
ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களில் 5ஜி வசதியை செயல்படுத்துவது குறித்து அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டு இருக்கிறது. ஐபோன் 12 மற்றும் அதன் பின் வெளியான ஐபோன்களில் விரைவில் 5ஜி சேவையை அனுபவிக்க முடியும்.
இணையத்தில் தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, இந்தியாவில் டெலிகாம் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருவதை ஆப்பிள் நிறுவனம் உறுதிப்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் ஐபோன் 12 மற்றும் அதன் பின் வெளியான புது ஐபோன் மாடல்களுக்கு 5ஜி வசதியை செயல்படுத்தும் அப்டேட் டிசம்பர் மாதத்தில் வெளியிடப்படும் என ஆப்பிள் தெரிவித்து உள்ளது. இதற்கான தயாரிப்புப் பணிகளை ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொண்டு வருவதாக ஆப்பிள் தெரிவித்து இருக்கிறது.
டெலிகாம் நிறுவனங்கள் புது தலைமுறை சேவையை வெளியிடும் போது ஆப்பிள் அதனை தனது சாதனங்களில் சோதனை செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது. தனது சாதனங்களில் அப்டேட் வெளியிடும் முன் நெட்வொர்க் வேலிடேஷன் மற்றும் டெஸ்டிங் உள்ளிட்டவைகளை முடிக்க வேண்டும் என ஆப்பிள் தெரிவித்து இருக்கிறது.
5ஜி கனெக்டிவிட்டி வசதி கொண்ட ஐபேட் ஏர் 5th Gen மாடலுக்கு எப்போது இந்த அப்டேட் வழங்கப்படும் என்ற விவரங்களை ஆப்பிள் இதுவரை வெளியிடவில்லை. எனினும், ஐபோன்களுக்கு வழங்கும் போதே ஐபேட் மாடலுக்கும் அப்டேட் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். முன்னதாக ஏர்டெல் நிறுவனத்தின் 5ஜி பிளஸ் நெட்வொர்க் இந்தியாவின் எட்டு நகரங்களில் வழங்கப்பட்டு இருந்தது. அடுத்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 5ஜி சேவைகள் வெளியாகும் என்றும் மார்ச் 2024 வாக்கில் நாடு முழுக்க 5ஜி வழங்கப்பட இருக்கிறது.
ஆப்பிளை தொடர்ந்து சாம்சங் நிறுவனமும் இந்தியாவில் முன்னணி டெலிகாம் நிறுவனங்களுடன் இணைந்து 5ஜி சேவைகளை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளது. அதன்படி நவம்பர மாத மத்தியில் சாம்சங் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு 5ஜி சேவையை பயன்படுத்துவதற்கான அப்டேட் வழங்கப்பட இருக்கிறது. 5ஜி சேவையை வழங்குவதற்காக சாம்சங் நிறுவனம் ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்களுடன் இணைந்துள்ளது. அந்த வகையில் ஏர்டெல் மற்றும் ஜியோ நெட்வொர்க் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் சாம்சங் சாதனங்களில் 5ஜி சேவையை பயன்படுத்தலாம்.
சாம்சங் சாதனங்கள் என குறிப்பிட்டு இருப்பதால் ஸ்மார்ட்போன்களுடன் சேர்த்து கேலக்ஸி டேப் எஸ்8 சீரிஸ் மாடல்களுக்கும் 5ஜி அப்டேட் வழங்கப்படலாம். முன்னதாக ஏர்டெல் நிறுவனத்தின் நான்-ஸ்டாண்ட்-அலோன் 5ஜி பிளஸ் நெட்வொர்க் இந்தியாவின் எட்டு நகரங்களில் வெளியிடப்பட்டது. மேலும் இந்த நெட்வொர்க்கில் எந்தெந்த சாதனங்களில் 5ஜி வேலை செய்யும் என்ற பட்டியலும் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதில் ஏராளமான சாம்சஙங் நிறுவன ஸ்மார்ட்போன் மாடல்கள் இடம்பெற்றுள்ளன. எனினும், சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்21 மற்றும் அதற்கும் முன் வெளியிட்ட சாதனங்களை அப்டேட் செய்ய வேண்டும்.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஸ்டாண்ட்-அலோன் 5ஜி சேவையை நாட்டின் நான்கு நகரங்களில் வெளியிட்டது. தற்போது பீட்டா சோதனை நடைபெற்று வரும் நிலையில், தொடர்ந்து அதிக நகரங்களில் 5ஜி சேவைகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கலாம்.





