வாய்ஸ் ஸ்டேட்டஸ் – வாட்ஸப்பில் புதுவசதி!

வாட்ஸ்அப் நிறுவனம் பல சிறப்பான அம்சங்களை ஆண்ட்ராய்டு (Android) மற்றும் iOS பயனர்களுக்காக சோதனை செய்து அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், ஒரு குறிப்பிட்ட புதிய அம்சத்தை WABetaInfo தற்போது கவனித்துள்ளது.

புது அம்சம்!

இந்த புதிய அம்சத்தைப் பற்றி WABetaInfo குறிப்பிட முக்கிய காரணம், இது உண்மையிலேயே விசித்திரமான அம்சமாகத் திகழ்கிறது. இது எப்படி வருங்கால வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் (WhatsApp Status) கலாச்சாரத்தை மாற்றப்போகிறது என்பதை பார்க்க மிகவும் ஆர்வமாக இருப்பதாக WABetaInfo தெரிவித்துள்ளது. சரி, இந்த புதிய அம்சம் என்ன செய்யும்? இது யாருக்கெல்லாம் கிடைக்கும்?

வாட்ஸ்அப் நிறுவனம் அதன் iOS அல்லது ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் புதிய அம்சங்களை அறிமுகம் செய்வதற்கு முன்பாக அவற்றை, வாட்ஸ்அப் பீட்டா (WhatsApp Beta) உருவாக்கத்திற்கு அனுப்பி சோதனை செய்து பார்ப்பதை ஒரு பழக்கமாகவும், அதையே ஒரு வழக்கமாகவும் வாட்ஸ்அப் வைத்துள்ளது என்பதே உண்மை. புதிய அம்சங்களைத் தொடர்ந்து சோதனை செய்து வரும் வாட்ஸ்அப், இப்போது புது ஸ்டேட்டஸ் அம்சத்தைச் சோதனை செய்கிறது.

வாட்ஸ்அப் வாய்ஸ் ஸ்டேட்டஸ்

‘வாட்ஸ்அப் வாய்ஸ் ஸ்டேட்டஸ்’ அம்சம் நிறுவனம் அதன் iOS பீட்டா கட்டமைப்பில் ஒரு சுவாரஸ்யமான புதிய அம்சத்தைக் கொண்டு வருவதில் வேலை செய்து வருவதாகத் தெரிகிறது. சமீபத்திய iOS பீட்டா அப்டேட்டில் (WhatsApp iOS Beta Update) இந்த அம்சத்தைக் கண்டறிந்ததாக WABetaInfo தெரிவித்துள்ளது. வாட்ஸ்அப் ஆனது, அதன் பயன்பாட்டில் 30 வினாடிகள் வரையிலான வாய்ஸ் ஸ்டேட்டஸ் (WhatsApp Voice Status) என்ற விருப்பத்தைப் பதிவிட அனுமதிப்பதாக ஸ்க்ரீன்ஷாட் விபரங்கள் காண்பிக்கிறது.

எங்கு வருகிறது?

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பார்க்கும் பிற பயனர்கள், இந்த வாய்ஸ் ஸ்டேட்டஸ்களை கீழ் வலது மூலையில் உள்ள மைக்ரோஃபோன் ஐகானை கிளிக் செய்து பார்க்க முடியும். இது ஒரு தனிப்பட்ட சாட் மற்றும் குரூப் சாட் பாக்ஸ்களில் பார்ப்பது போன்றது என்பது குறிப்பிடத்தக்கது. வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் இப்போது வரை பொதுவாக வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களைக் ஆதரிக்கிறது.

யாருக்கெல்லாம் கிடைக்கிறது?

ஆனால், நிறுவனம் வருங்காலத்தில், மற்றொரு வடிவமான ஆடியோ தரவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து, வாட்ஸ்அப் வாய்ஸ் ஸ்டேட்டஸ் என்ற அம்சத்தைக் கொண்டு வரத் திட்டமிடுகிறது என்பது இதன் மூலம் தெளிவாகியுள்ளது. இப்போதைக்கு, பீட்டா திட்டத்தில் நுழைந்த தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு மட்டுமே இந்த பீட்டா அம்சம் கிடைக்கிறது.

24 மணிநேரம்

பொதுவாக, ஸ்டேட்டஸ் அப்டேட்கள் பயனரின் ‘ஸ்டேட்டஸ்’ டேப் பகுதியில் காண்பிக்கப்படும். 24 மணிநேரம் கழித்து தானாக அழிந்துவிடும் தன்மை கொண்ட இந்த வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் ஏற்கனவே மிகவும் பிரபலமாக இருக்கும் நிலையில், வாட்ஸ்அப் நிறுவனம் புதிதாக வாய்ஸ் ஸ்டேட்டஸ் அம்சத்தை அறிமுகம் செய்யவிருப்பது பெரியளவு மாற்றத்தை மேற்கொள்ளுமா என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
வாட்ஸ்அப் வாய்ஸ் ஸ்டேட்டஸ் அப்டேட்டும் கூட 24 மணி நேர காலக்கெடுவுடம் வரும் என்று எதிர்பார்க்கலாம். இந்த அம்சம் எப்போது எல்லோருக்கும் கிடைக்கும் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. இப்போதைக்கு இந்த அம்சம் ஆண்ட்ராய்டு பீட்டா ஆப் பதிப்பு 2.22.21.5 இல் கிடைக்கிறது.