ஒப்போவின் ப்ளிப் போன்- வெளியீட்டுக்கு முன்பே வெளியான வீடியோ

ஒப்போ நிறுவனம் கடந்த ஆண்டு நடைபெற்ற ஒப்போ இன்னோ டே நிகழ்வில் தனது முதல் போல்டபில் மொபைலை அறிமுகம் செய்தது. ஒப்போ ஃபைண்ட் N பெயரில் அறிமுகம் செய்யப்பட்ட மொபைலின் மேம்பட்ட வெர்ஷன் இம்மாதம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த மாடல் ஒப்போ ஃபைண்ட் N2 ஃப்ளிப் என அழைக்கப்பட இருக்கிறது.

இந்த நிலையில், புதிய ஒப்போ ஃபைண்ட் N2 ஃப்ளிப் மாடல் hands-on வீடியோ வெய்போ தளத்தில் வெளியாகி இருக்கிறது. இதில் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் எப்படி இருக்கும் என தெரியவந்துள்ளது. அறிமுகம் செய்யப்படாத டெஸ்ட் சாதனங்களை போன்றே ஃபைண்ட் N2 ஃப்ளிப் மாடலிலும் பாதுகாப்பிற்கு கேஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது.

இந்த மாடலில் சிறிய இன்னர் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர பன்ச் ஹோல் ரக கட்-அவுட், 32MP செல்ஃபி கேமரா, 6.8 அங்குல ஃபோல்டிங் டிஸ்ப்ளே, பக்கவாட்டில் கைரேகை சென்சார், வலது புறத்தில் வால்யூம் பட்டன்கள் வழங்கப்படுகின்றன. இதன் வெளிப்புற டிஸ்ப்ளே மற்ற ஃப்ளிப் ரக போல்டபில் போனை விட பெரியதாக காட்சியளிக்கிறது. அதன்படி புது மாடலில் 3.26 அங்குல அளவில் கவர் டிஸ்ப்ளே வழங்கப்படும் என தெரிகிறது.

வெளிப்புற டிஸ்ப்ளே அருகில் 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு லென்ஸ் காணப்படுகிறது. முந்தைய தகவல்களின் படி ஒப்போ ஃபைண்ட் N2 ஃப்ளிப் மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 9000+ பிராசஸரைக் கொண்டு இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதுமட்டும் இன்றி இந்த போனில் 4300 எம்ஏஹெச் பேட்டரியும் அதை சார்ஜ் செய்ய 44 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் தனது வெய்போவில் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி ஒப்போ இன்னோ டே 2022 நிகழ்வு டிசம்பர் மாத மத்தியில் நடைபெறும் என கூறப்படுகிறது. இந்த நிகழ்வில் ஏராளமான புது சாதனங்கள் அறிவிக்கப்படும். இதே நிகழ்வில் ஃபைண்ட் N2, ஃபைண்ட் N2 ஃப்ளிப் போன்ற மடிக்கக்கூடிய சாதனங்கள் அறிமுகம் செய்யப்படும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஒப்போ ஃபைண்ட் N2 மாடலில் 7.1 அங்குல அளவில் உள்புறமாக மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே, 5.5 அங்குல OLED கவர் டிஸ்ப்ளே, FHD+ ரெசல்யூஷன், 120Hz ரிப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், 4520 எம்ஏஹெச் பேட்டரி, 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

புகைப்படங்களை எடுக்க 32MP செல்ஃபி கேமரா, உள்புறத்தில் 32MP கேமரா, 50MP பிரைமரி கேமரா, 48MP அல்ட்ரா வைடு கேமரா, 32MP டெலிபோட்டோ கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த ஃபோல்டபில் ஸ்மார்ட்போனின் எடை 240 கிராம்களுக்கும் குறைவாக இருக்கும் என்றும் இது பிளாக், வைட் மற்றும் கிரீன் என மூன்று நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.

இதற்கிடையே சியோமி நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ப்ரோடோடைப் மாடல் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், டிப்ஸ்டர் குபா வொசைசௌஸ்கி வெளியிட்டு இருக்கும் தகவல்களில் சியோமியின் புதிய ஃபோல்டபில் ஸ்மார்ட்போன் வெளிப்புறம் மடிக்கும் திறன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் மற்றும் 855 மோடெம் கொண்டிருக்கும் என தெரிகிறது. “இந்த சாதனத்தின் விவரங்கள் மிகவும் கவனமாக பாதுகாக்கப்பட்டு வந்தன. எனினும், ஸ்மார்ட்போனின் சில யூனிட்கள் பொது வெளியில் கசிந்துள்ளது,” என குபா வொசைசௌஸ்கி தெரிவித்து இருக்கிறார்.