Home News தென்னிந்தியர்களை புறக்கணித்ததா Nothing?

தென்னிந்தியர்களை புறக்கணித்ததா Nothing?


நத்திங் நிறுவனம் அதன் முதல் ஸ்மார்ட்போனான phone 1ஐ அறிமுகப்படுத்தி இருக்கிறது. வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்தபடி ஏராளமான சிறப்பம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டு இருந்தது. ஆனால் இந்த போனுக்கு தென்னிந்தியாவில் எதிர்ப்பும் கிளம்பியது.

இதற்கு காரணம் ஒரு கடிதம். தென்னிந்தியாவை சேர்ந்த பிரபல யூடியூபர் ஒருவர், நேற்று நத்திங் போன் வெளியான போது வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் அவர் நத்திங் போன் அடங்கிய பாக்ஸை பிரிக்கும் போது அதில் போன் எதுவும் இன்றி காலியாக இருப்பது போலவும், ஒரு கடிதம் மட்டும் அதில் இருப்பது போலவும் அதில் காட்டி இருந்தார்.

அந்த கடிதத்தில் ‘இந்த சாதனம் தென்னிந்திய மக்களுக்கு வழங்கப்படாது’ என அச்சிடப்பட்டு இருந்தது. இந்த கடிதம் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. நத்திங் நிறுவனம் பயன்படுத்தும் எழுத்து அமைப்பிலேயே அந்த கடிதத்தில் உள்ள எழுத்துக்களும் இருந்ததனால் நெட்டிசன்களும் அது நத்திங் நிறுவனத்தில் இருந்து வந்த கடிதம் நம்பி, கொதித்தெழுந்தனர்.

இதையடுத்து #DearNothing என்கிற ஹேஷ்டேக்கும் ட்விட்டரில் டிரெண்டானது. ஏராளமானோர் நத்திங் நிறுவனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பதிவிட்டு வந்தனர். ஆனால் உண்மையில் அப்படி ஒரு கடிதத்தை நத்திங் நிறுவனம் அனுப்பவே இல்லையாம். அது அந்த யூடியூபர் செய்த பிராங்க் வீடியோ என்பது பின்னர் தான் தெரியவந்தது. நத்திங் நிறுவனம் இந்த சர்ச்சை குறித்து எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை.