டாடா டிகோர் இவி எலக்ட்ரிக் காரின் புதிய 2022 மாடல் வெளியானது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம், டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரின் மேம்படுத்தப்பட்ட பதிப்பை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இதன் விலை, வசதிகள் மற்றும் மைலேஜ் போன்ற தகவல்களை இப்போது பார்க்கலாம்.

ஏற்கனவே இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் (Tata Tigor EV) மிகவும் பிரபலமாக இருக்கிறது. இதன் அப்டேட் செய்யப்பட்ட 2022 மாடலை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது விற்பனைக்கு கொண்டு வந்து இருக்கிறது.

டிரைவிங் ரேஞ்ச்

இந்த புதிய மாடலில் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கூடுதல் வசதிகளும் (Features) வழங்கப்பட்டுள்ளன. 2022 டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரில், 74 பிஹெச்பி மற்றும் 170 என்எம் பவர் அவுட்புட்டை கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. அத்துடன் 26 kWh பேட்டரி தொகுப்பும் வழங்கப்பட்டுள்ளது. பழைய மாடலிலும் இதே பேட்டரி தொகுப்புதான் பொருத்தப்பட்டிருந்தது. ஆனால் இம்முறை இந்த பேட்டரி தொகுப்பின் டிரைவிங் ரேஞ்ச் 315 கிலோ மீட்டர்கள் என டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. இது அராய் (ARAI) அமைப்பு சான்று வழங்கிய டிரைவிங் ரேஞ்ச் ஆகும்.

புதிய வசதிகள்

இது முந்தைய மாடலின் டிரைவிங் ரேஞ்ச் உடன் ஒப்பிடும்போது, இது 9 கிலோ மீட்டர்கள் அதிகம் ஆகும். பழைய டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரின் டிரைவிங் ரேஞ்ச் 306 கிலோ மீட்டர்கள் மட்டுமே. டிரைவிங் ரேஞ்ச் அதிகரிக்கப்பட்டுள்ள அதே நேரத்தில், மழை வந்தால் தானாக இயங்க கூடிய வைப்பர்கள், ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்கள், க்ரூஸ் கண்ட்ரோல், லெதரேட் அப்ஹோல்ஸ்ட்ரி மற்றும் லெதர் சுற்றப்பட்ட ஸ்டியரிங் வீல் ஆகிய வசதிகள் புதிதாகவும் வழங்கப்பட்டுள்ளன.

புதிய நிறம்

அத்துடன் ‘மேக்னடிக் ரெட்’ என்ற புதிய கலர் ஆப்ஷனும் 2022 டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரில் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே புதிய டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் மதிப்பு வாய்ந்த தேர்வாக இருக்கும். இதுதவிர டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ‘ZConnect’ கனெக்டட் கார் தொழில்நுட்பம், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் டயர் பஞ்சர் ரிப்பேர் கிட் ஆகிய அம்சங்களும் புதிய டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரில் இடம்பெற்றுள்ளன.

விலை

2022 டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் மொத்தம் 4 வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கும். இதன் விலை 12.49 லட்ச ரூபாயில் இருந்து தொடங்குகிறது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். அத்துடன் இது ஆரம்ப நிலை XE வேரியண்ட்டின் விலை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில் இந்த காரின் XT வேரியண்ட்டின் விலை 12.99 லட்ச ரூபாயாகவும், XZ+ வேரியண்ட்டின் விலை 13.49 லட்ச ரூபாயாகவும், XZ+ Lux வேரியண்ட்டின் விலை 13.75 லட்ச ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவையும் எக்ஸ் ஷோரூம் விலைதான். இந்த விலைக்கு புதிய டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் மிகச்சிறந்த தேர்வாக கருதப்படுகிறது.

2022 டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் இந்திய சந்தையில் வெகு விரைவில் விற்பனைக்கு வரும் என ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்புகளை பொய் ஆக்காமல் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டிகோர் எலெக்ட்ரிக் காரை பல்வேறு விதங்களிலும் மேம்படுத்தி விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதால், 2022 டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் விற்பனையில் சாதிப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது.