இந்த வாரம் வெளியாகும் படங்கள் – ஒரு பார்வை

இந்த வாரம் வெளியாகும் கவனத்துக்குரிய சில திரைப்படங்கள் குறித்துப் பார்க்கலாம்.


விருமன்: 2டி என்டர்டெயின்ட்மென்ட் தயாரிப்பில், இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர் நடித்துள்ள படம் ‘விருமன்’. இப்படத்தில் சூரி, பிரகாஷ்ராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். படம் வரும் ஆகஸ்ட் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மண்மணம் சார்ந்த படமாக வெளியாகிறது.


கடமையை செய்: வெங்கட் ராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, யாஷிகா ஆனந்த் நடித்துள்ள படம் ‘கடமையை செய்’. இதில், மொட்ட ராஜேந்திரன், வின்சென்ட் அசோகன், சித்ரா லக்ஷ்மணன், ஷேஷூ உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படம் ஆகஸ்ட் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.


லால் சிங் சத்தா: ஹாலிவுட்டில் வெளியாகி பெரும் புகழடைந்த ‘ஃபாரஸ்ட் கம்ப்’ திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. ‘லால் சிங் சத்தா’ என்ற பெயரில் பான் இந்தியா முறையில் உருவாகியுள்ள இப்படத்தில் ஆமீர்கான், கரீனா கபூர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அத்வைத் சந்திரன் இயக்கியுள்ள இப்படம் இன்று வெளியாகி இருக்கிறது. படத்தில் நாக சைதன்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


ரக்‌ஷா பந்தன் : ஆன்ந்த் எல்.ராய் இயக்கத்தில் அக்சய்குமார் நடித்துள்ள படம் ‘ரக்‌ஷா பந்தன்’. இதை ஜி ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. பூமி பெட்னேகர், சாடியா கதீப் நடித்துள்ள இப்படம் குடும்பத்தையை பின்னணியாக கொண்ட காமெடி ட்ராமாவாக உருவாகியுள்ளது. அண்மையில் வெளியான அக்‌ஷய் குமாரின் ‘சாம்ராட் பிருத்விராஜ்’, ‘பச்சன் பாண்டே’ படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால், குடும்பக் கதையான இப்படம் வரவேற்பை பெறும் என அக்‌ஷய் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த படமும் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.


நா தான் கேஸ் கொடு: ஆன்ராய்டு குஞ்சப்பன் பட புகழ் இயக்குநர் ரதீஷ் பாலகிருஷ்ணன் பொடுவால் இயக்கத்தில் குஞ்சாகோ போபன், காயத்ரி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நா தான் கேஸ் கொடு’ (Nna, Thaan Case Kodu). மலையாள படமான இதுவும் இன்று (ஆகஸ்ட் 11) திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இதில் சைஜூ குரூப், வினய் போர்ட், ஜாபர் இடுக்கி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


இவைதவிர, அமலாபால் தயாரித்து நடிக்கும் திரைப்படம் ‘கடாவர்’. ஆகஸ்ட் 12-ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் படம் வெளியாகவுள்ளது. அறிமுக இயக்குநர் அனூப். எஸ். பணிக்கர் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தில் அமலா பாலுடன் நடிகர்கள் ஹரிஷ் உத்தமன், திரிகுன், வினோத் சாகர், அதுல்யா ரவி, ரித்விகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அபிலாஷ் பிள்ளை எழுதிய கதைக்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்ய, ரஞ்சின் ராஜ் இசையமைத்திருக்கிறார்.

சுதந்திர தினம் மற்றும் ரக்‌ஷா பந்தன் விடுமுறை நாட்கள் வருவதால் புதிய படங்களைக் காண ரசிகர்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் என தயாரிப்பாளர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.