இந்தியாவுக்கு எப்போ வரும் 5G?

இந்தியாவில் 5ஜி சேவை விரைவில் அறிமுகம் ஆகுமா? அல்லது 5ஜி சேவை அறிமுகமாக இன்னும் சில காலம் ஆகுமா என்பது தான் மக்களின் கேள்வியாக உள்ளது.
இதே போல், ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்களில் எந்த நிறுவனம் முதலில் 5ஜி சேவை அறிமுகம் செய்யும் என்ற எதிர்பார்ப்பும் கிளம்பியுள்ளது. ஆனால் இந்த கேள்விகளுக்கு தற்போது திட்டவட்டமாக பதில் இல்லை என்றாலும் ஒரு சில விவரங்கள் தெரியவந்துள்ளன.

இந்த ஆண்டு (2022) இறுதிக்குள் 5ஜி சேவை அறிமுகமாகும் என்று தொலைத்தொடர்பு துறை முன்பு கூறியது. மத்திய தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ் ஏற்கனவே தெரிவித்த தகவலின்படி, இந்த ஆண்டு 5ஜி சேவை துவங்கப்படும். பின்பு இந்த 5ஜி சேவையை வரும் 2023 மார்ச்-இல்முழுமையாக பயன்படுத்த முடியும் என்று தெரிவித்தார்.

5ஜி தொழில்நுட்பம்

நம் நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 4ஜி, 5ஜி தொழில்நுட்பம் புழக்கத்துக்கு வரவேண்டும் என்பது பிரதமரின் கனவு. அதன்படி இந்தியாவின் தொழில்நுட்பத்தில் 5ஜி தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார் அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ் . பின்பு இந்த தொழில்நுட்ப புரட்சிகளைக் கொண்டு நாம் உலகை வெல்ல வேண்டும் என்றார் அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ்.

5G முதலில் வரும் 13 இந்திய நகரங்கள்

டெல்லி, குருகிராம், பெங்களூரு, கொல்கத்தா, சண்டிகர், ஜாம்நகர், அகமதாபாத், சென்னை, ஹைதராபாத், லக்னோ, புனே மற்றும் காந்திநகர் உள்ளிட்ட 13 இந்திய நகரங்களில் முதலில் 5ஜி சேவை தொடங்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5ஜி சோதனை

2021-ம் ஆண்டு முதல் வோடபோன் ஐடியா, ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பல தனியார் நிறுவனங்களுடன் இணைந்து 5ஜி சோதனைகளை நடத்தி இருக்கின்றன. பின்பு இந்நிறுவனங்கள் ஏற்கனவே டெல்லி, குருகிராம், பெங்களூரு, கொல்கத்தா, சண்டிகர், ஜாம்நகர், அகமதாபாத், சென்னை, ஹைதராபாத், லக்னோ, புனே மற்றும் காந்திநகர் ஆகிய இடங்களில் 5ஜி சோதனை தளங்களையும் அமைத்துள்ளன.

யார் முதலில் 5ஜி சேவையை தொடங்குவார்கள்?

ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்களில் எது முதலில் 5ஜி சேவைகளை அறிமுகம் செய்யும் என்பது தெளிவாக தெரியவில்லை. ஆனால் இந்த மூன்று நிறுவனங்களும் ஒரே நேரத்தில் சேவைகளை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்த மூன்று நிறுவனங்களும் கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் 5ஜி சோதனை நடத்தி வருகின்றன. எனவே ஒரே நேரத்தில் இந்நிறுவனங்கள் 5ஜி சேவையை அறிமுகம் செய்ய வாய்ப்பு உள்ளது.

ஜியோ VS ஏர்டெல்

ஏற்கனவே ஏர்டெல் நிறுவனத்தின் 5ஜி நெட்வொர்க் தயாராகிவிட்டதாகவும், ஏலம் முடிந்தவுடன் விரைவில் வெளியிடப்படும் என்றும் உறுதிப்படுத்தியுள்ளார் மிட்டல். மறுபுறம், நாடு முழுவதும் உள்ள 1000-க்கும் மேற்பட்ட முக்கிய நகரங்களுக்கு 5ஜி கவரேஜ் திட்டத்தை முடித்துள்ளதாக ஜியோ நிறுவனமும் கூறியுள்ளது.

5ஜி ஏலம்

அதேபோல் 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் தற்போது நடைபெற்று வருகிறது. ஏலம் நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில் முதல் நாளில் ஒரு லட்சத்து 45 ஆயிரம் கோடிக்கு ஏலம் போனது. பின்பு நேற்றைய 2-வது நாளில் நாளில் 4 ஆயிரம் கோடிக்கு ஏலம் போனதாக தகவல்கள் வெளிவந்தன. எனவே முதல் இரண்டு நாட்களில் மொத்தம் ரூ.1,49,454 கோடி அளவுக்கு ஏலம் போயுள்ளது. பின்பு 3வது நாளாக இன்றும் ஏலம் தொடர்ந்து வருகிறது.

பிஎஸ்என்எல்

தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 5ஜி சேவையை அறிமுகம் செய்ய தயாராகி வரும் நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவை அறிமுகம் செய்ய இருக்கிறது. ஏற்கனவே வெளிவந்த தகவலின்படி, அடுத்த ஆண்டு துவக்கத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையை அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.