பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ள வாரிசு மற்றும் துணிவு படங்களுக்கு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி இல்லை என தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், தியேட்டரில் கட் அவுட் வைக்கவும், பால் அபிஷேகம் செய்யவும் தடை விதித்துள்ளது.
அதிக டிக்கெட் விலை தொடர்பான புகார்கள் வெளியானால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஸ்பெஷல் ஷோ
நடிகர் விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படங்கள் நாளை வெளியாக உள்ளன. அஜித்தின் துணிவு படம் அதிகாலை 1 மணிக்கு வெளியாகிறது. விஜய்யின் வாரிசு திரைப்படம் அதிகாலை 4 மணிக்கு வெளியாகிறது. ஜனவரி 11ம் தேதி முதல் 17ம் தேதி வரை சிறப்பு காட்சிகளை வெளியிட இரண்டு படக்குழுவும் முடிவு செய்திருந்தது.
அனுமதி இல்லை
இந்நிலையில், விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படங்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13, 14, 15 மற்றும் 16ம் தேதி சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
பேனர் கூடாது
மேலும், திரையரங்குகளில் உள்ள விஜய், அஜித் படங்களின் பேனர்கள் அகற்றப்பட வேண்டும் என்றும் பேனர்கள் வைத்து பாலாபிஷேகம் செய்யக் கூடாது என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் நாள் காட்சியில் பாலாபிஷேகம் செய்வதற்காக பால் வண்டிகளில் இருந்து பால் திருடும் நிலை உருவாகலாம் என்பதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதிக டிக்கெட் விலை
இதுமட்டுமின்றி அதிக விலையில் டிக்கெட் விற்பனை செய்வதாக புகார் எழுந்தால் வாரிசு மற்றும் துணிவு படக்குழுக்கள் பெரும் சிக்கலை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நேர்கொண்ட பார்வை படத்துக்கு அதிக டிக்கெட் விற்ற நிலையில், அதற்கான அபராதம் விதிக்கப்பட்டது. அதுபோல் இப்போதும் அதிக டிக்கெட் விலை தொடர்பாக புகார் வெளியானால் தியேட்டர் நிர்வாகங்களுக்கு சிக்கல் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.
இந்நிலையில் குடியரசு தினத்தன்று ஷாருக்கான் நடித்துள்ள பதான் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் வெளியாகும் இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி டிரெண்டிங் ஆகி வருகிறது. தீபிகா படுகோன் ஷாருக்கானுக்கு இணையாக சண்டை போடும் காட்சிகள் மற்றும் ஜான் ஆபிரகாமின் வில்லத்தனம் பார்வையாளர்க்ளை கவருகிறது.
ட்விட்டரில் பகிர்ந்த விஜய்
நடிகர் விஜய் வழக்கமாக தனது படங்களின் போஸ்டர்கள் மற்றும் டீசர், ட்ரெய்லர்களை மட்டுமே ட்விட்டரில் ட்வீட் போட்டு வந்த நிலையில், தற்போது ஷாருக்கானின் பதான் படத்தின் தமிழ் ட்ரெய்லரை விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஏற்கனவே ஷாருக்கானின் அடுத்த ஜவான் படத்தில் விஜய்யின் கேமியோ இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் விஜய் ட்ரெயிலரை பகிர்ந்து இருக்கிறார்.
விஜயைப் போல் தெலுங்கில் ராம்சரணும் இந்த படத்தின் ட்ரெயிலரை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். தென்னிந்தியாவில் ப்ரமோஷன் செய்ய ஷாருக்கான் இன்னும் வரவில்லையே என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு பான் இந்தியா அளவில் பிரபலமான நடிகர்களை வைத்து பதான் ட்ரெய்லர் வெளியீட்டு இருக்கிறார் ஷாருக்கான்.






