ஸ்பிளெண்டர் பைக்கின் தோற்றத்தில் ஒரு எலெக்ட்ரிக் பைக்!

ஸ்பிளெண்டர் பைக்கின் தோற்றத்திலான எலெக்ட்ரிக் பைக் ஒன்றை பெங்களூரு நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது.
பெங்களூருவில் நடைபெற்ற கிரீன் வெயிக்கிள் எக்ஸ்போ (Green vehicle expo) எனும் வாகன கண்காட்சியில், கர்நாடகாவில் உள்ள பெல்காம் நகரத்தை மையமாகக் கொண்டு இயங்கும் ஏடிஎம்எஸ் (ADMS) என்கிற நிறுவனம் தனது புதிய எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை காட்சிப்படுத்தியது.
பாக்ஸர் (Boxer) எனும் பெயரில் வெளியான அந்த பைக் பார்ப்பதற்கு ஹீரோ ஸ்பிளெண்டர் போலவே இருந்தது. இது எலக்ட்ரிக் பைக் என்பதைத் தவிர வேறு எந்த மாற்றத்தையும் இதில் காண முடியவில்லை.
Boxer electric bike

சதுர வடிவ ஹெட்லைட், வால்பகுதி லைட் மற்றும் கன்சோல் உள்ளிட்டவையும் ஹீரோ ஸ்பிளெண்டரை பிரதிபலிக்கும் வகையிலேயே உள்ளது. உண்மையில் இந்த பைக்கை பார்ப்பவர்கள் ஹீரோ ஸ்பிளெண்டர் என நினைப்பார்கள். அந்த அளவிற்கு இருசக்கர வாகனத்தின் ஸ்டைல் முதற்கொண்டு ஹேண்டில் பார் மற்றும் சைடு இன்டிகேட்டர் உள்ளிட்ட அனைத்தும் ஒரே மாதிரியானதாக இருக்கின்றன.
ஏடிஎம்எஸ் நிறுவனம் இந்த இருசக்கர வாகனத்தில் ஹப் மோட்டாரை பயன்படுத்தியிருக்கின்றது. இதற்கான மின்சார திறனை வழங்குவதற்காக லித்தியம் அயன் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இவை என்னமாதிரியான திறன் கொண்டவை என்பது தெரியவில்லை. இவைகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் ஏடிஎம்எஸ் நிறுவனம் வெளியிடவில்லை.

இதில், ரிவர்ஸ் மோட்(Reverse mode) மற்றும் ஈகோ மோட் (Eco mode) என இருவிதமான மோட்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதில், ஈகோ மோடில் வைத்து இருசக்கர வாகனத்தில் பயணித்தால் முழு சார்ஜிற்கு 140 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதேபோல் சிறந்த இயக்க அனுபவத்தை வழங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் ட்யூவல் ஷாக் சஸ்பென்ஷன் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. மேலும், சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக டிரம் பிரேக் இரு முனைகளிலும் கொடுக்கப்பட்டுள்ளன. இது ஓர் மிதமான வேகத்தில் செல்லக் கூடிய எலெக்ட்ரிக் பைக் என்பதால் இந்த பிரேக்கிங் தொழில்நுட்பமே போதுமானதாக உள்ளது. இந்த அம்சமே தற்போது விற்பனையில் உள்ள பல இருசக்கர வாகனங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இத்துடன், கூடுதல் சிறப்பு வசதியாக ரீ-ஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் (Regenerative braking system) இந்த பைக்கில் வழங்கப்பட்டிருக்கின்றது.

இது எப்போது விற்பனைக்கு வரும் என்பது பற்றிய விபரம் வெளியிடப்படவில்லை. அதேநேரத்தில், இது விற்பனைக்கு வரும் எனில் நிச்சயம் பலரின் மனம் கவர்ந்த வாகனமாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது.