Home News ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியாகும் முதல் தமிழ்ப்படம்!

ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியாகும் முதல் தமிழ்ப்படம்!

கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம்”பொன்னியின் செல்வன்”. இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின. பொன்னியின் செல்வன் முன்னணி திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இப்படத்தின் முதல் பாடல் “பொன்னி நதி” அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் இரண்டாவது பாடல் ஆகஸ்ட் 19-ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. ’சோழா.. சோழா..’ எனத் தொடங்கும் இந்தப் பாடலும் முதல் பாடலைப் போலவே வரவேற்ப்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அப்டேட் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் வழக்கமாக மணிரத்னத்தின் படங்களுக்கு தொடர்ச்சியாக பாடல் எழுதி வந்த வைரமுத்து பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்குப் பாடல்கள் எழுதவில்லை. சமீபத்தில் இப்படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானிடம் இது பற்றி ஒரு பேட்டியில் கேட்ட போது, இதற்கு மணிரத்னம் தான் பதில் சொல்ல வேண்டும் என மழுப்பலாய் பதில் கூறி இருந்தார்.

இப்படி தினம் ஒரு பரபரப்பாய் பொன்னியின் செல்வன் திரைப்படம் குறித்த தகவல்கள் வந்து கொண்டு இருக்கின்றன. இது தவிர தொழில்நுட்ப ரீதியிலும் இப்படம் அடுத்த கட்டத்தை நோக்கி பயணித்து இருக்கிறது. அதாவது, பொன்னியின் செல்வன் திரைப்படம் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியாகிறது. இதன் மூலம் ஐமேக்ஸ் முறையில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் பொன்னியின் செல்வன் என்பது குறிப்பிடத்தக்கது.