மொபைல் ஃபோன் சூடாவதற்கான காரணங்கள் மற்றும் அதை தடுப்பதற்கான தீர்வுகள்

மொபைல் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பேசுவதற்கு மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்த மொபைலானது ஆண்ட்ராய்டின் வருகைக்குப் பிறகு பலவிதங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வீடியோ பார்ப்பது, கேமிங் விளையாடுவது, புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பது, அவற்றை பகிர்ந்து கொள்வது, பலவிதமான செயலிகளைப் பயன்படுத்துவது, இணையத்தைப் பயன்படுத்துவது என நாளுக்கு நாள் மொபைலின் பயன்பாடு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இப்படி பயன்பாடு அதிகரிப்பதால் மொபைலுக்கான பேட்டரியின் அளவும் அதிகரித்து இருக்கிறது. தொடர்ந்த பயன்பாடு காரணமாக ஒருநாளிலேயே இரு முறைகூட மொபைலை சார்ஜ் செய்ய வேண்டிய தேவையும் இருக்கிறது.

மொபைலின் தொடர்ந்த இயக்கம் காரணமாகவும், அதிகப்படியான, பெரிய செயலிகளை இயக்குவதாலும் மொபைல் சூடாக ஆரம்பிக்கிறது. அதே போல் ஒரே நேரத்தில் மொபைலில் பல வேலைகளைச் செய்வதாலும் (multi tasking) மொபைல் சுடாகிறது. இப்படி உங்கள் மொபைல் ஃபோன் சூடாவதற்கு பல காரணங்கள் உள்ளன. மிகவும் பொதுவான சில காரணங்களாக கீழ்காண்பனவற்றைக் கூறலாம்.

அதிகப்படியான பயன்பாடு

உங்கள் மொபைலை அதிக நேரம் பயன்படுத்தினால், பேட்டரி மற்றும் செயலி அதிக நேரம் தொடர்ந்து வேலை செய்ய வேண்டி இருக்கும் இதனால் அது சூடாகலாம்.

 

பின்னணி பயன்பாடுகள்

பின்புலத்தில் (Background) இயங்கும் செயலிகள் உங்கள் ஃபோனின் பேட்டரி மற்றும் செயலாக்க சக்தியைப் பயன்படுத்துவதால், அவை வெப்பமடையலாம்.

சார்ஜிங்

உங்கள் மொபைலை நீண்ட நேரம் சார்ஜ் செய்வது, முழுவதும் சார்ஜ் ஆன பிறகும் தொடர்ந்து போன் சார்ஜிலேயே இருப்பதும் மொபைலை சூடாக்கும். அதுபோல் பழுதடைந்த அல்லது தவறான சார்ஜரைப் பயன்படுத்தி மொபைலை சார்ஜ் செய்வதலாலும் மொபைல் சூடாகலாம். இது சில சமயங்களில் மொபைல் வெடிப்பது போன்ற விபத்தில் கூட முடியலாம். அதுபோல் சார்ஜ் செய்துகொண்டே மொபைலை பயன்படுத்துவதும் மொபைலை அதிக அளவில் சுடாக்கும். சமீபத்த்ல் நடந்த சில மொபைல் வெடிப்பு விபத்துகள் இந்த வகையைச் சேர்ந்தவையே.

 

மென்பொருள் புதுப்பிப்புகள்

சில நேரங்களில் மென்பொருள் புதுப்பிப்புகளை செய்யும் போது உங்கள் மொபைலுக்கு அதிக செயலாக்க சக்தி தேவைப்படும். இதனால் அவை சூடாகலாம்.

மோசமான காற்றோட்டம்

உங்கள் ஃபோன் பெட்டி, கவர், துணி போன்றவற்றால் மூடப்பட்டிருந்தால் அல்லது காற்றோட்டம்  தடுக்கப்பட்டால் அது மொபைலை வெப்பமடையச் செய்யலாம். சிலர் தலையணைக்கு அடியில், புத்தகங்களுக்கு இடையில் என மொபைலை காற்று இல்லாத இடத்தில் வைத்துவிடுவார்கள். இதனால் சுடாவது மட்டுமின்றி சில நேரங்களில் வெடிப்பது போன்ற விபத்தும் ஏற்பட வாய்ப்புள்ளது. ஜீன்ஸ் போன்ற இறுக்கமான உடையின் பாக்கெட்டில் வைப்பது கூட மொபைலை சூடாக்கும்.

 

வன்பொருள் சிக்கல்கள்

சில நேரங்களில் சேதமடைந்த பேட்டரி அல்லது சிப்செட் போன்ற ஹார்டுவேர் சிக்கல்கள் உங்கள் மொபைலை சூடாக்கலாம்.

 

சுற்றுச்சூழல் காரணிகள்

உங்கள் மொபைலை வெப்பமான சூழலில் அல்லது நேரடி சூரிய ஒளியில் பயன்படுத்தினால், அது வெப்பமடையச் செய்யலாம்.

மால்வேர்

உங்கள் மொபைலில் ஏதேனும் மால்வேர் அல்லது வைரஸ்கள் புகுந்தால், அவையும் அதிக செயலாக்க சக்தியைப் பயன்படுத்தும் இதனாலும் மொபைல் சூடாகலாம்.

 

நீங்கள் உங்கள் மொபைல் அதிக வெப்பத்தை வெளிபடுத்துவதாக உணர்ந்தால், உங்கள் மொபைலை சம்பந்தப்பட்ட சர்வீஸ் செண்டருக்கோ அல்லது சிறந்த நிபுணரிடமோ எடுத்துச் சென்று சரிபார்ப்பது நல்லது. பிரச்சனையின் மூல காரணத்தை கண்டறிந்து, அதற்கான தீர்வுகளை பரிந்துரைக்க அவை உங்களுக்கு உதவும்.