 Air), ஓலா எஸ்1 (Ola S1) மற்றும் ஓலா எஸ்1 ப்ரோ (Ola S1 Pro) என 3 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இதில், ஓலா எஸ்1 ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை 84,999 ரூபாய் ஆகவும், ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை 1,09,999 ரூபாய் ஆகவும், ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை 1,39,999 ரூபாய் ஆகவும் உள்ளது
அறிவிப்பு
இந்த சூழலில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்திடம் இருந்து முக்கியமான அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், இணை நிறுவனருமான பாவிஷ் அகர்வால் (Bhavish Aggarwal) இது தொடர்பாக ட்வீட் செய்துள்ளார். அவரது அறிவிப்பின்படி, வரும் பிப்ரவரி 9ம் தேதி மதியம் 2 மணிக்கு ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் புதிய தயாரிப்புகள் குறித்த அறிவிப்பை வெளியிடவுள்ளது.
குறைந்த விலை ஸ்கூட்டர்
அது என்ன அறிவிப்பு என்பது உறுதியாக தெரியவில்லை. எனினும் இந்த ட்வீட் உடன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் புகைப்படம் ஒன்றை பாவிஷ் அகர்வால் பதிவிட்டுள்ளதை வைத்து பார்க்கையில், ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை வரும் பிப்ரவரி 9ம் தேதி ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகம் செய்தால், அது மிகவும் விலை குறைவானதாக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
போட்டி
தற்போதைய நிலையில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களிலேயே எஸ்1 ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்தான் மிகவும் விலை குறைவானதாக உள்ளது. இதைக்காட்டிலும் குறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இதன் மூலம் பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்துவதற்கு ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் முயற்சி செய்யலாம்.
எதிர்பார்ப்பு
தற்போதைய நிலையில் ஒரு பிரீமியமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையும், பெட்ரோல் ஸ்கூட்டரையும் ஒப்பீட்டிற்கு எடுத்து கொண்டால், எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலைதான் அதிகமாக உள்ளது. இந்த நிலையை மாற்றுவதற்கு ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் முயற்சி செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக வரும் பிப்ரவரி 9ம் தேதி மிகவும் குறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் களமிறக்கலாம். எனவே வரும் பிப்ரவரி 9ம் தேதி ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் என்ன அறிவிப்பை வெளியிட போகிறது? என்ன தயாரிப்பை களத்தில் இறக்க போகிறது? என்ற எதிர்பார்ப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.








