
இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி M54 5G மொபைல் விரைவில் வெளியாக இருக்கிறது. இதனை முன்னிட்டு இந்த மொபைலின் படங்கள் (ரெண்டர்கள்) தற்போது வெளியாகி இருக்கின்றன. வரும் பிப்ரவரி 1ல் உலகச் சந்தையில் வெளியாக இருக்கும் ஃப்ளாக்ஷிப் மொபைலான கேலக்ஸி S23 மொபைலின் வெளியீட்டுக்குப் பிறகு மிட்ரேஞ்ச் போனான இந்த கேலக்ஸி M54 5G வெளியாகும் எனத் தெரிகிறது. தற்போது ‘மை ஸ்மார்ட் ப்ரைஸ்’ தளத்தில் இந்த மொபைலின் வடிவமைப்பு எப்படி இருக்கும் என்பது குறித்த படங்கள் வெளியாகி இருக்கிறது. இதன் மூலம் இந்த மொபைலில் இருக்கும் அம்சங்கள் தெரிய வந்துள்ளன.
வடிவமைப்பு
வெளியான படங்களை வைத்துப் பார்க்கும்போது சாம்சங் கேலக்ஸி M54 5G மெல்லிய, கீழ் பகுதி தவிர்த்து ஒரே போன்ற பெசல்களை உடையதாக இருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ப்ளாட் டிஸ்ப்ளேவைக் கொண்டு இருக்கிறது. மேலும் பின்பக்கத்தில் கேமரா மாட்யூலுக்கென தனிப்பட்ட டிசைன் எதுவும் இல்லாத தெளிவான வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
கேமரா
கேலக்ஸி M53 5G மொபைலோடு ஒப்பிடும் போது, அதிலிருந்த நான்கு கேமரா செட்டப்பில் இருந்து இந்த மொபைல் 3 கேமரா செட்டப்பிற்கு மாறியுள்ளது. இவை தவிர இதன் முன்பக்கத் திரையில் செஃல்பி கேமராவுக்கென பன்ச்-ஹோல் டிசைன் வழங்கப்பட்டுள்ளது.
பட்டன்கள்
மேலும் இந்த மொபைலின் வலது பக்கத்தில் பவர் பட்டன் வழங்கப்பட்டுள்ளது. இதுவே ஃபிங்கர் பிரிண்ட் சென்சாராகவும் செயல்படுகிறது. இந்த பவர் பட்டனுக்கு மேற்புறம் வால்யூம் பட்டன்கள் வழங்கப்பட்டுள்ளன.
போர்ட்கள்
சாம்சங் கேலக்ஸி M54 5G மொபைலின் இடதுபுறத்தில் சிம் கார்டுக்கான ட்ரே வழங்கப்பட்டுள்ளது. இருந்தபோதும், இந்த ரெண்டர் படங்கள் மூலம் இந்த மொபைலின் போர்ட் பற்றி தெரிந்து கொள்ள முடியவில்லை.டைப் சி போர்ட் கண்டிப்பாக இருக்கும். சாம்சங் கேலக்ஸி M53 5G மொபைலில் 3.5mm ஆடியோ போர்ட் வழங்கப்படவில்லை. ஆனால், சாம்சங் கேலக்ஸி M54 5G மொபைலில் 3.5mm ஆடியோ போர்ட் வழங்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

நிறங்கள்
இந்த மொபைல் அடர் நீலம் மற்றும் சில்வர், நீலம், பிங்க் மற்றும் பச்சை நிறங்கள் கலந்த மல்டி கலர் க்ரேடியண்ட் நிறங்களில் வெளிவர இருப்பதாக வெளியான படங்கள் தெரிவிக்கின்றன. மேலும் பின்பக்க கேமராவின் தோற்றம் தற்போது வெளியான சாம்சங்கின் ஃப்ளாக்ஷிப் மொபைலின் வடிவமைப்பை போன்ற தோற்றத்தைக் கொண்டுள்ளது.
சிப்செட் & ரேம்
இந்த சாம்சங் கேலக்ஸி M54 5G மொபைலின் அம்சங்கள் இன்னும் முழுமையாக வெளிவரவில்லை. கீக்பெஞ்ச் பட்டியலின் படி இந்த மொபைலில் எக்ஸினோஸ் 1380 SoC சிப்செட் பயன்படுத்தப்பட்டு இருக்கும் என்பதும், இதில் 8ஜிபி ரேம் இருக்கும் என்றும், இந்த மொபைல் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தில் இயங்கும் என்பதும் தெரியவந்துள்ளது.
எதிர்பார்ப்பு
இதன் முந்தைய மாடலான சாம்சங் கேலக்ஸி M53 5G மொபைலில் 108 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டு இருந்தது. இதிலும் அதே கேமரா வழங்கப்படலாம். அதே போல், அந்த மொபைலின் தற்போதைய விலையான ரூ. 23,999 என்ற விலையைச் சுற்றியே இந்த மொபைலின் விலையும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.







